Published:Updated:

`வழியில் மது விருந்து, உருக்குலைந்த கார்!'- பறிபாேன குமரி நண்பர்களின் உயிர்

குமரியில் இருந்து காரில் புறப்பட்ட நிலையில், வழியிலேயே பல இடங்களில் நிறுத்தி மது அருந்தியதாகக் கூறப்படுகிறது.

சாலை விபத்து
சாலை விபத்து

தூத்துக்குடி மாவட்டம், டி.சவேரியார்புரத்தைச் சேர்ந்தவர் சேவியர். அவர், தனது நண்பர்களான அருள்மாரி, நிக்கோலஸ், மரிய அந்தோணி என்ற பன்னீர்செல்வம் ஆகியோருடன் கன்னியாகுமரியில் தங்கியிருந்து மீன்பிடித் தொழில் செய்து வந்தார். ஞாயிற்றுக்கிழமை இரவு, அவர்கள் ஒரு காரில் குற்றாலத்துக்குச் செல்ல முடிவுசெய்துள்ளனர்.

மீட்புப் பணிகள்
மீட்புப் பணிகள்

குமரியில் இருந்து காரில் புறப்பட்ட நிலையில், வழியிலேயே பல இடங்களில் நிறுத்தி மது அருந்தியதாகக் கூறப்படுகிறது. காரை மாடசாமி என்பவர் ஓட்டியுள்ளார். மாடசாமியின் நண்பரான மாரியப்பன் என்பவரை முன்னீர்பள்ளத்தில் ஏற்றிக்கொண்டு அம்பாசமுத்திரம் வழியாகச் சென்ற அவர்களின் கார், பத்தமடை பகுதியில் நள்ளிர நேரத்தில் சென்றபோது, எதிரில் வீரவநல்லூரில் இருந்து நெல்லை நோக்கி வந்த தனியார் பேருந்துமீது மோதியுள்ளது.

இரு வாகனங்களும் வேகமாகச் சென்ற நிலையில், நேருக்கு நேராக மோதிக்கொண்டதால், கார் முழுமையாகச் சிதைந்தது. அதனால் காரில் பயணம் செய்த சேவியர், நிக்கோலஸ், டிரைவர் மாடசாமி, மரிய அந்தோணி என்ற பன்னீர்செல்வம், மாரியப்பன் ஆகிய ஐந்து பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். காரில் இருந்த அருள்மணி என்பவர் பலத்த காயத்துடன் உயிர்தப்பினார். பேருந்தில் பயணம் செய்த சுனில் என்பவர் உள்ளிட்ட 10 பேர் காயமடைந்தனர்.

விபத்தில் பலியானவர்கள்
விபத்தில் பலியானவர்கள்

நள்ளிரவில் இந்த விபத்து நடந்ததும், அந்த வழியாக தற்செயலாக வந்த ஆம்புலன்ஸ் மூலமாக காயமடைந்த அனைவரையும் மீட்டு, பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு, அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. காவல்துறை மற்றும் தீயணைப்புத்துறையினர் விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். மதுபோதையின் காரணமாகவே இந்த விபத்து நடந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.