Published:Updated:

ஊரடங்கிலும் தொடரும் விபத்துகள்.. கலங்கவைக்கும் அரசு அதிகாரிகளின் மரணங்கள்!

விபத்தில் சிக்கிப் பலியான  காவலர் பிரவீஸ்
விபத்தில் சிக்கிப் பலியான காவலர் பிரவீஸ்

கொரோனாவிலிருந்து மக்களைக் காப்பாற்றும் பணிகளில் ஈடுபட்ட திருச்சி - பெரம்பலூர் மாவட்ட அரசு மற்றும் காவல் அதிகாரிகள் சிலர் அடுத்தடுத்து விபத்துகளில் சிக்கி மரணமடையும் சம்பவங்கள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.

மதுரை மாவட்டம் கொட்டாம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் சதாசிவம். இவரின் மகன் குமார், திருச்சி மாவட்டம், சிறுகமணி மேற்குப் பகுதி கிராம நிர்வாக அலுவலராகப் பணியாற்றி வந்தார்.

தற்போது அவர், திருச்சி ஶ்ரீரங்கம் ராகவேந்திராநகர் பகுதியில் குடும்பத்துடன் தங்கி, அங்கிருந்து வேலைக்குச் சென்று வந்தார். இந்த நிலையில், அவருக்கு திருச்சி மாவட்டம் மணிகண்டம் அடுத்த சேதுராப்பட்டி அரசுப் பொறியியல் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் சிறப்பு முகாமின் நிர்வாக பொறுப்பு வழங்கப்பட்டது.

அங்கு, வெளிநாடுகளில் இருந்து சிறப்பு விமானம் மூலம் அழைத்து வரப்படும் தமிழர்கள் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும்விதமாக தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

விபத்தில் பலியான  கிராம நிர்வாக அலுவலர்  குமார்
விபத்தில் பலியான கிராம நிர்வாக அலுவலர் குமார்

கடந்த 13-ம் தேதி இரவு 10.30 மணியளவில், சிறப்பு முகாமில் பணியை முடித்த குமார், தனது ஶ்ரீரங்கம் வீட்டுக்கு வந்துகொண்டிருந்தார். அவரது வாகனம், திருச்சி மன்னார் புரம் அருகே சென்றுகொண்டிருந்தபோது, சரக்கு வேன் மோதியதில் கிராம நிர்வாக அலுவலர் குமார் சம்பவ இடத்திலேயே பலியானார். இந்தச் சம்பவம் திருச்சி வருவாய்த்துறை அதிகாரிகள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியது.

நிவாரணம் வழங்கிய தமிழக அரசு!

கொரோனா தடுப்புப் பணிகளில் ஈடுபடுவோர் உயிரிழக்க நேரிட்டால், உயிரிழந்த பணியாளர்களின் குடும்பத்துக்கு ரூ.50 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என ஏற்கெனவே தமிழக அரசு அறிவித்தது.

பலியான வி.ஏ.ஓ குமார் குடும்பத்தாரிடம்  பணி ஆணை ஒப்படைக்கப்பட்டபோது
பலியான வி.ஏ.ஓ குமார் குடும்பத்தாரிடம் பணி ஆணை ஒப்படைக்கப்பட்டபோது

அதன்படி, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் உத்தரவின் பேரில், உயிரிழந்த கிராம நிர்வாக அலுவலர் குமாரின் குடும்பத்துக்கு ரூ.50 லட்சம் நிவாரணமும், வாரிசு அடிப்படையில் பலியான கிராம நிர்வாக அலுவலர் குமாரின் மகள் திவ்யாவுக்கு இளநிலை வருவாய் ஆய்வாளர் பணி ஆணையும் வழங்கிட உத்தரவிட்டார். அதைத் தொடர்ந்து நேற்று முன்தினம் பணி ஆணை வழங்கப்பட்டது.

அடுத்தடுத்த விபத்துகள் பலியான போலீஸார்!

இதேபோல், திருச்சி மாவட்டம், லால்குடி அடுத்த ராமநாதபுரத்தைச் சேர்ந்தவர் தமிழ்ச்செல்வன். இவர் திருச்சி மாநகரில் உள்ள பாலக்கரை காவல்நிலையத்தில் குற்றப்பிரிவு காவல் உதவி ஆய்வாளராகப் பணியாற்றி வந்தார். கடந்த சில தினங்களுக்கு முன்பு, அவர் பணி முடித்து வீடுதிரும்பும் வழியில் திருச்சி பால்பண்ணை மேம்பாலம் அருகே நடைபெற்ற விபத்தில் படுகாயமடைந்தார். தொடர்ந்து அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்

விபத்தில் பலியான  காவலர் பிரவீஸ்
விபத்தில் பலியான காவலர் பிரவீஸ்

தனியார் மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சைப் பெற்றுவந்த எஸ்.ஐ தமிழ்ச்செல்வன் சிகிச்சைப் பலனின்றி நேற்று முன்தினம் இரவு பரிதாபமாக உயிரிழந்தார்.

இதேவரிசையில், பெரம்பலூர் மாவட்ட தனிப்பிரிவு குற்றப் புலனாய்வுத் துறை சிறப்பு உதவி ஆய்வாளர் பெரியசாமி என்பவர் நேற்று சாலை விபத்தில் பலியானார்.

சிறப்பு உதவி ஆய்வாளர் பெரியசாமி
சிறப்பு உதவி ஆய்வாளர் பெரியசாமி

மேலும், கடந்த சில தினங்களுக்கு முன்பு திருச்சி அடுத்த கீரனூர் பகுதியில் ஊரடங்கு பாதுகாப்புக்குச் சென்றுகொண்டிருந்த பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை அடுத்த அரும்பாவூர் பகுதியைச் சேர்ந்த காவலர் பிரவீஸ் விபத்தில் சிக்கி பலியானார்.

'வலிகளோடு போகிறோம்... திரும்ப வருவோம்!' -திருச்சியில் உருகிய வடமாநிலத் தொழிலாளர்கள்

கொரோனா ஊரடங்கு பாதுகாப்புப் பணிகளில் ஈடுபட்டுள்ள அரசு அதிகாரிகள் மற்றும் போலீஸார் அடுத்தடுத்த விபத்துகளில் பலியானது திருச்சி - பெரம்பலூர் மாவட்டங்களில் பெரும் சோகத்தை உண்டாக்கியுள்ளது.

அடுத்த கட்டுரைக்கு