ராணிப்பேட்டை மாவட்டம், நெமிலி கீழவீதி கிராமத்திலுள்ள திரௌபதி அம்மன், மண்டியம்மன் கோயிலில் நேற்றிரவு ‘மயிலார்’ திருவிழா நடைபெற்றது. தை மாத சிறப்பு வழிபாடுகளில் இந்தத் திருவிழாவும் ஒன்று. அதாவது, காணும் பொங்கல் விழா முடிந்த 6-வது நாள் அல்லது 8-வது நாளில் மயிலார் திருவிழா கொண்டாடப்படுவது வழக்கம். அதன்படி, கீழவீதி கிராமத்திலுள்ள அம்மன் கோயிலில் நடந்த விழாவிலும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

சில பக்தர்கள், முதுகில் அலகு குத்தி நேர்த்திக்கடன் செலுத்தினர். இன்னும் சில பக்தர்கள், இரவு 8:30 மணியளவில் மிக உயரமிருக்கும் கிரேன் இயந்திரத்தின் உதவியுடன் அந்தரத்தில் தொங்கியபடி வந்து சாமிக்கு மாலை அணிவிக்க முயன்றனர். மேடு பள்ளமான இடத்தில் கிரேன் சென்றதால், எதிர்பாராத விதமாக திடீரென கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் கீழவீதியைச் சேர்ந்த 40 வயதுடைய பூபாலன், 39 வயதாகும் முத்துக்குமார், 16 வயதாகும் ஜோதிபாபு ஆகிய மூவரும் நிகழ்விடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், எட்டு பேர் பலத்த காயமடைந்தனர். அவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு சிகிச்சைக்காக அரக்கோணம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

இவர்களில் இரண்டு பேர் மட்டும் மேல்சிகிச்சைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டனர். இந்த நிலையில், சிகிச்சை பலனின்றி சின்னசாமி என்பவர் மரணமடைந்திருக்கிறார். இதனால், உயிரிழப்பு நான்காக அதிகரித்திருக்கிறது. இதனிடையே, இந்த விபத்து தொடர்பான வீடியோ காட்சிகளும் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டுவருகிறது. கோயில் திருவிழாவில், நான்கு பேர் பலியான சம்பவம், நெமிலி பகுதி மக்களிடையே பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியிருக்கிறது.