Published:Updated:

`கண்ணிமைக்கும் நேரத்துல எல்லாம் முடிஞ்சிடுச்சு!'-8பேர் பலியான விபத்தில் உயிர் பிழைத்தவர்கள் உருக்கம்

rescue operation
rescue operation

கிணற்றில் லாரி விழுந்து ஏற்பட்ட விபத்தில் உயிருக்குப் போராடியவர்களைக் காப்பாற்ற முடியவில்லை. சிலர் அசைவில்லாமல் கிடந்தார்கள்.

திருச்சி மாவட்டம், முசிறியை அடுத்துள்ளது பேரூர் கிராமம். இந்த ஊரைச் சேர்ந்தவர் குணசீலன். ஓய்வுபெற்ற சிறைத்துறை பணியாளரான இவருக்கு எழிலரசி என்கிற மனைவியும் சதீஷ்குமார் என்கிற மகனும் உள்ளனர். தனியார் நிறுவனத்தில் பணியாற்றும் சதீஷ்குமாருக்கும் துறையூரை அடுத்த உப்பிலியபுரம் பகுதியில் உள்ள எஸ்.என்.புதூரைச் சேர்ந்த சுசீலாவுக்கும் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.

rescue operation
rescue operation

இந்தநிலையில், சுசீலாவின் சொந்த ஊரான எஸ்.என்.புதூரில் உள்ள அங்காயி அம்மன் கோயிலில் நடந்த திருவிழாவுக்காக தனது சொந்த பந்தங்களுக்கு அழைப்பு விடுத்தனர். திருவிழாவுக்கு சதீஷ்குமாரும் சுசீலாவும் முன்பாகவே சென்றுவிட, அவரின் தந்தை குணசீலன், போரூர் மற்றும் கட்டப்பள்ளி ஆகிய ஊர்களில் உள்ள தனது உறவினர்களை அழைத்துக்கொண்டு டாடா ஏஸ் வாகனத்தில் கிளம்பினார்.

வாகனத்தை இளையராஜா என்பவர் ஓட்ட, குணசீலன் மற்றும் எழிலரசி ஆகியோர் முன்புறம் அமர்ந்தனர். பின்புறம் சுமார் 16 பேர் அமர்ந்திருந்தனர். வாகனம் துறையூரை அடுத்த திருமனூர் - எரகுடி அருகே சென்றுகொண்டிருந்தது. அப்போது திடீரென டயர் வெடித்ததால், ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து வாகனம் தாறுமாறாக ஓடியது. அப்போது எதிரில் தாத்தையங்கார் பேட்டை செல்வதற்காக தனியார் பேருந்து எதிரில் வரவே, வாகனத்தில் இருந்தவர்கள் அதிர்ச்சியில் அலறினர். சத்தம் கேட்ட பேருந்து ஓட்டுநர் உடனடியாக பேருந்தை நிறுத்தினார்.

mini lorry accident
mini lorry accident

இதனைக் கண்ட ஓட்டுநர் இளையராஜா, பேருந்து மீது மோதாமல் இருக்க, வாகனத்தை வேறுபுறமாக திசைதிருப்ப முயற்சி செய்திருக்கிறார். இதனால் அருகில் இருந்த எரகுடி மாணிக்கம் என்பவரின் 100 அடி ஆழ கிணற்றுக்குள் வாகனம் பாய்ந்தது. அதைப் பார்த்த பேருந்து பயணிகள் மற்றும் ஓட்டுநர் ஆகியோர் அலறியடித்துக்கொண்டு ஓடினர்.

கண்ணிமைக்கும் நேரத்தில், மினி லாரி கிணற்றுக்குள் விழவே, வாகனத்தில் இருந்த 20 பேரும் உயிருக்குப் போராடினர். அதையடுத்து உப்பிலியபுரம் போலீஸாருக்குத் தகவல் கொடுக்கவே, விரைந்து வந்த போலீஸார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் பாதிக்கப்பட்டவர்களை மீட்டனர். தகவலறிந்த அப்பகுதி பொதுமக்கள் திரண்டு வந்தனர். அப்பகுதி முழுக்க மரண ஓலமும், அலறல் சத்தமுமாக இருந்தது.

rescue operation
rescue operation

கிணற்றில் அதிகளவு தண்ணீர் இல்லாமல், சேறும்-சகதியுமாக இருந்தது. இதனால் நூறடி ஆழம் உள்ள கிணற்றில் உயிருக்குப் போராடியவர்களை மீட்பதற்காகத் தீயணைப்பு வீரர்கள் கடுமையாகப் போராடினர். கயிறு கட்டி உள்ளே இறங்கினர்.

விபத்தில் குணசீலன், எழிலரசி, குமாரத்தி, கோமதி, கயல்விழி, கயல்விழியின் மகள் சஞ்சனா, இளங்கோவனின் குழந்தைகளான யமுனா மற்றும் சரவணகுமார் ஆகியோர் சம்பவ இடத்திலேயே பலியாகி, ரத்தவெள்ளத்தில் மீட்கப்பட்டனர். ஓட்டுநர் இளையராஜா உள்ளிட்ட 9 பேர் படுகாயமடைந்த நிலையில் மீட்கப்பட்டு துறையூர் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

rescue operation
rescue operation

இறந்தவர்களில் மூன்று பேர் குழந்தைகள். அவர்களது உடல்களைத் தீயணைப்பு வீரர்கள் மீட்கும்போது, ``பிஞ்சுக் குழந்தைகளையும் பறித்துக்கொண்டாயே ஆண்டவா, உனக்கு மனசே இல்லையா” என அப்பகுதி மக்கள் தலையிலடித்துக்கொண்டு கதறினர். குறிப்பாகக் குணசீலன் மற்றும் எழிலரசி ஆகியோரின் உடல்களைப் பார்த்து அவரின் மகன் சதீஷ்குமார் மற்றும் மருமகள் சுசீலா ஆகியோர் கதறி அழுத காட்சி அனைவரையும் கண்கலங்க வைத்தது.

சம்பவ இடத்தை மாவட்ட ஆட்சியர் சிவராசு, திருச்சி எஸ்.பி ஜியா உல் ஹக் ஆகியோர் நேரில் வந்து பார்வையிட்டு, மீட்புப் பணிகளை துரிதப்படுத்தினர். ராட்சத கிரேன் மூலம், கிணற்றில் விழுந்து கிடந்த மினிலாரி வெளியே எடுக்கப்பட்டது. அடுத்து மருத்துவமனைக்குச் சென்று காயமடைந்தவர்களைச் சந்தித்து நலம் விசாரித்ததுடன், மருத்துவர்களை அழைத்து உரிய சிகிச்சை வழங்க அறிவுறுத்தினர்.

accident
accident

மேலும் திருச்சி மாவட்ட தீயணைப்புத்துறை அதிகாரி புளூகேண்டி, துறையூர் எம்.எல்.ஏ ஸ்டாலின் குமார், மண்ணச்சநல்லூர் எம்.எல்.ஏ பரமேஸ்வரி, முசிறி ஆர்டிஓ ரவிச்சந்திரன் ஆகியோர் நேரில் வந்து விசாரித்தனர்.

போலீஸாரின் முதல்கட்ட விசாரணையில், விபத்து நடந்த இடத்தில் இருந்த கிணற்றில் பாதுகாப்புத் தடுப்பு இல்லை என்றும், தகரத்தால் வேலி அமைக்கப்பட்டிருந்தது. சிமென்ட் தடுப்புச் சுவர் அமைத்திருந்தால் இதுபோன்ற விபத்து நடந்திருக்க வாய்ப்பில்லை. மேலும், விபத்துக்குள்ளான வாகனம் ஓட்டுநர் கட்டுப்பாடு இல்லாமல் இருந்த நிலையிலும் அதிவேகத்தில் இயக்கியது தெரியவந்துள்ளது.

உயிர் பிழைத்த சரஸ்வதி, ``ஊரில் இருந்து நல்லபடியா வந்துக்கிட்டு இருந்தோம். திடீரென வண்டி கட்டுப்பாட்டை இழந்து வேகமாகப் போய் கிணற்றில் விழுந்தது. கண்ணிமைக்கும் நேரத்தில் எல்லாம் முடிஞ்சு போச்சு.. லோடு ஆட்டோவின் உள்ளே கிடந்த நாங்கள். மீண்டு வருவோம்'னு நினைச்சுகூடப் பார்க்கல. கண்ணு முன்னால உயிருக்குப் போராடிய பூங்கொடி, சுகந்தன், யமுனா உள்ளிட்டோரைக் காப்பாத்த முடியல. சிலர் அசைவில்லாம கிடந்தாங்க.

அவங்களுக்கு மத்தியில நாங்க கிடந்தோம். யாராவது காப்பாத்த வரமாட்டாங்களான்னு கதறினோம். 3 மணி நேரம் உயிரைக் கையில பிடிச்சுகிட்டு இருந்தோம். கொஞ்ச நேரத்துக்கு முன்னால எங்ககிட்ட நல்லா பேசிட்டு வந்த இத்தனை பேர் மொத்தமாக செத்துப் போவாங்கன்னு நினைச்சுகூட பார்க்கல” எனக் கதறினார். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அடுத்த கட்டுரைக்கு