Published:Updated:

“கண்ணு முழிச்சுப் பார்த்தா ஒரே அழுகுரல்கள்!”

விமான விபத்து... விவரிக்கிறார் உயிர் தப்பிய பயணி

பிரீமியம் ஸ்டோரி

கொட்டும் பெருமழைத் தண்ணீரைக் கடந்து கண்ணீரில் தத்தளிக்கிறது `கடவுளின் தேசம்.’ இடுக்கி நிலச்சரிவு, கோழிக்கோடு விமான விபத்து, பெருவெள்ளம் என அடுத்தடுத்து பேரிழப்புகளால் பெரும் சோகத்தில் மூழ்கியுள்ளது கேரளா. துபாயிலிருந்து கோழிக்கோடு விமான நிலையம் வந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் 10 பச்சிளம் குழந்தைகள் உட்பட 184 பயணிகள், விமானப் பணியாளர்கள் எட்டுப் பேர் பயணித்தனர். மோசமான வானிலை காரணமாக, விமானம் இறங்குவதில் ஏற்பட்ட சிக்கல், கோர விபத்தில் முடிந்துவிட்டது. விபத்துக்குக் கூடுதல் காரணம், கோழிக்கோடு விமான நிலையம் ‘டேபிள்டாப் ரன்வே’ என்கிற வகையில் அமைந்திருப்பதுதான். நான்கு குழந்தைகள், இரண்டு விமானிகள் உட்பட 18 பேர் இந்த விபத்தில் பலியாகிவிட்டனர்.

களநிலவரம் அறிய கோழிக்கோடு விமானநிலையம் அமைந்துள்ள கரிப்பூர் பகுதிக்குக் கிளம்பினோம். தமிழக-கேரள எல்லைப் பகுதியில் விஷயத்தைச் சொல்லி அனுமதி வாங்கி, கொட்டும் மழையில் நான்கு மணி நேரம் பயணித்து சம்பவ இடத்தை அடைந்தோம்.

கேரள மாநிலம் பெரும்பாலும் மலைகளும் மலைகள்சார்ந்த பகுதியும்தான். அந்த வகையில் கோழிக்கோடு விமானநிலையம் என்பது, கிட்டத்தட்ட ஒரு மலைக்குன்று மீதுதான் அமைந்திருக்கிறது. ரன்வே முடியும் இடத்திலிருந்து சில மீட்டர்கள் தூரத்திலேயே பெரும் பள்ளமான பகுதி ஆரம்பமாகிவிடுகிறது. இது போன்ற அமைப்பிலிருக்கும் விமான ஓடுதளங்களைத்தான் ‘டேபிள் டாப் ரன்வே’ என்று அழைக்கிறார்கள். இந்த அமைப்பைப் பார்த்ததுமே நமக்கும் பதற்றம் பற்றிக்கொண்டது.

கணவர் இர்ஷாத்துடன் ஷஹலா
கணவர் இர்ஷாத்துடன் ஷஹலா

மழை விடாமல் கொட்டிக்கொண்டிருந்தது. மீட்புப் பணிகள் முடிந்து காயம்பட்டோர் அனைவரும் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டிருந் தனர். உடல்கள் அப்புறப்படுத்தப்பட்டிருந்தன. போலீஸாரும் ராணுவத்தினரும் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபட்டிருந்தனர். ஏர்போர்ட் அத்தாரிட்டி அதிகாரிகள் விபத்தை ஆய்வு செய்து கொண்டிருந்தனர். டேபிள்டாப் ரன்வேயிலிருந்து விலகி, கிட்டத்தட்ட 50 அடி ஆழமான பள்ளத்தில் விழுந்து, மூன்று பாகங்களாக உடைந்திருந்தது விமானம். பள்ளத்தில் விழுவதற்கு முன்பாக மோதியதில் விமான நிலைய மதில் சுவரும் இடிந்து விழுந்திருந்தது.

விமானத்தைப் பார்வையிட்டோம். பயணிகளின் சீட்கள் நொறுங்கிப்போயிருந்தன. காலணிகள், பயணிகளின் உடைமைகள் சிதறிக் கிடந்தன. மோசமான வானிலை, டேபிள்டாப் ரன்வே என விபத்துக்குப் பல்வேறு காரணங்கள் சொல்லப்படுகின்றன. விமானத்தின் பிளாக் பாக்ஸ் கைப்பற்றப்பட்டு, ஆய்வுக்காக டெல்லிக்கு அனுப்பப்பட்டுள்ளது. அந்த ஆய்வில்தான் விபத்துக்கான உண்மையான காரணம் தெரியவரும்.

இந்த விமானத்தில் தமிழகத்தைச் சேர்ந்த மூன்று பேர் பயணித்துள்ளனர். அதிர்ஷ்டவசமாக மூவரும் உயிர் தப்பியுள்ளனர். நீலகிரி மாவட்டம், கூடலூரைச் சேர்ந்த ஷஹலா என்ற பெண், துபாயில் பணியாற்றும் தன் கணவருடன் சில மாதங்கள் தங்கிவிட்டுத் திரும்பியிருக்கிறார். தற்போது அவர், கோழிக்கோடு எம்.ஐ.எம்.எஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார்.

“கண்ணு முழிச்சுப் பார்த்தா ஒரே அழுகுரல்கள்!”

ஷஹலாவின் கணவர் இர்ஷாத்திடம் பேசினோம். ``எனக்குச் சொந்த ஊர் கூடலூர். 2018-ல துபாய்ல வேலைக்குச் சேர்ந்தேன். போன வருஷம்தான் எனக்கும் ஷஹலாவுக்கும் நிக்கா முடிஞ்சுது. கொஞ்ச நாள்லயே நான் துபாய் வந்துட்டேன். ஜனவரி மாதம் டூரிஸ்ட் விசாவுல என் மனைவி இங்கே வந்தாங்க. கொரோனா பாதிப்பால அவங்க இங்கேயே இருக்க வேண்டிய சூழ்நிலை. இந்தச் சூழல்லதான் `வந்தே பாரத்’ திட்டத்துல துபாய்லருந்து கோழிக்கோட்டுக்கு ஒரு விமானம் கிளம்பறதா கேள்விப்பட்டேன். எனக்கு லீவு இல்லை. அதனால என் மனைவியையும், உறவுக்காரச் சகோதரி ஒருத்தரையும் அவங்க குழந்தையுடன் அனுப்ப முடிவு செஞ்சு டிக்கெட் போட்டோம். வெள்ளிக்கிழமை மதியம் 1:30 மணிக்கு ஃபிளைட். காலையிலேயே அவங்களை ஏர்போர்ட்டுல விட்டுட்டு வந்துட்டேன். நடுவுல மனைவிகிட்ட போன்ல பேசினப்போ, ‘சீட்ல உட்கார்ந்துட்டேன்’னு சொன்னாங்க.

இந்திய நேரப்படி மாலை 7:30-க்கு ஃபிளைட் லேண்ட் ஆகியிருக்கணும். ஆனா, லேண்ட் ஆகலை. மனைவிக்கு போன் பண்ணினேன். லைன் கிடைக்கலை. திடீர்னு ஃபிளைட் ஆக்ஸிடன்ட்னு மெசேஜ் வந்துச்சு. அடிச்சு, பிடிச்சு டி.வி போட்டுப் பார்த்தா, ஃபிளைட் மூணு பாகமா உடைஞ்சு போயிருந்துச்சு. எனக்கு உசுரே இல்லை. வெடிச்சு அழுதுட்டேன். நல்லவேளையா என் மனைவியின் உயிருக்கு ஆபத்து எதுவும் இல்லை. நான் எப்பவும் லேடீஸுக்கு விமானத்தின் முன்பக்கத்தில்தான் சீட் போடுவேன். ஆனா, இந்தமுறை என்ன தோணிச்சோ நடுவுல சீட் புக் பண்ணிட்டேன். அதுதான் என் மனைவியைக் காப்பாத்தியிருக்கு. ஆனா, இத்தனை பேரு இறந்திருக்குறது ரொம்ப வேதனையா இருக்கு” என்றார்.

மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் ஷஹலாவிடம் கான்ஃபரன்ஸ் கால் மூலம் பேசினோம். மிகவும் சிரமப்பட்டு மெல்லிய குரலில் பேசினார் அவர். “கோழிக்கோடு பக்கத்துல வந்ததும், ஃபிளைட் லேண்ட் ஆக முடியலை. சுத்திக்கிட்டே இருந்துச்சு. `க்ளைமேட் மோசமா இருந்தா, ஃபிளைட் இப்படிச் சுத்தும்’னு என் கணவர் சொல்லியிருக்கார். அதனால தைரியமா இருந்தேன். முதல் முயற்சி தோல்வி. இரண்டாவது முயற்சியில ஃபிளைட் ஜம்ப் அடிச்சு குலுங்கிச்சு. எல்லாருக்கும் தூக்கிவாரிப்போட்டது. ப்ரேயர் பண்ணத் தொடங்கிட்டோம். நிறைய பேர் உள்ளே அழ ஆரம்பிச்சுட்டாங்க. கடைசியா, ‘ஃப்ளைட் லேண்ட் ஆகப்போகுது’னு பைலைட் கமென்ட் பண்ணினாரு. உடனே மைக் ஆஃப் ஆகிடுச்சு. அதுக்கப்புறம் இன்ஜினும் ஆஃப் ஆயிடுச்சுனு நினைக்கிறேன். அடுத்த சில நிமிடங்கள்ல என்ன நடக்கக் கூடாதுனு நினைச்சோமோ அது நடந்துருச்சு...” என்றவர் சற்றே இடைவெளிவிட்டுத் தொடர்ந்தார்.

“கண்ணு முழிச்சுப் பார்த்தா ஒரே அழுகுரல்கள்!”

“ `டமார்’னு பெரிய சத்தம். விமானம் வேகமா எங்கெங்கேயோ போகுது. உள்ளே சீட்டெல்லாம் `கடமுடா கடமுடா’னு உருள ஆரம்பிச்சுது. சீட்டை கெட்டியா பிடிச்சிக்கிட்டேன். சில நொடிகள்தான். கண்ணு முழிச்சுப் பார்த்தா, சுத்தி ஒரே அழுகுரல்கள். என் முன்னாடி இருந்த சீட்டெல்லாம் நொறுங்கிப்போயிடுச்சு. நிறைய பேர் என்னை மிதிச்சுக்கிட்டே ஓடுறாங்க. எந்திரிக்க முயற்சி பண்றேன், முடியலை. என் கால் கேபிள்ல சிக்கிடுச்சு. பக்கத்துல ஒருத்தரு தலையில ரத்தம் சொட்டச் சொட்ட எந்திரிச்சுக் கிளம்பினாரு. என்னைப் பார்த்துட்டு, அவர்தான் மெள்ள கேபிளையெல்லாம் எடுத்துவிட்டு உதவி பண்ணினாரு. அதுக்கப்புறம், மீட்புக்குழுவினர் என்னை மீட்டு ஆஸ்பத்திரியில சேர்த்தாங்க. கால், முதுகு, கழுத்துல பலமான அடி. வலி அதிகமா இருக்கு” என்றார் வலி முனகலுடன்.

களத்திலிருந்த போலீஸார் மற்றும் அந்தப் பகுதி மக்கள் சிலரிடம் பேசினோம். “வெள்ளிக்கிழமை மாலை 7:40 மணிக்குப் பெரிய சத்தம் கேட்டது. சத்தம் வந்த இடத்துக்கு ஓடினோம். அங்கே நாங்கள் பார்த்த காட்சி படு பயங்கரமாக இருந்தது. விமானம் சுக்கு நூறாக உடைந்து, பயணிகளின் கதறல் நெஞ்சைப் பிளந்தது. நாங்களே மீட்புப் பணிகளைத் தொடங்கினோம்” என்றவர்கள் விமான நிலையத்தின் குறைபாடுகள் குறித்தும் சொன்னார்கள்.

“எப்போதும் இங்கு இந்த ரன்வேதான் பிரச்னை. ரன்வேயின் நீளம் குறைவு. ஐக்கிய அரபு அமீரகத்திலிருந்து ஜம்போ ஃபிளைட்ஸெல்லாம் இங்கு வர முடியாது என்று சொல்லிவிட்டனர். கடந்த 2010-ல் மங்களூரில் டேபிள்டாப் ரன்வேயில்தான் விபத்து ஏற்பட்டது. அதனால், `கோழிக்கோடு விமான நிலையத்தை விரிவாக்கம் செய்ய வேண்டும்’ என்று ஏர்போர்ட் அத்தாரிட்டி அதிகாரிகள் சொல்லியுள்ளனர். ஆனால், அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இனியும் தாமதிக்காமல் விமான நிலையத்தை விரிவாக்கம் செய்து, வருங்காலத்தில் இப்படி ஒரு விபத்து நடக்காமல் தடுக்க வேண்டும்” என்றனர்.

மலப்புரம் மாவட்ட ஆட்சியர் கோபால கிருஷ்ணனிடம் பேசினோம். “விமானம் ரன்வே யிலிருந்து விலகி, சறுக்கி, பள்ளத்தில் விழுந்துள்ளது. பொதுமக்கள் மற்றும் பல்வேறு துறையினரின் உதவிகளுடன் மீட்புப் பணிகளை விரைவாக முடித்தோம். காயமடைந்தவர்களை கோழிக்கோடு மற்றும் மலப்புரம் மாவட்டங்களிலுள்ள 19 மருத்துவமனைகளில் அனுமதித்துள்ளோம். விபத்துக்கான காரணம் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. ரன்வே உட்பட விமான நிலையத்தை விரிவாக்கம் செய்வதற்கு நிலம் கையகப்படுத்தும் பணிகளைத் தொடங்கினோம். ஆனால், 80-க்கும் மேற்பட்டோர் அதற்கு எதிராக வழக்கு தொடர்ந்துள்ளனர். அதனால்தான் விரிவாக்கம் செய்ய முடியவில்லை. விரைவில் இந்தப் பிரச்னைக்கு தீர்வு காணப்படும்” என்றார்.

ரன்வே பணிகள் விரைந்து முடிக்கப்பட வேண்டும். மற்றொரு துயரத்தைத் தாங்காது கேரளா!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு