Published:Updated:

சாலையில் சுற்றித்திரியும் மாடுகள்: விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள்!

நெல்லையில் சாலைகளில் சுற்றித் திரியும் கால்நடைகளால் வாகனங்கள் விபத்தில் சிக்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. அதனால் விபத்தை ஏற்படுத்தும் கால்நடைகளைச் சாலைகளிலிருந்து அப்புறப்படுத்தும் நடவடிக்கையில் மாநகராட்சி நிர்வாகம் மேற்கொள்ள வேண்டுமென்கிற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

cows are roaming around highway side
cows are roaming around highway side ( L.Rajendran )

நெல்லை மாநகர எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் ஏராளமானோர் ஆடு, மாடுகளை வளர்த்து வருகிறார்கள். அவற்றைத் தொட்டிலில் அடைத்து வளர்த்து வந்த நிலையில், அண்மையில் பெய்த மழையின் காரணமாகச் சாலையோரங்களில் புற்கள் முளைத்திருப்பதால் அங்கு கால்நடைகளை மேய விடுகிறார்கள்.

resting cows on the road
resting cows on the road

காலை மற்றும் மாலை நேரங்களில் பள்ளி, கல்லூரிக்குச் செல்வோரும் வேலைக்குச் செல்வோரும் பரபரப்புடன் வாகனங்களில் செல்லும்போது கால்நடைகள் சாலைகளை ஆக்கிரமித்தபடி வலம் வருகின்றன. அதனால் போக்குவரத்துக்கு பெரும் இடையூறு ஏற்படுகிறது.

Vikatan

நெல்லை-திருவனந்தபுரம் சாலை, பைபாஸ் சாலை, பேட்டை-சேரன்மகாதேவி சாலை, நெல்லை-சங்கரன்கோவில் சாலை ஆகியவற்றில் மட்டும் அல்லாமல் நெல்லை-தூத்துக்குடி நான்கு வழிச் சாலையிலும் மாடுகள் போக்குவரத்துக்குத் தொந்தரவு ஏற்படுத்துகின்றன. சில இடங்களில் சாலையில் நடுவில் மாடுகள் படுத்துக் கிடக்கின்றன.

cows on the road
cows on the road

வேகமாகச் செல்லும் இரு சக்கர வாகன ஓட்டிகள், திடீரென எதிரில் இருக்கும் மாடுகளின் மீது மோதிவிடுகிறார்கள். அதனால் நிலைதடுமாறி கீழே விழுந்து கை, கால்களை உடைத்துக் கொள்கிறார்கள். ஏற்கெனவே இது போன்று விபத்தில் சிக்கிய சிலர் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவங்களும் நடந்துள்ளன.

சாலைகளில் செல்லும் மாடுகள் திடீரென ஒன்றுடன் ஒன்று சண்டையிட்டு அங்குமிங்கும் ஓடுவதால், பேருந்துக்காகக் காத்திருக்கும் பெண்கள், குழந்தைகள் உள்ளிடோர் அச்சத்துடன் அலறியடித்து நடுங்குகிறார்கள். குறிப்பாக, இரவு நேரங்களில் சாலையின் நடுவில் படுத்துக் கிடக்கும் மாடுகளைக்கண்டு கனரக வாகனங்கள் திடீரென பிரேக் அடிப்பது. பக்கவாட்டில் செல்வது போன்ற காரணங்களாலும் விபத்துகள் நடக்கின்றன.

goats crossing the speedy road
goats crossing the speedy road

கால்நடைகளை வளர்ப்பவர்களை அவற்றை உரிய கவனத்துடன் பராமரிக்குமாறு வலியுறுத்த வேண்டிய மாநகராட்சி நிர்வாகம், இந்த விவகாரத்தில் பாராமுகத்துடன் செயல்படுவதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அதனால் உயிரிழப்புகள் அதிகரிப்பதற்கு முன்பாக மாநகராட்சி அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.