Published:Updated:

`வெடித்துச் சிதறிய பாய்லர்; தீயில் சிக்கிய 8 தொழிலாளர்கள்!’- பதறவைத்த நெய்வேலி தீ விபத்து

நெய்வேலி தீ விபத்து
நெய்வேலி தீ விபத்து

நெய்வேலி அனல்மின் நிலையத்தில் பாய்லர் வெடித்ததால் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 8 தொழிலாளர்கள் படுகாயமடைந்திருக்கும் நிலையில், தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

கடலூர் மாவட்டம், நெய்வேலியில் மத்திய அரசின் நெய்வேலி நிலக்கரி நிறுவனம் இயங்கி வருகின்றது. இங்கு அனல்மின் நிலையம் 1 மற்றும் அதன் விரிவாக்கம், அனல்மின் நிலையம் 2 மற்றும் அதன் விரிவாக்கம், என்.என்.டி.பி (Neyveli New Thermal Power Project) என 5 அனல்மின் நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த 5 அனல்மின் நிலையங்களிலும் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.

இரண்டாவது அனல்மின் நிலையம்
இரண்டாவது அனல்மின் நிலையம்

இங்கிருக்கும் பாய்லர்களுக்கு நிலக்கரிகள் ஏற்றப்பட்டு மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வரும் பணி ஷிப்ட் முறையில் நடைபெறும்.

அதன்படி 2-வது அனல்மின் நிலையம் 1,470 மெகாவாட் திறன் கொண்டது. இங்கு சுமார் 3,000 தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இங்கிருக்கும் இருக்கும் பாய்லருக்கு நிலக்கரியை அனுப்பும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டு வந்தனர்.

நெய்வேலி தீ விபத்து
நெய்வேலி தீ விபத்து

அப்போது மாலை 4.30 மணிக்கு 6-வது யூனிட்டில் இருக்கும் பாய்லரில் இருந்து பெரிய தீப்பிழம்பு ஏற்பட்ட சில நிமிடங்களில், பயங்கர சத்தத்துடன் அது வெடித்திருக்கிறது.

தொடர்ந்து அங்கிருந்த தொழிலாளர்கள் அலறியடித்து ஓடினர். 6-வது யூனிட்டில் ஏற்பட்ட தீ 7-வது யூனிட்டில் இருக்கும் பாய்லரை நோக்கிச் பரவ ஆரம்பித்தது. ஆனால், உடனே அங்கு சென்ற தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்க போராடி வருகின்றனர்.

தீக்காயமடைந்த தொழிலாளர்களில் ஒருவர்
தீக்காயமடைந்த தொழிலாளர்களில் ஒருவர்

இந்தத் தீயணைப்பில் பாவாடை, சர்புதீன், அன்புராஜ், சண்முகம், ஜெயசங்கர், மணிகண்டன், பாலமுருகன், சண்முகம் என இதுவரை 8 தொழிலாளர்கள் படுகாயமடைந்ததாகக் கூறப்படுகிறது. அவர்கள் அனைவரும், நெய்வேலி மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

ஆனால், 8 பேருக்கும் தீக்காயம் பலமாக இருப்பதால் மேல் சிகிச்சைக்காக அவர்கள் அனைவரும் திருச்சி காவேரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டிருக்கின்றனர். உடலின் மேல் தோல்கள் கருகித் தொங்கிய நிலையில் இருந்த தொழிலாளர்களை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும்போது,`ஐயோ எரியுது’ என்று அவர்கள் வலியில் துடிக்கும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி பார்ப்பவர்களைப் பதற வைத்தன.

நெய்வேலி நிலக்கரி நிறுவனம்
நெய்வேலி நிலக்கரி நிறுவனம்

அங்கிருந்த தொழிலாளர்கள் இதுகுறித்து பேசும்போது, ``அளவுக்கு அதிகமான நிலக்கரிகளை பாய்லருக்குள் அனுப்பியதால்தான் இந்த விபத்து ஏற்பட்டிருக்கிறது. நீண்ட காலங்கள் அனல்மின் நிலையங்களின் செயல்பாடுகளைப் படிப்படியாகக் குறைத்து, அதனை நிரந்தரமாக மூடியிருக்க வேண்டும். ஆனால், அப்படிச் செய்யாமல் அதிலும் மின் உற்பத்தியை மேற்கொண்டதால்தான் இந்த விபத்துக்குக் காரணம்” என்கின்றனர்.

இந்த அனல்மின் நிலையத்தின் இதே பிரிவில் கடந்த ஆண்டும் இதேபோன்று ஏற்பட்ட தீ விபத்தில் 4 பேர் படுகாயமடைந்த நிலையில் ஒருவர் உயிரிழந்தார்.

அடுத்த கட்டுரைக்கு