Published:Updated:

காட்டுமன்னார்கோயில்: பல அடி தூரம் தூக்கி வீசப்பட்ட உடல்கள்! - பட்டாசு ஆலை விபத்தில் 7 பெண்கள் பலி

தனியார் பட்டாசு தொழிற்சாலை விபத்து
தனியார் பட்டாசு தொழிற்சாலை விபத்து

கடலூர், காட்டுமன்னார்கோயிலிலுள்ள தனியார் பட்டாசு தயாரிக்கும் தொழிற்சாலை ஒன்றில் ஏற்பட்ட வெடிவிபத்தில், ஏழு பெண் தொழிலாளர்கள் உடல் சிதறி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

கடலூர் மாவட்டம், காட்டுமன்னார்கோயில் அடுத்திருக்கும் குருங்குடி கிராமத்தில் சின்னதுரை என்பவரின் மனைவி காந்திமதிக்குச் சொந்தமான பட்டாசு தயாரிக்கும் தொழிற்சாலை ஒன்று செயல்பட்டுவருகிறது. கோயில் திருவிழாக்களுக்காக வாணவெடிகள், நாட்டு வெடிகள் செய்யும் இந்தத் தொழிற்சாலையில், தீபாவளிக்காகப் பட்டாசுகள் தயாரிக்கும்ம் பணி நடைப்பெற்றுவந்தது.

தூக்கி வீசப்பட்ட உடல்
தூக்கி வீசப்பட்ட உடல்

வழக்கம்போல இன்று காலையில் அதே பகுதியைச் சேர்ந்த ஒன்பது பெண் பணியாளர்கள் பட்டாசு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார்கள். அப்போது இன்று காலை 11 மணிக்கு பயங்கரச் சத்தத்துடன் ஏற்பட்ட வெடி விபத்தில் ஒன்பது பெண்களும் பல அடி தூரத்தில் தூக்கி வீசப்பட்டார்கள். அதில் காந்திமதி (55), பாப்பாத்தி (50), லதா (42), மலர்க்கொடி (65), சித்ரா (45) உள்ளிட்ட ஐந்து பெண்கள் உடல் சிதறி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்கள். இவர்களின் உடல்கள் பாகங்கள் சிதறிய நிலையில் வயல்வெளிகளிலும், அருகிலுள்ள ஏரியிலும் தூக்கி வீசப்பட்டிருந்தன.

ரத்தினாம்பாள், தேன்மொழி, அனிதா, ருக்மணி உள்ளிட்ட நான்கு பெண்கள் படுகாயங்களுடன் காட்டுமன்னார்கோயில் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் ரத்தினாம்பாள் (60), ருக்மணி இருவரும் மருத்துவமனையில் உயிரிழந்தனர். சம்பவ இடத்துக்கு விரைந்த காவல்துறையினர் உயிரிழந்தவர்களின் உடல்களைக் கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

கதறி அழும் உறவினர்கள்
கதறி அழும் உறவினர்கள்

இந்த விபத்தால் ஏற்பட்ட சத்தம் சுமார் 5 கிலோமீட்டர் தூரம் வரை கேட்டிருக்கிறது. தொழிற்சாலையின் கட்டடங்கள் தரைமட்டமானதுடன், உடைந்த சுவர்கள் மற்றும் அவற்றிலிருந்த கற்கள் பல மீட்டர் தூரத்துக்குத் தூக்கி வீசப்பட்டன.

சத்தத்தைக் கேட்டு ஓடிச் சென்ற கிராமத்து மக்கள் உயிரிழந்து கிடந்த தங்களின் உறவினர்களைப் பார்த்துக் கதறி அழுதனர். மருத்துவமனையில் சிகிச்சையிலிருக்கும் இருவரின் உடல்நிலையும் கவலைக்கிடமாக இருப்பதால் உயிரிழப்புகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது.

நடுரோட்டில் வெடித்துச் சிதறிய பட்டாசு வேன்... சிதைந்த உடல்கள்!- செஞ்சியைப் பதற வைத்த விபத்து

1951-ம் வருடம் முதல் செயல்பட்டு வரும் இந்த பட்டாசு தொழிற்சாலையின் உரிமம், கடந்த 3 நாள்களுக்கு முன்பு சிதம்பரம் சார் ஆட்சியர் மதுபாலன் அவர்கள் மூலம் புதுப்பிக்கப்பட்டிருக்கிறது. விபத்துக்கான காரணம் குறித்து காவல்துறை ஆய்வு மேற்கொண்டு வருகிறது.

அடுத்த கட்டுரைக்கு