Published:Updated:

நெல்லை: சரக்கு ரயில் மீது ஏறி செல்ஃபி; மின்கம்பியில் உரசிய கை! - தந்தை கண்முன்னே நடந்த சோகம்

நெல்லை சந்திப்பு ரயில் நிலையம்
நெல்லை சந்திப்பு ரயில் நிலையம்

நெல்லை ரயில் நிலையத்துக்கு வந்த சரக்கு ரயிலிலிருந்து அரிசி இறக்கும் பணி நடந்துகொண்டிருந்தது. அனைவரும் அதை கவனித்துக்கொண்டிருந்தபோது மாணவன் ஜானேஸ்வர் செல்ஃபி எடுக்க முயன்றார்.

நெல்லையிலுள்ள தமிழக நுகர்பொருள் வாணிபக் கிடங்கில் இளநிலை ஆய்வாளராகப் பணியாற்றிவருபவர், மகேஷ்குமார். சில வாரங்களுக்கு முன்பு நெல்லைக்கு மாறுதலாகி வந்த அவர், குடும்பத்தையும் அழைத்து வந்து தாழையூத்து சர்ச் தெருவில் தங்கியிருந்தார்.

ரயில்
ரயில்

அவரது மகன் ஜானேஸ்வர், பத்தாவது படித்துவந்தார். எப்போதும் துறுதுறுவென எதையாவது செய்துகொண்டிருக்கும் ஜானேஸ்வரை, மகேஷ்குமார் நேற்று தன்னுடன் நெல்லை சந்திப்பு ரயில் நிலையத்துக்கு அழைத்துவந்திருக்கிறார்.

நெல்லை ரயில் நிலையத்தின் நான்காவது நடை மேடைக்கு அரிசி ஏற்றி வந்த சரக்கு ரயில் வந்தது. அதிலிருந்து அரிசி மூட்டைகளை கிட்டங்கிக்கு எடுத்துச் செல்லும் பணியில் லாரிகள் ஈடுபட்டதை மகேஷ்குமார் கண்காணித்துக்கொண்டிருந்தார். அவர் மகன் ஜானேஸ்வரும் அதைப் பார்த்துக்கொண்டிருந்தார்.

செல்ஃபி மோகத்தில் உயிரிழந்த மாணவன் ஜானேஸ்வர்
செல்ஃபி மோகத்தில் உயிரிழந்த மாணவன் ஜானேஸ்வர்

ஆர்வம் மிகுதியிலிருந்த ஜானேஸ்வர், யாரும் கவனிக்காத நேரத்தில் சரக்கு ரயிலின் இன்ஜின் மீது ஏறி செல்ஃபி எடுக்க முயன்றிருக்கிறார். அப்போது எதிர்பாராத வகையில் ரயிலின் மீது சென்றுகொண்டிருந்த உயர் அழுத்த மின்கம்பியின் மீது கை பட்டிருக்கிறது. அதனால் கண்ணிமைக்கும் நேரத்தில் மின்சாரம் தாக்கியதில் உடல் கருகியது.

செல்ஃபி மோகத்தில் ரயிலின் மீது ஏறிய ஜானேஸ்வர் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே உடல் கருகி உயிரிழந்தார். தந்தையின் கண்ணெதிரில் நடந்த இந்தச் சம்பவத்தால் அங்கிருந்த அனைவருமே அதிர்ச்சியடைந்தார்கள்.

நெல்லை சந்திப்பு ரயில் நிலையம்
நெல்லை சந்திப்பு ரயில் நிலையம்

நெல்லை சந்திப்பு ரயில்வே போலீஸார் வழக்கு பதிவு செய்து, மாணவன் ஜானேஸ்வர் உடலைக் கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்கு அனுப்பிவைத்தார்கள். பொது இடங்களிலும், ஆபத்தான சூழலிலும் செல்ஃபி எடுப்பதை அனைவருகே தவிர்க்க வேண்டும் என போலீஸார் தெரிவித்தனர்.

அடுத்த கட்டுரைக்கு