Published:Updated:

“ஒரு மாசம் வேலைக்குப் போனா ஆபரேஷனுக்கு பணம் சேர்த்துடலாம் மாமா!”

- உயிரைக் குடிக்கும் பட்டாசு ஆலைகள்!

பிரீமியம் ஸ்டோரி

மீளாத துயரத்தில் ஆழ்ந்திருக்கிறது சாத்தூர் அருகேயுள்ள அச்சங்குளம் கிராமம். கடந்த 12-ம் தேதி மதியம் அந்தப் பட்டாசு ஆலையிலிருந்த தொழிலாளர்களில் கணிசமானோர் தாங்கள் கொண்டுவந்திருந்த மதிய உணவைச் சாப்பிட அமர்ந்தார்கள். ஒரு கவளம் சோற்றைக்கூட வாயில் வைத்திருக்க மாட்டார்கள்... திடீரென்று பெரும் சத்தமும் கந்தகப் புகையுமாக வெடிகள் வெடிக்க... தீயின் கொடூர நாக்குகள் அவர்களைச் சூழத் தொடங்கின. வெடிகுண்டு வீசப்பட்டதுபோல மளமளவெனக் கட்டடம் நொறுங்கி, பலரின் மீதும் சரிந்து விழுந்தது. சுதாரிக்கக்கூட வழியில்லாமல் அங்கேயே உடல் கருகி இறந்தார்கள் அப்பாவி மக்கள். மொத்தம் பலியான 20 உயிர்களில் ஏழு மாத கர்ப்பிணியும் ஒருவர். இந்த உலகின் வெளிச்சத்தைக் காணாமலேயே கருவோடு வெந்து சிதைந்தது அவர் வயிற்றிலிருந்த சிசு! விதிமீறலும், தொழிலாளர்களுக்கு அளிக்கப்பட்ட அதிக உற்பத்தி அழுத்தமுமே விபத்துக்குக் காரணம் என்கிறார்கள்.

“ஒரு மாசம் வேலைக்குப் போனா ஆபரேஷனுக்கு பணம் சேர்த்துடலாம் மாமா!”

விருதுநகர் மாவட்டத்தில் சாத்தூர், சிவகாசி, வெம்பக்கோட்டை ஆகிய தாலுகாக்களில் சிறியதும் பெரியதுமாக 996 பட்டாசு ஆலைகள் இயங்கிவருகின்றன. ஆண்டுக்கு 3,000 கோடி ரூபாய்க்கு வர்த்தகம் நடைபெறுகிறது. இவ்வளவு பெரிய வணிக வாய்ப்புள்ள இந்தத் தொழிலில் ஈடுபட்டிருக்கும் தொழிலாளர்களுக்கு உயிர் பாதுகாப்பு எதுவும் இல்லை என்பதுதான் உயிரை உலுக்கும் உண்மை!

சாத்தூர் அருகேயுள்ள அச்சங்குளம் கிராமத்தில் சந்தனமாரி என்பவருக்குச் சொந்தமான ‘மாரியம்மாள் பட்டாசு ஆலை’ இயங்குகிறது. ஃபேன்ஸி ரக தயாரிப்புக்கான நாக்பூர் உரிமம் (மத்திய வெடிபொருள் கட்டுப்பாட்டுத்துறையின் கீழுள்ள நாக்பூரிலுள்ள தலைமை வெடிபொருள் கட்டுப்பாட்டு அலுவலரால் அளிக்கப்படும் உரிமம்) பெற்று இயங்கிய இந்த ஆலை, ஐந்து பேருக்குக் குத்தகைக்கு விடப்பட்டிருக்கிறது. 30 அறைகளில் 89 பேர் வேலை பார்த்து வந்திருக்கிறார்கள்.

பிப்ரவரி 12-ம் தேதி இந்த ஆலையின் ஃபோர்மேன் விஜயகுமார், ஃபேன்ஸி ரகப் பட்டாசுகளுக்கு மருந்து கலக்கும்போது ஏற்பட்ட உராய்வால் விபத்து ஏற்பட்டது என்கிறார்கள். அடுத்தடுத்து பரவிய தீயால், 20 அறைகள் இடிந்து தரைமட்டமாகின. இந்தக் கோர விபத்தில் 20 பேர் உடல் கருகியும் சிதறியும் பலியானார்கள். 35 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார்கள். ஆலையின் உரிமையாளர் சந்தனமாரி, குத்தகைதாரர்களான சக்திவேல், ராஜா, சிவகுமார், பொன்னுப்பாண்டி, வேல்ராஜ் ஆகிய ஆறு பேர்மீது ஐந்து பிரிவுகளில் வழக்கு பதிவுசெய்யப்பட்டு, அதில் பொன்னுப்பாண்டி மட்டும் கைதுசெய்யப்பட்டிருக்கிறார்.

“ஒரு மாசம் வேலைக்குப் போனா ஆபரேஷனுக்கு பணம் சேர்த்துடலாம் மாமா!”

காயமடைந்த தொழிலாளர்கள் சிலரிடம் பேசினோம்... ‘‘மத்தியானம் ஒண்ணரை மணி இருக்கும். வெடி மருந்து கலக்குற ரூம்ல இருந்து பெரிய சத்தத்தோட வெடிங்க வெடிக்க ஆரம்பிச்சுது. ஸ்டாக் வெச்சிருந்த பட்டாசுகள்லயும் தீப்பிடிச்சிக்கிச்சு. எல்லாம் சேர்ந்து வெடிக்க, எங்களால எந்தப் பக்கமும் ஓட முடியலை. போதாததுக்கு கரும்புகை கண்ணை மறைக்க... கந்தக நெடி மூக்குல ஏறி பலரும் மூச்சுத்திணறி மயங்கி விழ ஆரம்பிச்சிட்டாங்க. 20 ரூமுங்க அடுத்தடுத்து இடிஞ்சு விழுந்துடுச்சு. இந்தத் தொழில்ல உசுருக்குப் பாதுகாப்பு இல்லைன்னு தெரியும். ஆனா, அரை சாண் வயித்துக்காக உசுரைப் பணயம்வெச்சு வேலை பார்க்குறோம். ஆனா, அன்னைக்கு அந்தச் சாப்பாட்டை வாயில வெக்கறதுக்குள்ள, அத்தனை உசுரும் துள்ளத் துடிக்கப் போயிடுச்சு...” என்றவர்கள் கண்கலங்கி அழ ஆரம்பித்தார்கள்.

சாத்தூர் மருத்துவமனையின் போஸ்ட்மார்ட்டம் அறையைச் சுற்றி ஒலித்தது மரண ஓலம். ரத்த உறவுகளை பலிகொடுத்த பலரும் வாயிலும் வயிற்றிலும் அடித்துக்கொண்டு அழுது புலம்பிக்கொண்டிருந்தார்கள். ஏழு மாத கர்ப்பிணியான தன் காதல் மனைவி கற்பகவள்ளி உடல் சிதறி இறந்ததை நம்ப முடியாமல் பித்துப் பிடித்ததுபோல அரற்றிக்கொண்டிருந்தார் ராஜசேகர். அவரால் பேசக்கூட முடியவில்லை. அவரைச் சுற்றியிருந்த உறவினர்கள்தான் நம்மிடம், “நிறை மாச கர்ப்பிணிப் புள்ள... வேலைக்குப் போக வேணாம்னு இவரு சொன்னாரு... ஆனா, ‘ஆபரேஷன்னு டாக்டர் சொல்லிட்டா காசுக்கு எங்க போறது? ஒரு மாசம் மட்டும் வேலைக்குப் போனா ஆபரேஷனுக்குப் பணத்தைச் சேர்த்துடலாம் மாமா’னு சொல்லிட்டு அந்தப் புள்ளை வேலைக்கு போச்சு. இப்ப அந்தப் புள்ளை வயிறெல்லாம் கருகி இறந்துகிடக்குது. உலகத்துல யாருக்குமே இப்படியொரு காட்சியை பார்க்குற நிலைமை வரக் கூடாது...” என்றவர்கள் அதற்கு மேல் பேச முடியாமல் விம்மி அழுதார்கள்.

விபத்தில் பெற்றோரைப் பறிகொடுத்து திக்கற்று நின்றுகொண்டிருக்கிறாள் 12 வயது சிறுமி நந்தினி. ‘‘நீ நல்லாப் படிக்கணும். எங்களை மாதிரி கஷ்டப்படக் கூடாது’னு சொன்னீங்களே... இப்போ அநாதையா விட்டுட்டுப் போயிட்டீங்களே... இனிமே எனக்கு யாரு இருக்கா?” என்று தன் தாய், தந்தையின் உடல்களைப் பார்த்துக் கதறியழுது கொண்டிருந்தாள் அந்தச் சிறுமி. அவளுக்கான பதில் அங்கு எவரிடமும் இல்லை!

கற்பகவள்ளி - மகாலட்சுமி - கண்ணன் - மாணிக்கம் தாகூர்
கற்பகவள்ளி - மகாலட்சுமி - கண்ணன் - மாணிக்கம் தாகூர்

வருடம்தோறும் தொடர் சோகங்களாகத் தொடரும் இந்தக் கொடூர விபத்துகளுக்குத் தீர்வே இல்லையா? இது குறித்து விருதுநகர் மாவட்ட பட்டாசு மற்றும் தீப்பெட்டித் தொழிலாளர்கள் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் மகாலட்சுமியிடம் பேசினோம். ‘‘விபத்து நடந்த மாரியம்மாள் பட்டாசு ஆலை, நாக்பூர் உரிமம் பெறப்பட்டு நடத்தப்பட்டாலும், வெடிபொருள் சட்டப் பிரிவின்படி உரிமத்தை குத்தகைக்குவிட்டது விதிமீறல்தான். பெரிய கம்பெனிகளைத் தவிர்த்து, சிறு ஆலைகள் பெரும்பாலும் இப்படித்தான் குத்தகைக்கு விடப்படுகின்றன. குத்தகைக்கு எடுத்தவர்கள், அதிக லாப நோக்கத்துடன் உற்பத்தியை அதிகரிக்க, தொழிலாளர்களுக்கு அழுத்தம் கொடுக்கின்றனர். ஐந்து பேர் வேலையை ஒரு தொழிலாளி பார்க்க வேண்டி யிருக்கிறது.

ஓர் அறைக்குள் அதிகபட்சம் நான்கு பேர் வேலை பார்க்கலாம். ஆனால், பல ஆலைகளில் 15 பேர் வரை வேலை பார்க்க நேரிடுகிறது. இப்படி இடைவெளியே இல்லாமல் அமர்ந்து பார்ப்பதும் உரசல்களுக்குக் காரணமாகி, விபத்து ஏற்படுகிறது. பட்டாசுத் தயாரிப்புக்கு மரத்தால் செய்யப்பட்ட ஊசி, சுத்தியலைத்தான் பயன்படுத்த வேண்டும். ஆனால், பல ஆலைகளிலும் இரும்புச் சாமான்களைப் பயன்படுத்து கிறார்கள். இதனால், தீப்பொறி ஏற்பட்டு விபத்துகள் நடக்கின்றன.

சில கம்பெனிகள் ஃபேன்ஸி ரக பட்டாசு தயாரிப்புக்கு, அரசால் தடைசெய்யப்பட்ட வீரியம் மிகுந்த மருந்துகளைக் கலக்கின்றன. பல ஆலைகளில் தொழிலாளர்களின் வருகையை முறையாகப் பதிவு செய்வதில்லை. இப்போது விபத்து நடந்த கம்பெனியிலும் சரியாக வருகை பதிவு செய்யாததால், இறந்துபோன பலரை அடையாளம் காண்பதில் சிக்கல் ஏற்பட்டது. எல்லாவற்றுக்கும் மேலாக, பட்டாசு ஆலைகளைக் கண்காணிக்க வேண்டிய அதிகாரிகள், விதிமீறல்களைக் கண்டுகொள்ளாதது விபத்துக்கு முக்கியக் காரணம்’’ என்றார் ஆதங்கத்துடன்.

“ஒரு மாசம் வேலைக்குப் போனா ஆபரேஷனுக்கு பணம் சேர்த்துடலாம் மாமா!”

விருதுநகர் எம்.பி-யான மாணிக்கம் தாகூர், “மன்மோகன் சிங் பிரதமராக இருந்தபோது பட்டாசு ஆலைகளைக் கண்காணிக்க ஆய்வுக்குழு ஏற்படுத்தப்பட்டது. ஆனால், மோடியின் ஆட்சியில் அந்தக் குழுவைக் கலைத்துவிட்டார்கள். மீண்டும் அந்தக் குழுவை நியமிக்க வேண்டும். தற்போது நடந்த நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரிலும்கூட இந்த விபத்து பற்றி குறிப்பிட்டு, ‘உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு பிரதமர் நிவாரண நிதியின்கீழ் அறிவிக்கப்பட்ட 2 லட்சம் ரூபாய் இழப்பீட்டுத் தொகையை 5 லட்ச ரூபாயாக உயர்த்தி அறிவிக்க வேண்டும்’ என்று குரல் கொடுத்திருக்கிறேன். அதையும் நிறைவேற்ற வேண்டும்” என்றார்.

விருதுநகர் கலெக்டர் கண்ணனிடம் பேசினோம். ‘‘விபத்துக்குக் காரணம் தொழிலாளர்களின் கவனக்குறைவுதான் என்று தெரியவந்திருக்கிறது. இது குறித்து ஆய்வுசெய்ய டி.ஆர்.ஓ தலைமையில் குழு நியமிக்கப்பட்டிருக்கிறது. குழு அளிக்கும் அறிக்கையின் அடிப்படையில் ஆலை உரிமையாளர்கள்மீது நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றார்.

தொழிலாளர்களின் கவனக்குறைவுதான் காரணம் என்றால், பட்டாசு ஆலைகளின் விதிமீறலைக் கண்டுகொள்ளாத அதிகாரிகள்மீது என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறது இந்த அரசு? இவ்வளவு உயிர்கள் பறிபோன பிறகும் தொழிலாளர்கள் மீது மட்டுமே பழியைச் சுமத்துவது யாரைக் காப்பாற்றுவதற்காக?

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு