தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறு அருகேயுள்ள மருவூர் கொள்ளிடம் ஆற்றில், அரசு மணல் குவாரி செயல்பட்டு வருகிறது. இந்தக் குவாரியிலிருந்து தினமும் நூற்றுகணக்கான லாரிகளில் மணல் ஏற்றப்பட்டு பல பகுதிகளுக்கு எடுத்துச் செல்லப்படுகிறது. இந்த மணல் லாரிகள் அதிவேகமாகச் செல்வதாக பொதுமக்கள் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றனர்.

இந்த நிலையில், பட்டுக்கோட்டை பள்ளிக்கொண்டான் கிராமத்தைச் சேர்ந்த தங்கராஜ் மகன் வீரமணி (48) என்பவர் டிப்பர் லாரியில் குவாரியிலிருந்து மணல் ஏற்றிக்கொண்டு திருவையாறு வழியாக தஞ்சாவூர் நோக்கி வேகமாகச் சென்று கொண்டிருந்தார். நடுக்கடை மெயின்ரோட்டில் செல்லும்போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த மணல் லாரி, சாலையோரத்தில் நின்ற பெண் ஒருவர்மீது மோதி, அருகிலிருந்த டயர் கடைக்குள் மோதியது.

இதில் கடை அருகே நின்று கொண்டிருந்த நடுக்கடையைச் சேர்ந்த மீராமைதீன், ரெஜியாபேகம், முகமதுபந்தரைச் சேர்ந்த முகமதுரபீக், சாகுல்ஹமீது, ஈச்சங்குடியைச் சேர்ந்த செல்வம், லாரி டிரைவர் வீரமணி ஆகிய 6 பேருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. லாரி டிரைவர் வீரமணி லாரிக்குள்ளேயே சிக்கிக் கொண்டார். அவரை மீட்டு வெளியே எடுப்பதில் பெரும் சிரமம் ஏற்பட்டது.
பின்னர், ஜே.சி.பி இயந்திரம் மூலம் லாரியை உடைத்து டிரைவர் மீட்கப்பட்டார். காயமடைந்த 6 பேரையும் போலீஸார் 108 ஆம்புலன்ஸ் மூலம் திருவையாறு அரசு மருத்துவமனைக்கு முதலுதவி சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அவர்கள் மேல் சிகிச்சைக்காக தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதில் சிகிச்சை பலனளிக்காமல் ரெஜியாபேகம் உயிரிழந்தார்.

இது குறித்து திருவையாறு போலீஸார் வழக்கு பதிவுசெய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மணல் லாரி மோதி பெண் உயிரிழந்த சம்பவத்தால் நடுக்கடை பகுதி சோகத்தில் மூழ்கியது. தஞ்சாவூர்- திருவையாறு சாலை எப்போதும் போக்குவரத்து நெரிசலுடன் காணப்படும். அந்த சாலையில் மணல் ஏற்றிச் செல்லும் லாரிகள் அதிவேகமாகச் செல்வதால் மக்கள் அச்சத்துடனேயே சாலையில் செல்ல வேண்டிய சூழல் நிலவி வருகிறது. இனிமேலாவது மணல் லாரிகள் வேகமாகச் செல்வதை அதிகாரிகள் கண்காணித்து கட்டுப்படுத்த வேண்டும் என வலியுறுத்துகின்றனர் பகுதி மக்கள்.