Published:Updated:

மாணவர்களுக்கு சூடு வைத்த விவகாரம்; ஆசிரியையின் ஜாமீன் மனு தள்ளுபடி!

Vikatan Correspondent
மாணவர்களுக்கு சூடு வைத்த விவகாரம்; ஆசிரியையின் ஜாமீன் மனு தள்ளுபடி!
மாணவர்களுக்கு சூடு வைத்த விவகாரம்; ஆசிரியையின் ஜாமீன் மனு தள்ளுபடி!

விழுப்புரம்: சரியாக படிக்கவில்லை என கூறி பள்ளி மாணவர்களுக்கு கற்பூரத்தால் சூடுவைத்த ஆசிரியை கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்ட உளுந்துார் பேட்டை ஆசிரியையின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தது உளுந்துார்பேட்டை நீதிமன்றம்.

விழுப்புரம் மாவட்டம்,  உளுந்தூர்பேட்டை அருகே ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் உதவி ஆசிரியையாக பணிபுரிந்துவந்த வைஜெயந்திமாலா என்பவர் மாணவர்கள் சிலர் சரியாக படிக்கவில்லை எனக் கூறி அவர்களை கண்டித்ததுடன், அனிதா (10), புகழேந்தி (10), ராஜசேகரன் (9), சுப்புலட்சுமி (9), கவுசல்யா (9), பிரீத்தா (9), அரிகிருஷ்ணன் (9), சந்தோஷ்ராஜ் (9) ஆகிய 8 பேரின் கால்களில் சூடு வைத்ததாக கூறப்படுகிறது.

அப்போது மாணவர்களை சத்தம் போடக்கூடாது, இதுபற்றி வெளியில் யாரிடமும் சொல்லக்கூடாது என்றும் எச்சரித்துள்ளார். வலி தாங்கமுடியாத அந்த மாணவர்கள் தங்களது பெற்றோர்களிடம் நடந்ததை தெரிவித்தனர். அதிர்ச்சியடைந்த பெற்றோர் மற்றும் கிராம மக்கள் பள்ளியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

விசாரணையில் மாணவர்களுக்கு தீக்காயங்கள் இருப்பது உறுதி செய்யப்பட்டதையடுத்து பள்ளி உதவி ஆசிரியை வைஜெயந்திமாலா, பள்ளி தலைமை ஆசிரியர் வரதராஜன் ஆகியோர் தற்காலிகமாக பணி இடைநீக்கம் செய்யப்பட்டனர்.

மேலும், சந்தோஷ்ராஜ் என்ற மாணவனின் உறவினர் கொடுத்த புகாரின்பேரில் சிறுவர்களை கொடுமைப்படுத்துதல், கொடுங்காயம் ஏற்படுத்துதல் ஆகிய 2 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து ஆசிரியை வைஜெயந்திமாலாவை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில் இன்று ஆசிரியை வைஜெயந்திமாலாவின் ஜாமீன் மனு உளுந்துார்பேட்டை நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள் அந்த மனுவை தள்ளுபடி செய்தனர்.