Published:Updated:

நடிகை யாஷிகா ஆனந்த்தின் கார் விபத்து; பெண் இன்ஜினீயர் பலி - 3 பிரிவுகளில் வழக்கு பதிவு!

யாஷிகா ஆனந்த்
யாஷிகா ஆனந்த்

மாமல்லபுரத்தை அடுத்த சூளேரிக்காடு, கிழக்குக் கடற்கரை சாலையில் பிக்பாஸ் சீசன் 3-ல் பங்கேற்ற நடிகை யாஷிகா ஆனந்த் ஓட்டி வந்த சொகுசு கார் விபத்துக்குள்ளானது. அதில் பயணித்த நடிகை யாஷிகாவின் தோழி உயிரிழந்தார்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

செங்கல்பட்டு மாவட்டம் , மாமல்லபுரம் அடுத்த  சூளேரிக்காடு பகுதி கிழக்குக் கடற்கரைச் சாலையில் இன்று அதிகாலை ஒரு மணியளவில் வேகமாக வந்த சொகுசு கார் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து, தடுப்புச் சுவரின்மீது மோதியது. அதனால் அந்தக் கார் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. காரில் பயணித்தவர்கள், "காப்பாற்றுங்கள்!" என சத்தம் போட்டனர். அதைக்கேட்டு குளேரிக்காடு பகுதி மக்களும் அவ்வழியாக சாலையில் சென்றவர்களும் விபத்தில் சிக்கியவர்களை மீட்டனர். அப்போதுதான் விபத்தில் சிக்கி உயிருக்குப் போராடுவது நடிகை யாஷிகா ஆனந்த் எனப் பொதுமக்களுக்கு தெரியவந்தது. உடனடியாக மாமல்லபுரம் போக்குவரத்துப் பிரிவு காவல் நிலையத்துக்குத் தகவல் கொடுத்ததோடு விபத்தில் சிக்கியவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு பொது மக்கள் கொண்டு சென்றனர்.

விபத்தில் சிக்கிய கார்
விபத்தில் சிக்கிய கார்

அப்போது காரில் பயணித்த பெண் ஒருவர் உயிரிழந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். அவரின் சடலத்தை மீட்ட போலீஸார், பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். போலீஸ் விசாரணையில் விபத்தில் உயிரிழந்தது நடிகை யாஷிகா ஆனந்த்தின் தோழியான ஹைதராபாத்தைச் சேர்ந்த இன்ஜினீயர் வள்ளிச்செட்டி பவாணி (28) எனத் தெரியவந்தது. மேல்சிகிச்சைக்காக நடிகை யாஷிகா ஆனந்த், அவரின் இரண்டு ஆண் நண்பர்கள் என மூன்று பேரை சென்னை அடையாறில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு போலீஸார் கொண்டு சென்றனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விபத்தை நேரில் பார்த்தவர்கள், காரில் பயணித்த சிலர் மதுபோதையில் இருந்ததாக தெரிவித்தனர். ஆனால் அந்தத் தகவலை போலீஸார் உறுதிப்படுத்தவில்லை. விசாரணை முடிவில்தான் மது அருந்தினார்களா என்ற தகவல் தெரியவரும்.

இதுகுறித்து செங்கல்பட்டு மாவட்ட போலீஸார் கூறுகையில், ``மாமல்லபுரம் அருகே உள்ள சூளேரிக்காடு பகுதி கிழக்கு கடற்கரைச் சாலையில் நடிகை யாஷிகா ஆனந்த்தின் கார் விபத்துக்குள்ளாகியிருக்கிறது. காரில் பயணித்த ஹைதராபாத்தைச் சேர்ந்த இன்ஜினீயர் வள்ளிச்செட்டி பவாணி (28) சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளார். இவர், யாஷிகாவின் தோழி. வள்ளிச்செட்டி பவாணி, அமெரிக்காவில் பணியாற்றி வந்தார். வார விடுமுறையைக் கழிப்பதற்காக நடிகை யாஷிகா ஆனந்த், அவரின் தோழி வள்ளிச்செட்டி பவாணி, 2 ஆண் நண்பர்கள் என 4 பேர் மாமல்லபுரத்துக்குச் சென்றிருக்கின்றனர். பின்னர் அங்கிருந்து சென்னை நோக்கி நடிகை யாஷிகா ஆனந்த், காரில் தன்னுடைய நண்பர்களுடன் புறப்பட்டிருக்கிறார். காரை நடிகை யாஷிகா ஓட்டியிருக்கிறார். அதிகாலை 1 மணியளவில் இந்த விபத்து நடந்திருக்கிறது. விபத்தை ஏற்படுத்திய நடிகை யாஷிகா ஆனந்த் மீது இந்திய தண்டணைச் சட்டப்பிரிவுகள் 279-337-304 ஆகியவற்றின் கீழ் வழக்குப்பதிவு செய்திருக்கிறோம். இதில் 304 சட்டப்பிரிவுக்கு 10 ஆண்டுகள் அல்லது ஆயுள் தண்டனை வரை விதிக்கப்படலாம்" என்றனர்.

இன்ஜினீயர் வள்ளிச்செட்டி பவாணி
இன்ஜினீயர் வள்ளிச்செட்டி பவாணி

நடிகை யாஷிகா ஆனந்த், 'கவலை வேண்டாம்', 'துருவங்கள் பதினாறு', 'ஜாம்பி' ஆகிய திரைப்படங்களில் நடித்தவர். பிக் பாஸ் சீசன் 3-ல் பங்கேற்று பிரபலமானவர். பஞ்சாப்பை சேர்ந்த நடிகை யாஷிகா ஆனந்த்தின் குடும்பம் டெல்லியில் வசித்தது. பிறகு சென்னைக்கு குடிபெயர்ந்தனர். அதனால் சென்னை நுங்கம்பாக்கத்தில்தான் நடிகை யாஷிகா ஆனந்த், படித்தார். தமிழ், தெலுங்கு சினிமாவில் நடித்து வந்த நடிகை யாஷிகா ஆனந்த் விபத்தில் சிக்கிய சம்பவம், ரசிகர்கள், அவரின் குடும்பத்தினரை அதிர்ச்சியடைய வைத்திருக்கிறது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு