Published:Updated:

தெலங்கானா: எலெக்ட்ரிக் பைக் ஷோரூமிலிருந்து பரவிய தீ... சென்னையைச் சேர்ந்தவர் உட்பட 8 பேர் பலி!

தீ விபத்தில் எட்டுப் பேர் உயிரிழந்தனர். ( ட்விட்டர் )

தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்திலுள்ள ஹோட்டலில் ஏற்பட்ட தீ விபத்தில் எட்டுப் பேர் உயிரிழந்தனர்.

தெலங்கானா: எலெக்ட்ரிக் பைக் ஷோரூமிலிருந்து பரவிய தீ... சென்னையைச் சேர்ந்தவர் உட்பட 8 பேர் பலி!

தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்திலுள்ள ஹோட்டலில் ஏற்பட்ட தீ விபத்தில் எட்டுப் பேர் உயிரிழந்தனர்.

Published:Updated:
தீ விபத்தில் எட்டுப் பேர் உயிரிழந்தனர். ( ட்விட்டர் )

தெலங்கானா மாநிலம், ஹைதராபாத்தில் ரூபி பிரைட் என்ற சொகுசு ஹோட்டலின் தரைத்தளத்தில் எலெக்ட்ரிக் பைக் ஷோரூம் இயங்கிவருகிறது. இந்த நிலையில் கடந்த திங்கள்கிழமை இரவு கட்டடத்தின் தரைத்தளத்தில் அமைந்துள்ள இ-பைக் ஷோரூமில் இரவு 9:20 மணியளவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டிருக்கிறது. இந்த விபத்தில் எட்டுப் பேர் உயிரிழந்ததாகவும், பலருக்குத் தீக்காயம் ஏற்பட்டிருப்பதாகவும் தகவல் வெளியாகியிருக்கிறது. பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

காயமடைந்தவர்கள் காந்தி மருத்துவமனை மற்றும் யசோதா மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டனர். ஹோட்டலில் 23 அறைகள் இருக்கின்றன. தீ விபத்து ஏற்பட்டபோது தோராயமாக 50 சதவிகித அறைகளில் ஆட்கள் இருந்திருக்கின்றனர். இந்த விபத்து தொடர்பாக ஹைதராபாத் போலீஸ் கமிஷனர் சி.வி.ஆனந்த், ``ரூபி மோட்டார்ஸ் ஷோரூமில் வைக்கப்பட்டிருந்த இ-பைக் அல்லது ஜெனரேட்டர் வெடித்து தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

தீ படிக்கட்டுகள் வழியே பரவி பாதாள அறை, தரை, கட்டடத்தின் முதல் மற்றும் இரண்டாவது தளங்களைச் சூழ்ந்திருக்கிறது. தீயைவிட, புகைதான் உள்ளிருந்தவர்களைத் திணறடித்திருக்கிறது. உடனே, தீயணைப்புத்துறை அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து மீட்புப் பணிகளைத் தொடங்கினர். சில மணி நேரங்களுக்குப் பிறகே அடர்ந்த புகை வெளியேறியது. அருகிலிருந்த சில உள்ளூர் மக்களும் சேர்ந்து ஹோட்டலின் உள்ளே இருந்தவர்களை மீட்க உதவினார்கள்" எனத் தெரிவித்திருக்கிறார்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer
தீ விபத்து
தீ விபத்து
ட்விட்டர்

அமைச்சர் தலசானி ஸ்ரீனிவாஸ் யாதவ் சம்பவ இடத்துக்கு விரைந்து மீட்புப் பணிகளை மேற்பார்வையிட்டார். அதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், "மீட்புப்பணிகள் நடைபெற்றுவருகின்றன. வெடிப்பு மற்றும் தீ விபத்துக்கு உண்மையில் என்ன காரணம் என்பது விசாரணையில் தெரியவரும்" என்று தெரிவித்திருக்கிறார்.

இந்த தீ விபத்தில் இறந்தவர்கள் டெல்லி, சென்னை, விஜயவாடாவைச் சேர்ந்தவர்கள் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.

இந்த நிலையில் பிரதமர் மோடி, ``தெலங்கானா மாநிலம், ஹைதராபாத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் மக்கள் உயிரிழந்த தகவல் வருத்தமளிக்கிறது. உயிரிழந்த குடும்பங்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டுகிறேன். இறந்த ஒவ்வொருவரின் உறவினர்களுக்கும் பிரதமர் நிவாரண நிதியிலிருந்து ரூ.2 லட்சம் வழங்கப்படும். காயமடைந்தவர்களுக்கு ரூ.50,000 வழங்கப்படும்” எனத் தெரிவித்திருக்கிறார்