Published:Updated:

அம்மாவைப் பார்க்க வரேன்னு சொன்னியே.. ஏன் வரலை? -அவினாசி சாலை விபத்தால் கதறிய பெற்றோர்

கதறிபடி மருத்துவமனைக்கு வந்த பெற்றோர்
கதறிபடி மருத்துவமனைக்கு வந்த பெற்றோர்

விபத்து நடந்ததே தெரியாமல் உறக்கத்திலேயே அந்த 19 உயிர்களும் போயிருக்கின்றன. எந்தவித கதறல்களும் அழுகையும் பெரிதாக அவர்களிடமிருந்து வரவில்லை என பேருந்திலிருந்து காயங்களோடு உயிர்பிழைத்தவர்கள் கூறினர்.

நேற்று முன்தினம் இரவு 9.30 மணியளவில் கர்நாடக மாநிலம் பெங்களூரிலிருந்து கேரள மாநிலம் எர்ணாகுளம் நோக்கி 48 பயணிகளுடன் கேரள அரசு சொகுசுப் பேருந்து ஒன்று கிளம்பியது. அந்தப் பேருந்தானது விடியற்காலை 3.15 மணியளவில் திருப்பூர் மாவட்டம், அவினாசி அருகே தேசிய நெடுஞ்சாலையில் சென்றுகொண்டிருந்தது. அதேநேரத்தில் கொச்சியிலிருந்து சேலம் நோக்கி டைல்ஸ் ஏற்றிக்கொண்டு கண்டெய்னர் லாரி ஒன்று வந்திருக்கிறது.

விபத்து
விபத்து

கண்டெய்னர் லாரியின் டிரைவர் ஹேமராஜ் தூக்க கலக்கத்தில் இருக்க, கட்டுப்பாட்டை மீறிய லாரி பைபாஸ் சாலையிலிருந்து விலகி சென்டர்மீடியனை உடைத்துக்கொண்டு எதிர்திசையில் பாய்ந்திருக்கிறது. அந்தநேரம் பார்த்து அந்த கேரள சொகுசுப்பேருந்து அங்கு வர, லாரியினுடைய கண்டெய்னர் பகுதி பேருந்தின் மீது பயங்கரமாக மோதியிருக்கிறது. இதில் பேருந்தின் வலதுபுறம் முழுவதுமாக சுக்குநூறாக நொறுங்கிப் போக, அந்தப் பகுதிகளில் அமர்ந்து பயணித்த 14 ஆண்கள், 5 பெண்கள் என மொத்தம் 19 பேரும் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.

விபத்து குறித்து தகவலறிந்ததும் காவல்துறையினர், தீயணைப்புத் துறையினர் மற்றும் மாவட்ட அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். 20 ஆம்புலன்ஸ்கள் கொண்டு வரப்பட்டு விபத்தில் சிக்கியவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். பேருந்தின் பாகங்களோடு இறந்தவர்களின் உடல்கள் சிக்கிக்கொண்டதால், மீட்கத் தாமதம் ஏற்பட்டது.

பிரேதப் பரிசோதனைக் கூடத்தில் கூட்டம்
பிரேதப் பரிசோதனைக் கூடத்தில் கூட்டம்

டிரைவர் சீட்டிலிருந்து அவரது உடலை அரை மணி நேரமாக போராடி பெயர்த்தெடுத்தனர். கிட்டத்தட்ட 5 மணி நேரங்களுக்கு மேலாக இந்த மீட்புப் பணிகள் நடைபெற்றன. விபத்தில் பலியான 19 பேரின் உடல்களும் திருப்பூர் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட, காயமடைந்தோர் அருகிலுள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர்.

இந்த விபத்து பற்றி தகவல் கொடுத்த சில மணி நேரங்களிலேயே கேரள மாநிலம், பாலக்காடு மாவட்ட கலெக்டர் பாலமுரளி, எஸ்.பி சிவ விக்ரம், கேரள வேளாண் துறை அமைச்சர் சுனில்குமார், போக்குவரத்துத்துறை அமைச்சர் சசீந்திரன், எம்.பி-க்கள் ஸ்ரீகண்டன், ரம்யா ஹரிதாஸ் ஆகியோர் திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு வந்தனர். உயிரிழந்தவர்களின் பெற்றோர்கள், உறவினர்கள் தலையில் அடித்துக்கொண்டு கதறியபடி மருத்துவமனைக்குள் நுழைந்தது அங்கிருந்தவர்களை கலங்கடித்தது.

`உன்னி என் ஜீவனடா நீ... திரும்பி வந்துடடா!... அம்மாவை பார்க்க வரேன்னு சொன்னியே... ஏன் வரலை? என்று பெற்றோர்கள் கதறியழுதது கண்ணீர் வரவழைத்தது. ஒவ்வொரு உடல்களாக பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டு, அவர்களுடைய குடும்பத்தாரிடம் ஒப்படைத்து அனுப்பி வைக்கப்பட்டன. அழுதபடியே ஆம்புலன்ஸில் உடலை ஏற்றிக்கொண்டு ஒவ்வொரு குடும்பமாக வெளியேறிய காட்சி நெஞ்சடைக்க வைத்தது.

ஆம்புலன்ஸில் உடல்கள் அனுப்பி வைக்கப்பட்ட காட்சி
ஆம்புலன்ஸில் உடல்கள் அனுப்பி வைக்கப்பட்ட காட்சி

விபத்தில் பலியானவர்கள் பெரும்பாலானோர் 40 வயதுக்கு உட்பட்டவர்கள்தான். அதிகாலை 3.15 மணிக்கு நடந்த இந்த விபத்தின்போது பயணிகள் அனைவரும் நல்ல உறக்கத்தில் இருந்திருக்கின்றனர். இன்னும் சொல்லப்போனால், விபத்து நடந்ததே தெரியாமல் உறக்கத்திலேயே அந்த 19 உயிர்களும் போயிருக்கின்றன. எந்தவித கதறல்களும், அழுகையும் பெரிதாக அவர்களிடமிருந்து வரவில்லை என பேருந்திலிருந்து காயங்களோடு உயிர்பிழைத்தவர்கள் கூறினர்.

கண்டெய்னர் லாரி ஓட்டுநரின் தூக்கமே 19 உயிர்கள் பலியாகக் காரணமாக இருந்திருக்கிறது. அவரை போலீஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணையின் முடிவில்தான் விபத்துக்கான முழுக் காரணமும் தெரியவரும் என போலீஸார் கூறுகின்றனர்.

அடுத்த கட்டுரைக்கு