Published:Updated:

`ராணுவக் கிடங்காக மாறிய விவசாயி வீடு!'- செங்கல்பட்டில் குவியல் குவியலாக கைப்பற்றப்பட்ட குண்டுகள்

வெடிக்காத 3 ராக்கெட் லாஞ்சர்கள், சுமார் 60-க்கும் மேற்பட்ட வெடித்த நிலையில் உள்ள குண்டுகளின் பாகங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

கைப்பற்றப்பட்ட வெடிகுண்டுகள்
கைப்பற்றப்பட்ட வெடிகுண்டுகள்

செங்கல்பட்டு அருகே விவசாய நிலத்தில் வெடிக்காமல் இருந்த ராணுவ குண்டை வீட்டுக்கு எடுத்துச் சென்றபோது தவறிவிழுந்து வெடித்தது. குண்டுவெடிப்பில் காயமுற்ற ராமகிருஷ்ணன் மற்றும் கோவிந்தம்மாள் ஆகியோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், அந்த வீட்டில் மறைமலைநகர் காவல்துறையினர் சோதனை நடத்தினர். அப்போது குவியல்குவியலாய் ராணுவ குண்டுகள் இருந்தது கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

கைப்பற்றப்பட்ட வெடிகுண்டுகள்
கைப்பற்றப்பட்ட வெடிகுண்டுகள்

செங்கல்பட்டு அடுத்த அனுமந்தபுரம் பகுதியில் வசிப்பவர் ராமகிருஷ்ணன். இவருக்குச் சொந்தமாக அனுமந்தபுரத்தில் உள்ள ராணுவ பயிற்சி மையத்துக்கு அருகில் விவசாய நிலம் உள்ளது. வழக்கம்போல் இன்று தன்னுடைய விவசாய நிலத்துக்குச் சென்றார். நிலத்தைச் சுற்றிபார்த்துவிட்டு வீட்டுக்கு கிளம்பும்போது அங்கு குண்டு ஒன்று இருந்ததைக் கண்டார். உடனே அதை எடுத்தவர் வீட்டுக்கு கிளம்பும்போது இருசக்கர வாகனத்தின் முன்பகுதியில் அதை வைத்துக்கொண்டார்.

அனுமந்தபுரம் சாலையில் செல்லும்போது இருசக்கர வாகனத்தில் வைத்திருந்த அந்தக் குண்டு தவறி கீழேவிழுந்து வெடித்தது. இதில் ராமகிருஷ்ணனுக்கு கை, கால் மற்றும் உடலில் பலத்த காயங்கள் ஏற்பட்டன. மேலும், வெடிகுண்டு சிதறியதில் சாலையோரத்தில் சலவைப் பெட்டி கடையில் வேலை செய்துகொண்டிருந்த கோவிந்தம்மாள் என்பவரின் மீதும் வெடிகுண்டு துகள்கள் பாய்ந்தன. அவரின் மார்புப் பகுதியில் வெடிகுண்டின் பாகங்கள் தைத்தன. இருவரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

கைப்பற்றப்பட்ட வெடிகுண்டுகள்
கைப்பற்றப்பட்ட வெடிகுண்டுகள்

இந்தநிலையில் ராமகிருஷ்ணன் வீட்டில் காவல்துறையினர் சோதனை செய்தனர். அப்போது வீடு முழுக்கவே வெடிகுண்டுகள் குவியல் குவியலாய் கிடந்தன. வெடிக்காத 3 ராக்கெட் லாஞ்சர்கள், சுமார் 60-க்கும் மேற்பட்ட வெடித்த நிலையில் உள்ள குண்டுகளின் பாகங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. ஒருசில குண்டுகள் பாதி வெடித்த நிலையிலும் இருந்திருக்கின்றன. இந்தக் குண்டுகள் அனைத்தும் காவல்துறையினரால் கைப்பற்றப்பட்டு முருகமங்களம் வெடிகுண்டு கிடங்கில் வைத்து பாதுகாக்கப்பட்டு வருகிறது.

அனுமந்தபுரத்தில் வெடிவிபத்து நடந்த இடத்துக்குச் சென்றோம். வெடிகுண்டு வெடித்துச் சிதறியபோது அருகில் உள்ள சுவர், மரம் இரும்புக் கம்பி என அனைத்தையும் துளைத்திருக்கிறது. இந்த வகை குண்டுகள் வெடித்தால் அதன் பாகங்கள் சுற்றுவட்டாரம் முழுவதும் சிதறி சேதத்தை ஏற்படுத்தும் வகையில் இருந்திருக்கிறது.

வீடு
வீடு

அனுமந்தபுரம் பகுதி மக்களிடம் பேசினோம். ``ஊருக்குப் பக்கத்தில் இருக்கும் வனப்பகுதியில் ராணுவ பயிற்சி மையம் இருக்கிறது. கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்புவரை ராணுவ பயிற்சிகள் நடைபெற்றுவந்தன. ஆடு, மாடு மேய்க்கப் போகும் கிராமத்தினர் வனப்பகுதியிலும் அங்கே இருக்கும் வெடிகுண்டு பாகங்களைச் சேமித்து பழைய இரும்புக் கடைகளில் போட்டுவிடுவார்கள்.

இதில் அவர்களுக்கு சிறு தொகை கிடைக்கும். கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருப்போரூர் அருகே குளப்பகுதியில் இதுபோன்று கேட்பாரற்றுக் கிடந்த குண்டுகளை எடுத்தபோது வெடித்ததில் இரண்டு இளைஞர்கள் பலியானார்கள்.

ராணுவ பயிற்சி நடைபெறும் இடம்
ராணுவ பயிற்சி நடைபெறும் இடம்

இதனால் பழைய இரும்புக் கடைகளிலும் வெடிகுண்டு பாகங்களை வாங்குவதைத் தவிர்த்து வந்தார்கள். இந்த நிலையில் ராமகிருஷ்ணன் அதன் ஆபத்துகளை உணராமலேயே இவற்றைச் சேமித்து வந்திருக்கிறார். ஆனால், இன்னும் நிறைய வெடிக்காத குண்டுகள் அங்கே இருக்கின்றன. காவல்துறையினர் மோப்ப நாய்களை வைத்து அவற்றை அப்புறப்படுத்த வேண்டும்” என்கின்றனர்.