Published:Updated:

அதிக காற்றால் மூழ்கிய மீனவர்கள்.. பதறிய உறவினர்கள்!- புதியபடகு வாங்கச் சென்றவர்களுக்கு நேர்ந்த சோகம்

இரா.மோகன்
உ.பாண்டி

மல்லிப்பட்டினம் மீனவர்கள் மயக்க நிலையில் மிதந்துகொண்டிருந்த இருவரையும் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். சிகிச்சைக்குப் பின் மயக்கம் தெளிந்த இவர்கள் கடலில் மூழ்கிய மற்ற மீனவர்கள் குறித்து தகவல் தெரவித்துள்ளனர்.

missing fishermen
missing fishermen

புதிதாக வாங்கிய படகு காற்றின் வேகத்தில் சிக்கி கடலில் கவிழ்ந்தது. இந்தச் சம்பவத்தில் கடலூரில் வாங்கிய படகில் பயணித்த ராமேஸ்வரத்தைச் சேர்ந்த இரு மீனவர்கள் மீட்கப்பட்ட நிலையில் மேலும் 8 மீனவர்கள் நிலை என்னவென்று தெரியாததால் மீனவர்களின் குடும்பத்தினர் சோகத்தில் தவிக்கின்றனர்.

drowned boat
drowned boat

ராமேஸ்வரம் நடராஜபுரம் கிராமத்தைச் சேர்ந்த காந்தி என்பவருக்குப் புதிய நாட்டுப்படகு வாங்குவதற்காக கடந்த மாதம் 29-ம் தேதி 10 மீனவர்கள் கடலூர் சென்றனர். கடலூரில் எஞ்சின் பொருத்திய பைபர் படகினை வாங்கிய இவர்கள் நேற்று முன் தினம் (செப்-3) கடலூரிலிருந்து ராமேஸ்வரம் நோக்கி வந்து கொண்டிருந்தனர். அன்றைய தினம் பகல் 12 மணி அளவில் இவர்களது படகு புதுக்கோட்டை மாவட்டம் மல்லிப்பட்டினத்திலிருந்து 15 கடல் மைல் தொலைவில் வந்து கொண்டிருந்தது. அப்போது கடலில் வீசிய பலத்த காற்றினால் படகு கடலில் மூழ்கியது.

இதனால் படகில் இருந்த ராமேஸ்வரத்தைச் சேர்ந்த மீனவர்கள் முனியசாமி (47), ரஞ்சித்குமார் (23), மதன் (26), இலங்கேஸ்வரன் (20), தரக்குடியான் (25), காந்தகுமார் (23), செந்தில்வேல் (31), முனீஸ்வரன் (24), உமாகாந்த் (19), காளிதாஸ் (19) ஆகிய பத்து மீனவர்களும் கடலில் மூழ்கி தத்தளித்தனர். இந்நிலையில் கடலில் மூழ்கிய மீனவர்களில் செந்தில்வேல் மற்றும் காளிதாஸ் ஆகிய இருவரும் கரைக்குச் சென்று உதவிக்கு ஆட்களை அழைத்து வர நீந்திச் சென்றனர். மற்ற மீனவர்கள் மிதவை மற்றும் டீசல் கேன்களைப் பிடித்தபடி கடலில் கிடந்துள்ளனர்.

rescued fishermen
rescued fishermen

இந்நிலையில் காற்றின் வேகத்திற்கு ஈடு கொடுத்து நீந்த முடியாத மீனவர்கள் செந்தில்வேலும், காளிதாஸும் அரைகுறை மயக்க நிலையில் கடலில் மிதந்தபடி இருந்துள்ளனர். நேற்று காலை மீன்பிடிக்கச் சென்ற மல்லிப்பட்டினம் மீனவர்கள் மயக்க நிலையில் மிதந்துகொண்டிருந்த இருவரையும் மீட்டு மல்லிப்பட்டினம் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். சிகிச்சைக்குப் பின் மயக்கம் தெளிந்த இவர்கள் கடலில் மூழ்கிய மற்ற மீனவர்கள் குறித்து தகவல் தெரிவித்துள்ளனர். இதையடுத்து ராமேஸ்வரத்தில் உள்ள மீனவர்களின் குடும்பத்தினர் மற்றும் மீன் துறை அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதன் பின்னர் கடலில் மூழ்கிய மற்ற மீனவர்களை தேடும் பணியில் மல்லிப்பட்டினம் மீனவர்கள் ஈடுபட்டனர். இந்தத் தேடுதல் முயற்சியில் மூழ்கிய மீனவர்களைப் பற்றிய தகவல் எதுவும் தெரியாத நிலையில் கரை திரும்பினர்.

இதனால் அச்சமடைந்த மீனவர்களது உறவினர்கள் கடலில் மூழ்கிய மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி நேற்று ராமேஸ்வரம் வட்டாட்சியர் அலுவலகம் முன் திரண்டனர். மீனவர்களை மீட்க கடற்படை கப்பல் மற்றும் ஹெலிகாப்டர்களை அனுப்பக் கோரி சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்த வட்டாட்சியர் அப்துல்ஜபார் மற்றும் மீன் துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததை தொடர்ந்து மறியலைக் கைவிட்டனர். அதிகாரிகள் உறுதியளித்து 2 மணி நேரத்திற்குப் பிறகும் கடலில் மூழ்கிய மீனவர்கள் குறித்து எந்தத் தகவலும் வராததால் மீனவர்கள், அனைத்துக் கட்சியினர் மற்றும் கடலில் மூழ்கிய மீனவர்களின் உறவினர்கள் மீண்டும் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

protest at rameswaram
protest at rameswaram

சுமார் ஒரு மணி நேரம் சாலை மறியலில் ஈடுபட்டவர்களுடன் வருவாய் கோட்டாட்சியர் (பொறுப்பு) கோபு, டி.எஸ்.பி மகேஷ் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் இரவு நேரம் என்பதாலும், கடலில் காற்றின் வேகம் அதிகமாக இருப்பதாலும் தேடுதல் நடவடிக்கை தடைபட்டிருப்பதாகவும், மீண்டும் இன்று காலையில் தேடுதல் நடவடிக்கை தீவிரப்படுத்தப்படும் எனவும் உறுதி அளிக்கப்பட்டது. மேலும் மண்டபத்திலிருந்து கடலோரக் காவல்படை கப்பல் மற்றும் காரைக்காலிலிருந்து ஹெலிகாப்டர்கள் மூலம் தேடுதல் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உறுதியளிக்கப்பட்டது. இதையடுத்து மீனவர்களின் சாலை மறியல் கைவிடப்பட்டது. ஆனாலும் கடலில் மூழ்கி மாயமான மீனவர்களின் குடும்பத்தினர் வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் கண்ணீருடன் காத்துக் கிடக்கின்றனர். இதனால் ராமேஸ்வரம் மீனவர்கள் மத்தியில் பதற்றம் நிலவுகிறது.