Published:Updated:

ஹெலிகாப்டரின் Black Box என்பது என்ன? அதன் செயல்பாடுகள் எத்தகையது...

Black Box
News
Black Box

இந்தியாவின் முப்படைத் தலைமை தளபதி பிபின் ராவத் சென்ற ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது. அந்த ஹெலிகாப்டரின் Black Box கிடைத்திருக்கிறது. அதையொட்டி Black Box பேசுபொருளாகிறது.

பொதுவாக ஒரு விபத்து ஏற்பட்டால், அங்கு கைப்பற்றப்பட்ட தடயம், நேரில் பார்த்த சாட்சியங்கள் கொடுக்கும் வாக்குமூலங்கள், மேலும் மற்ற பிற சூழல்களைப் பொருத்துத்தான் விபத்துக்குள்ளான காரணங்களை அலசி ஆராய்வர் .ஆனால், ஒரு விமானம் அல்லது ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானால் அதில் உள்ள கறுப்புப் பெட்டி எங்கே என்பதுதான் தேடலாக இருக்கும். ஏனென்றால், ஒரு ஹெலிகாப்டரில் அல்லது விமானத்தில் நடப்பவற்றை எல்லாம் பதிவு செய்வதுதான் கறுப்புப் பெட்டியின் வேலையே!

குன்னூரில் விபத்தான ராணுவத் தலைமைத் தளபதியின் ஹெலிகாப்டரிலும் அப்படித்தான். FDA எனும் (Flight data recorder) அந்தக் கறுப்புப் பெட்டியைத்தான் தேடியிருக்கின்றனர். 300 மீட்டர் தாண்டிக் கிடைத்த அந்தக் கறுப்புப் பெட்டியைப் பொருத்தவரை, இன்னும் முழுதாகச் சோதனை போடவில்லை என்றாலும், இது தற்காலிகமாக ஏற்பட்ட விபத்துதான் என்றும், இதில் வேண்டுமென்றே ஏற்பட்ட விபத்து இல்லை என்றும், 11.48–க்கு சூளூரில் இருந்து கிளம்பிய ஹெலிகாப்டரிடம் இருந்து 12.00 மணிக்குத் தகவல் தொடர்பு அற்றுப் போனதாகவும் தெரிவித்திருக்கிறார்கள்.

கறுப்புப் பெட்டி என்றால் என்ன… விமானத்தில் அது ஏன் முக்கியமான பாகமாக இருக்கிறது என்று பார்க்கலாம்.

Black Box in orange colour
Black Box in orange colour
Picasa

பொதுவாக கறுப்புப் பெட்டி இரண்டு இடத்தில் இருக்கும். ஒன்று ஹெலிகாப்டரின் உள்ளே முகப்பிலும் மற்றொன்று ஹெலிகாப்டரின் வால் பகுதியிலும் பொருத்தப்பட்டிருக்கும்.

கறுப்புப் பெட்டி என்றால், அது கருப்பு நிறத்தில் இருக்கும் என்றுதான் பொதுமக்கள் பெரும்பாலோரின் புரிதலாக உள்ளது. ஆனால், கறுப்புப் பெட்டியானது உண்மையில் ஆரஞ்சு நிறத்தில் இருக்கும். விபத்து நடைபெற்ற இடத்தில் அதனை எளிதாகக் கண்டுபிடிப்பதற்காக இந்த நிறம் பயன்படுத்தப்படுவதாக கூறப்படுகிறது.

கறுப்புப் பெட்டி யாரால் கண்டுபிடிக்கப்பட்டது?

முதன் முதலில் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த டேவிட் வாரன் என்பவரால் கண்டுபிடிக்கப்பட்டது கறுப்புப் பெட்டி. இதனைக் கண்டுபிடிக்க முக்கியக் காரணம், வாரனின் தந்தை பாஸ் ஸ்ட்ரைட் விமான விபத்தில் இறந்து போனதே! விபத்திற்கான காரணம் தெரியாமல் அதிகாரிகள் குழம்பிப் போகவே, இதைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் இறங்கினார் டேவிட் வாரன்.

அந்த முயற்சியின் பயனாக ஒரு சிறு கருவியைக் கண்டுபிடித்தார் டேவிட் வாரன். அவர் கண்டுபிடித்த கருவியை ஏற்றுக்கொண்ட ஆஸ்திரேலிய அரசு, அதை போயிங் 747 விமானத்தில் பயன்படுத்தியது.

விமானத்துறையைச் சேர்ந்தவர்கள் இதனை (Flight data recorder) என்று அழைக்கின்றனர். இந்தப் பெட்டியின் முகப்பில் (FLIGHT RECORDER DO NOT OPEN ) என்ற எச்சரிக்கை வாக்கியம் எழுதப்பட்டிருக்கும்.

ஹெலிகாப்டரின் முகப்பில் பொருத்தப்பட்டிருக்கும் (CVR - cockpit voice recorder) என்ற கறுப்புப் பெட்டி விமானியின் அறையில் இருக்கும். இது விமானியின் உரையாடல் மற்றும் விமானத்தின் மற்ற இயக்கங்களை மிகத் துல்லியமாக பதிவு செய்யும் .மேலும் இது 24 மணி நேரத்திற்கு மேல் தகவல்களைப் பதிவு செய்யும் வகையிலும் வடிவமைக்கப்பட்டிருக்கும். (FDR) என்ற கறுப்புப் பெட்டி ஹெலிகாப்டரின் வேகம், பறக்கும் உயரம், எரிபொருளின் கணக்கு, காலநிலை மாற்றம் போன்ற பல விவரங்களைச் சேமிக்கும்.

இத்தனை உறுதியானதா?

நெருப்பு, தண்ணீர் போன்ற எவ்வகையான பேராபத்திலும் அழிக்க முடியாதபடி இதன் கட்டுமானம் இருக்கும். பல அடுக்குகளைக் கொண்ட டைட்டானியம் மற்றும் ஹை ஸ்ட்ரென்த் ஸ்டீலால் உருவாக்கப்பட்டிருக்கும் இது. 1000 டிகிரி செல்சியஸ் வெப்பத்தைத் தாங்கும் திறனோடும், 20000 அடி உயரத்தில் இருந்து விழுந்தாலும் எதுவும் ஆகாதவாறும், கடலில் விழுந்து விபத்துக்குள்ளானாலும் 30 நாட்கள் வரை கட்டுப்பாட்டு அறைக்கு சமிக்ஞைகளைத் தெரிவிக்கும் வகையிலும் வடிவமைக்கப்பட்டது. மின்னணுப் பதிவு சாதனங்களின் ஒரு தொகுப்புதான் கறுப்புப் பெட்டி.

இதனைத் தொடர்ந்து ஒரு விபத்திலிருந்து மீட்கப்படும் கறுப்புப் பெட்டியை அதற்கென இருக்கும் ஆய்வுக் கூடத்தில் சிறப்பு அதிகாரிகளை வைத்து மட்டுமே பரிசோதனை செய்வர். ஆகையால் விமானம் அல்லது ஹெலிகாப்டரின் ஒட்டுமொத்தக் கட்டுப்பாடுகளையும் கறுப்புப் பெட்டி மிகத் துல்லியமாகப் பதிவு செய்யும் என்பதை அறிய முடிகிறது. எனவேதான் இது முக்கிய ஆதாரமாகக் கருதப்படுகிறது.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
குன்னூர் விபத்து
குன்னூர் விபத்து

இது ராணுவம் சார்ந்த விபத்து என்பதால் விபத்து நிகழ்ந்த குன்னூர் பகுதி முழுதையும் ராணுவம் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டுவந்துள்ளது. ஹெலிகாப்டர் விபத்து நடந்த நஞ்சப்பா சத்திரம் பகுதியில் விமானப்படை தளபதி விவேக் ராம் சவுத்ரி நேற்று ஆய்வு செய்தார். கைப்பற்றப்பட்ட இரண்டு கறுப்புப் பெட்டியை நேற்று அதிகாரிகள் கோவை சூலூர் விமானப்படை தளத்திற்கு வாகனத்தில் கொண்டு சென்றனர். இதை ஆய்வு செய்தபின்தான் விபத்துக்கான முழு விவரங்களும் தெரிய வரும். இவற்றை பெங்களூரு அல்லது டெல்லி எடுத்துச் சென்று ஆய்வு செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது .

கா.கீர்த்தனா, லிங்கேஸ்வரன்