Published:Updated:

ராமநாதபுரம்: `கொரோனாவுக்கு பலி; உடலை எடுத்துச் சென்ற ஆம்புலன்ஸ் விபத்து!’ - உதவிய சமூக ஆர்வலர்கள்

கொரோனா வைரஸ்
கொரோனா வைரஸ்

ராமநாதபுரத்தில் கொரோனா வைரஸ் தாக்கத்தால் உயிரிழந்தவரின் உடலை ஏற்றி வந்த ஆம்புலன்ஸ் விபத்துக்குள்ளாகி கவிழ்ந்தது. இதனால் த.மு.மு.க-வினர் வேறொரு ஆம்புலன்ஸ் மூலம் உடலை சொந்த ஊருக்கு அனுப்பி வைத்தனர்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. இதனால் மாவட்ட மக்களிடையே காணப்பட்ட அச்சம் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்து வருகிறது. மாவட்டத்தில் நேற்றைய நிலவரப்படி 3,400 பேர் கொரோனா நோய்த் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 2,814 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 68 பேர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளனர்.

விபத்துக்குள்ளான ஆம்புலன்ஸ்
விபத்துக்குள்ளான ஆம்புலன்ஸ்

இந்நிலையில், புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினத்தை சேர்ந்த 55 வயது முதியவர் ஒருவர், கொரோனா நோய்த் தொற்றால் மதுரை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தார். சிகிச்சை பலனளிக்காத நிலையில், அவர் நேற்று உயிரிழந்தார். இதையடுத்து மதுரையில் இருந்து அவரது உடல் ஆம்புலன்ஸ் மூலம் கோட்டைபட்டினத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டது. இந்த ஆம்புலன்ஸ் வாகனத்தை தேனி மாவட்டம் அல்லிகுளம் பகுதியைச் சேர்ந்த ஐயப்ப ராஜா என்பவர் ஓட்டிச் சென்றுள்ளார்.

கொரோனா: `உயிரிழந்த 108 ஆம்புலன்ஸ் ஊழியர்' - உதவிய கோவை போலீஸ்

இன்று அதிகாலை மதுரை - தொண்டி தேசிய நெடுஞ்சாலையில் சென்றுகொண்டிருந்த ஆம்புலன்ஸ், ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே உள்ள அச்சங்குடி என்ற கிராமத்தின் அருகே திடீரென விபத்துக்குள்ளாகி சாலை ஓரத்தில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் ஆம்புலன்ஸ் டிரைவரான ஐயப்ப ராஜா லேசான காயங்களுடன் உயிர் தப்பிய நிலையில், கொரோனாவால் உயிரிழந்தவரின் உடல் ஆம்புலன்ஸ் உள்ளேயே இருந்துள்ளது. இதனால், அப்பகுதியில் பரபரப்பு நிலவியது. விபத்தை அறிந்த அப்பகுதியில் சென்றவர்கள் கொரோனா அச்சத்தினால் ஆம்புலன்ஸ் அருகில் செல்லாமல் ஒதுங்கி நின்றனர்.

மாற்று ஆம்புலன்ஸில் ஏற்றிச் செல்லப்படும் உடல்
மாற்று ஆம்புலன்ஸில் ஏற்றிச் செல்லப்படும் உடல்

இதுகுறித்து தகவல் அறிந்த தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகச் செயலாளர் ஜிப்ரி மற்றும் சமூக ஆர்வலர்கள் சிலர் விபத்து நடந்த பகுதிக்கு மாற்று ஆம்புலன்ஸ் வாகனத்துடன் விரைந்து வந்தனர். அங்கு கவிழ்ந்து கிடந்த ஆம்புலன்ஸில் இருந்து கொரோனாவால் உயிரிழந்தவரின் உடலை பாதுகாப்புடன் மீட்டு கோட்டைபட்டினத்துக்கு கொண்டு சென்றனர். இந்த விபத்து குறித்து திருவாடனை போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அடுத்த கட்டுரைக்கு