Published:Updated:

`எஸ்கலேட்டரில் சிக்கிய மகன்; துரிதமாகச் செயல்பட்ட தாய்!' - அதிர்ச்சி கொடுத்த சென்னை துணிக்கடை

பொங்கல் பண்டிகைக்கு துணி எடுக்க மகனை அழைத்துக் கொண்டு கடைக்குச் சென்ற அம்மாவுக்கு அதிர்ச்சி காத்திருந்தது.

சென்னை வியாசர்பாடி கன்னிகாபுரம், எம்.எஸ்.முத்துநகரைச் சேர்ந்தவர் சசிகலா. இவரின் மகன் பாபு (13). இவர், வேப்பேரியில் உள்ள தனியார் பள்ளியில் 8-ம் வகுப்பு படித்துவருகிறார். பொங்கல் பண்டிகையொட்டி மகனை அழைத்துக்கொண்டு சென்னை புரசைவாக்கத்தில் உள்ள பிரபலமான துணிக் கடைக்கு சசிகலா சென்றார். துணி எடுப்பதற்காகக் கடையில் ஒரு தளத்திலிருந்து இன்னொரு தளத்துக்கு சசிகலாவும் பாபுவும் எஸ்கலேட்டரில் சென்றனர்.

எஸ்கலேட்டர்
எஸ்கலேட்டர்

8-வது மாடிக்கு எஸ்கலேட்டரில் சென்றபோது, பாபு திடீரென நிலைதடுமாறினார். அவரைப் பிடிக்க சசிகலா முயற்சி செய்தார். ஆனால், அதற்குள் எஸ்கலேட்டரின் படியில் பாபு விழுந்தார். அதைப் பார்த்த பொதுமக்களும் சசிகலாவும் சத்தம் போட்டனர். கீழே விழுந்த பாபுவின் தலை எஸ்கலேட்டரின் படிகளின் நடுவில் சிக்கிக் கொண்டது. அதனால் வலியில் அவர் துடித்தார்.

Vikatan

சத்தம் கேட்டு கடையின் ஊழியர்கள் அங்கு வந்தனர். அதற்குள் சுதாரித்த சசிகலா, எஸ்கலேட்டரை நிறுத்துங்கள் என்று சத்தம் போட்டார். உடனே எஸ்கலேட்டர் நிறுத்தப்பட்டது. கீழேவிழுந்த மகனை சசிகலா மற்றும் பொதுமக்கள் தூக்கினர். அப்போது எஸ்கலேட்டரின் படியில் பாபுவின் தலை சிக்கியதில் அவருக்கு காயம் ஏற்பட்டது. அடுத்து சில நிமிடங்களில் மகனை ஆட்டோவில் அழைத்துக்கொண்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை
கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை

சசிகலா துரிதமாகச் செயல்பட்டதால் அவரின் மகன் பாபு உயிர் பிழைத்துக்கொண்டார். இந்தச் சம்பவம் குறித்து வேப்பேரி போலீஸார் விசாரித்து வருகின்றனர். எஸ்கலேட்டரில் சென்றபோது பாபு எப்படி கீழே விழுந்தார் என்பதைக் கடையில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை போலீஸார் ஆய்வு செய்து வருகின்றனர். இந்தச் சம்பவத்தில் அந்தக் கடையில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு