Published:Updated:

Atal Tunnel: உலகின் நீளமான சுரங்கப்பாதை - திறக்கப்பட்ட முதல் 24 மணி நேரத்தில் 3 விபத்துகள்!

அடல் சுரங்கப்பாதை
அடல் சுரங்கப்பாதை

உலகிலேயே மிக நீளமான நெடுஞ்சாலை சுரங்கப்பாதையான அடல் சுரங்கப்பாதையை பிரதமர் மோடி, அக்டோபர் 3-ம் தேதி திறந்துவைத்தார். திறக்கப்பட்ட 24 மணிநேரத்துக்குள் சுரங்கப்பாதையில் 3 விபத்துகள் நிகழ்ந்திருக்கின்றன.

முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் கனவுத் திட்டமாக இருந்த சுரங்கப்பாதைத் திட்டத்தை முடித்த தற்போதைய மத்திய அரசு, அதற்கு அவரின் நினைவாக `அடல் சுரங்கப்பாதை’ என்று பெயரிட்டது. 9.2 கிலோமீட்டர் நீளம் உடைய இந்த இருவழி சுரங்கப்பாதை குதிரை லாட வடிவில் ஒற்றைக்குழாய் அமைப்பில் கட்டப்பட்டிருக்கிறது.

இதன் மூலம், ஹிமாச்சலப்பிரதேசத்தின் மணாலி முதல் லே-யின் லாஹால் இடையிலான தூரத்தை 46 கிலோமீட்டர் குறைக்கப்பட்டு, பயண நேரம் மூன்று மணி நேரம் வரை மிச்சமாகும். சுரங்கப்பாதையில் மணிக்கு 80 கிலோமீட்டர் வேகம் வரை செல்ல அனுமதிக்கப்பட்டிருக்கிரது. ஒரே நேரத்தில் 1,500 லாரிகள் அல்லது 3,000 கார்கள் வரை போக்குவரத்து நெரிசல் இல்லாமல் செல்ல முடியும் எனக் கூறப்படுகிறது. சரக்குகளை எளிதாகக் கொண்டு செல்ல முடிவதால், லாஹால் பள்ளத்தாக்கில் வசிக்கும் மக்களின் வாழ்வாதாரத்தை இந்தச் சுரங்கம் உயர்த்தும் என லாஹால் வியாபாரிகள் கருத்து தெரிவித்திருக்கின்றனர்.

அடல் சுரங்கப்பாதை
அடல் சுரங்கப்பாதை

இந்தநிலையில், பாதை திறக்கப்பட்ட முதல் 24 மணி நேரத்தில் மூன்று விபத்துகள் நிகழ்ந்திருக்கின்றன. வாகன ஓட்டிகள் அஜாக்கிரதையாக ஓட்டுவதால் விபத்துகள் ஏற்படுவதாகக் கூறப்படுகிறது. சுரங்கத்தில் காவல்துறை கண்காணிப்பு அளிக்காததே விபத்துக்குக் காரணம் என்று உள்ளூர் அதிகாரிகள் குற்றம்சாட்டுகின்றனர்.

உள்ளூர் அதிகாரிகளின் குற்றச்சாட்டை மறுத்திருக்கும் பாதுகாப்பு அமைச்சகத்தின் பிரிவான பி.ஆர்.ஓ எனப்படும் எல்லைச் சாலைகள் அமைப்பின் முதன்மைப் பொறியாளர் கே.பி.புருஷோத்தமன், போக்குவரத்தைச் சரிசெய்வதற்காக காவல்துறை தேவை என்பது குறித்து ஹிமாச்சலப்பிரதேச முதல்வர் அலுவலகம், உள்ளூர் நிர்வாகத்துக்கும் ஜூலை 3-ம் தேதியே கடிதம் மூலம் வலியுறுத்தியிருக்கிறார். மேலும், சுரங்கப் பாதுகாப்புக்காகத் தீயணைப்புத்துறை வீரர்களையும் பணியமர்த்தும்படி கோரப்பட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

அடல் சுரங்கப்பாதை
அடல் சுரங்கப்பாதை

மேலும் அவர் கூறுகையில், ``அக்டோபர் 4-ம் தேதி ஒரே நாளில் பதிவான மூன்று விபத்துகளுக்கும் வாகன ஓட்டிகளின் கவனமின்மைதான் காரணம். சுரங்கத்தின் நடுவில் வாகனங்களை நிறுத்த யாருக்கும் அனுமதி கொடுக்கப்படவில்லை. எனினும், வாகன ஓட்டிகள் நடுவில் நிறுத்தி செல்ஃபி எடுத்துக்கொண்ட சிசிடிவி காட்சிகள் பதிவாகியிருக்கின்றன.

`உலகின் நீளமான நெடுஞ்சாலை சுரங்கப்பாதை!'- அடல் சுரங்கப்பாதையை நாட்டுக்கு அர்ப்பணித்த மோடி #NowAtVikatan

பெரிய விபத்துகள் மற்றும் தாக்குதல்களைத் தடுப்பதற்காக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தீப்பற்றி எரியக்கூடிய பொருள்களான பெட்ரோல், எண்ணெய், திரவமாக்கப்பட்ட பெட்ரோல், சிலிண்டர்கள் மற்றும் வெடிபொருள்கள் போற்றவற்றை எடுத்துச் செல்லும் வாகனங்களுக்குச் சுரங்கத்தில் செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

அடல் சுரங்கப்பாதை திறப்புவிழாவில் மோடி, ராஜ்நாத் சிங்
அடல் சுரங்கப்பாதை திறப்புவிழாவில் மோடி, ராஜ்நாத் சிங்

தினசரி காலை 9 - 10 மற்றும் மாலை 4 - 5 என இரண்டு மணி நேரம், இரண்டு மணிநேரம் பராமரிப்புப் பணிக்காக சுரங்கப் பாதை மூடப்படுகிறது. பி.ஆர்.ஓ நிர்வாகம் சார்பில் அக்டோபர் 3-ம் தேதியே உள்ளூர் அதிகாரிகளுக்கு சுரங்கப்பாதையில் பாதுகாப்பு, தீயணைப்பு இயந்திரங்களை நிறுத்துமாறு நினைவூட்டப்பட்டது'' என்றும் புருஷோத்தமன் தெரிவித்தார்

அடுத்த கட்டுரைக்கு