Published:Updated:

ஆரணி: `தாய்-மகள் மரணம்!’ - சிலிண்டர் வெடி விபத்தில் பலி எண்ணிக்கை 5-ஆக உயர்வு

மீட்புப் பணி
மீட்புப் பணி

ஆரணியில், சிலிண்டர் வெடித்து வீடு தரைமட்டமான சம்பவத்தில், உயிரிழப்பு 5-ஆக அதிகரித்திருக்கிறது.

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி டவுன் புதுகாமூர் பகுதியைச் சேர்ந்தவர் மூதாட்டி முக்தாபாய். இவரின் வளர்ப்பு மகள் மீனா. கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று அதிகாலையில் காஸ் கசிவு காரணமாக, முக்தாபாயின் வீட்டில் பயங்கர சத்தத்துடன் சிலிண்டர் வெடித்தது.

தரைமட்டமான வீடு
தரைமட்டமான வீடு

இந்த விபத்தில், முக்தாபாயின் வீடு இடிந்து தரைமட்டமானது. இடிபாடுகளில் சிக்கியதில், முக்தாபாயின் வீட்டின் ஒரு பகுதியில் வாடகைக்குக் குடியிருந்த ஜானகிராமன் என்பவரின் மனைவி காமாட்சி, அவரின் இளைய மகன் ஹேமநாத் ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தனர்.

ஆரணி: வெடித்துச் சிதறிய சிலிண்டர்; தரைமட்டமான வீடு! - 3 பேர் பரிதாப பலி

அத்துடன், பக்கத்து வீட்டுச் சுவரும் இடிந்து விழுந்ததில், அந்த வீட்டில் வசித்த சந்திரா என்ற பெண்ணும் அதே இடத்தில் உயிரிழந்தார். முக்தாபாய், அவரது மகள் மீனா, வாடகைக்கு வசித்த ஜானகிராமன், இவரின் மூத்த மகன் சுரேஷ் ஆகிய நால்வரும் உயிருக்கு ஆபத்தான நிலையில் மீட்கப்பட்டு ஆரணி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

சோகமாகத் திரண்டிருந்த மக்கள்
சோகமாகத் திரண்டிருந்த மக்கள்

மேல் சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டனர். உயிரிழப்பு மூன்றாக இருந்த நிலையில், சிகிச்சை பெற்றுவந்த முக்தாபாயும், அவரது வளர்ப்பு மகள் மீனாவும் பரிதாபமாக இன்று மரணமடைந்தனர். இதனால், சிலிண்டர் வெடித்த விபத்தில் இறந்தோரின் எண்ணிக்கை 5-ஆக உயர்ந்திருக்கிறது.

அடுத்த கட்டுரைக்கு