Published:Updated:

100 அடி ஆழ கிணற்றில் விழுந்த மினி லாரி.. 8 பேர் பலி!- கோவில் பூஜைக்கு செல்லும்போது நேர்ந்த சோகம்

சி.ய.ஆனந்தகுமார்
தே.தீட்ஷித்

டயர் வெடித்து ஏற்பட்ட விபத்தில் கிணற்றில் பாய்ந்த மினிலாரியில் பயணித்த 8 பேர் பலியான சம்பவம் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

rescue operation
rescue operation

திருச்சி மாவட்டம், முசிறி அடுத்துள்ளது பேரூர் கிராமம். இந்த ஊரைச் சேர்ந்த பொதுமக்கள், துறையூர் அடுத்த எஸ்.என்.புதூர் எனும் கிராமத்திற்கு கோவில் பூஜை நிகழ்ச்சிக்காக டாடா ஏஸ் வாகனத்தில் சென்றனர். துறையூர் அடுத்துள்ள திருமனூர் எனும் கிராமத்தில் சென்றுக்கொண்டிருந்தபோது அந்த வாகனத்தின் டயர் வெடித்தது.

Thuraiyur accident place
Thuraiyur accident place

அடுத்து ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த வாகனம், அருகில் உள்ள கிணறு ஒன்றை நோக்கி பாய்ந்தது. அந்த கிணற்றின் அருகே தடுப்பு வேலி அமைக்கப்பட்டிருந்தும், அந்த இரும்புத் தடுப்பை உடைத்துக் கொண்டு வாகனம் கிணற்றுக்குள் பாய்ந்து விழுந்து விபத்துக்குள்ளானது.

கண்ணிமைக்கும் நேரத்தில், வாகனம் கிணற்றுக்குள் விழவே, லாரியில் இருந்த 22 பேரும் பலத்த காயத்துடன் கிணற்றில் விழுந்தனர். தகவலறிந்த அப்பகுதி பொதுமக்கள் மற்றும் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து, பாதிக்கப்பட்டவர்களை மீட்டு வருகின்றனர்.

Well
Well

இந்த விபத்தில் வாகனத்தில் இருந்த 22பேரில் 3 குழந்தைகள் உட்பட எட்டு பேர் பலியாகியுள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை கிணற்றுக்குள் பலத்த காயத்துடன் உயிருக்கு போராடிய 10பேரை மீட்கப்பட்டுள்ளனர். மீட்கப்பட்டவர்கள், துறையூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து மீட்புபணியில் துறையூர் தீயணைப்பு படையினர் மற்றும் காவல்துறையினர் பொதுமக்கள் ஆகியோர் ஈடுபட்டு வருகிறார்கள்.

பலியானவர்களில் பேரூரைச் சேர்ந்த குணசீலன், குமாரத்தி, கோமதி, கயல்விழி, எழிலரசி, கரண்குமார் சஞ்சனா உள்ளிட்டோர் உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது. விபத்தில் சிக்கிய மினி லாரியை கிரேன் உதவியுடன் மீட்கும்பணி நடந்து வருகிறது. மேலும் காயமடைந்தவர்களை கயிறு கட்டி வெளியே மீட்கும் பணிகள் தொடர்கிறது. மேலும் இறந்தவர்களின் உடலை மீட்கவும், பலத்த காயமடைந்தவர்களை மீட்கவும் தீயணைப்பு வீரர்கள் போராடி வருகிறார்கள்

Thuraiyur accident place
Thuraiyur accident place

கிணறு 100 அடி ஆழம் இருக்கும் என கூறப்பட்டுவருவதால், மீட்புப் பணிகளில் சிரமம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் திருச்சி எஸ்.பி ஜியா உல் ஹக் தலைமையிலான போலீஸார் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். இவ்வளவு பேர் படுகாயமடைந்துள்ளதாலும், உயிர் பலி அதிகமாகி வருவதாலும் திருச்சி துறையூர் பகுதிகளில் பதற்றம் நிலவுகிறது.