Published:Updated:

விழுப்புரம்: ஆட்டோமீது மோதிய தனியார் பேருந்து; பறிபோன ஓட்டுநர் உயிர்! - சூறையாடப்பட்ட பேருந்து

சூறையாடப்பட்ட பேருந்து - விழுப்புரம்
News
சூறையாடப்பட்ட பேருந்து - விழுப்புரம்

ஆட்டோ மீது தனியார் பேருந்து மோதிய விபத்தில் ஆட்டோ ஓட்டுநர் உயிரிழந்தார். இதன் காரணமாக பேருந்து சூறையாடப்பட்ட சம்பவம் விழுப்புரத்தில் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

விழுப்புரம், ஊரல் கரைமேடு பகுதியைச் சேர்ந்தவர் அர்ஜுனன் (28). ஆட்டோ ஓட்டுநரான இவருக்குத் திருமணமாகி ஒன்றரை வயதில் ஆண் குழந்தை இருக்கிறது. நேற்று (2.12.2021) இரவு பானாம்பட்டு சாலை அருகே அர்ஜுனன் ஆட்டோவில் சென்றிருக்கிறார். அப்போது விழுப்புரத்திலிருந்து புதுவை நோக்கிச் சென்ற தனியார் பேருந்து ஒன்று ஆட்டோ மீது பலமாக மோதியிருக்கிறது. இந்தக் கோர விபத்தில், பேருந்து சக்கரத்தின் அடியில் சிக்கி ஆட்டோ ஓட்டுநர் அர்ஜுனன் பரிதாபமாக உயிரிழந்தார். உடனே அக்கம் பக்கத்தில் இருந்த அர்ஜுனனின் நண்பர்களும் உறவினர்களும் பேருந்தை மடக்கிப் பிடித்துள்ளனர். இந்த விபத்தைக் கண்டு அச்சமடைந்த பேருந்து ஓட்டுநரும் நடத்துனரும் அருகிலுள்ள காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளனர்.

விபத்தில் உயிரிழந்த ஆட்டோ ஓட்டுநர்
விபத்தில் உயிரிழந்த ஆட்டோ ஓட்டுநர்

ஆட்டோ ஓட்டுநர் உயிரிழந்ததால் ஆத்திரமடைந்த அவரின் நண்பர்கள், உறவினர்கள் பேருந்தின் அனைத்துக் கண்ணாடிகளையும் அடித்து நொறுக்கியுள்ளனர். மேலும் பேருந்தின் பின்புறத்தில் தீயிட்டும் கொளுத்தியுள்ளனர். இதனால் பயணிகள் பலரும் அச்சமடைந்து ஓட்டம் பிடித்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த காவல்துறை, தீயணைப்புத்துறையினர் தீயை அணைத்ததோடு உயிரிழந்த ஆட்டோ ஓட்டுநரின் உறவினர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

`பேருந்து ஓட்டுநர், நடத்துநர் மீது நடவடிக்கை எடுக்காவிட்டால்... இறந்த அர்ஜுனனின் உடலை எடுக்க விட மாட்டோம்' என்று இறந்தவரின் உறவினர்கள் கூச்சலிட்டுள்ளனர். இதனால் அங்கு பதற்றமான சூழல் மேலும் அதிகரித்தது. ஆகவே, கூடுதலான காவலர்களைப் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்திய காவல்துறை, அதன் பின்னர் அர்ஜுனனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தது.

உடைக்கப்பட்ட தனியார் பேருந்து
உடைக்கப்பட்ட தனியார் பேருந்து

மேலும், இந்தச் சம்பவம் தொடர்பாக வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர் விழுப்புரம் நகர காவல்துறையினர். தனியார் பேருந்து மோதிய விபத்தில் ஆட்டோ ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியிருக்கிறது.