Published:Updated:

சென்னை புகாரி ஹோட்டல் மாடியில் திடீர் தீ விபத்து!

பரிசல் கிருஷ்ணா
சென்னை புகாரி ஹோட்டல் மாடியில் திடீர் தீ விபத்து!
சென்னை புகாரி ஹோட்டல் மாடியில் திடீர் தீ விபத்து!

சென்னை தி.நகரில் உள்ள புகாரி ஹோட்டலின் 3-வது மாடியில் இருக்கும் தனியார் நிறுவனத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தீயணைப்பு வீரர்கள் விரைந்து செயல்பட்டதால், பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

சென்னை தி.நகரில் இருந்த சென்னை சில்க்ஸில் ஏற்பட்ட தீ விபத்தில், அந்தக் கட்டடம் உருக்குலைந்துபோனது. இதனால், கட்டடம் இடிக்கப்பட்டது. இந்தத் தீவிபத்து பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், சென்னை தி.நகரில் உள்ள புகாரி ஹோட்டலின் மூன்றாவது மாடியில் இயங்கிவரும் தனியார் நிறுவனத்தில், இன்று பிற்பகலில் திடீரென ஏற்பட்ட தீ விபத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தி.நகரில் உள்ள ஏஜிஎஸ் தியேட்டர் அருகே, புகாரி ஹோட்டல் உள்ளது. இந்த ஹோட்டலின் மூன்றாவது மாடியில், லங்கோ இன்பாகோ லிமிடெட் நிறுவனம் செயல்பட்டுவருகிறது.

இந்த நிறுவனத்திலிருந்து புகை வருவதாக, தீயணைப்புத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அறைகள் முழுவதும் புகையால் சூழப்பட்டது. வாகனத்துடன் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தீயை அணைத்தனர். குளிர்தானப் பெட்டியில் ஏற்பட்ட மின்கசிவால் தீ விபத்து ஏற்பட்டதாக, தீயணைப்பு வீரர்கள் தெரிவித்தனர்.