கரூர்: கரையொதுங்கிய உடைகள்! குளத்தில் குளிக்கச் சென்ற சகோதரர்களுக்கு நேர்ந்த சோகம்

இருவரது உடைகளும் குளத்தின் கரையில் ஒதுங்கியிருந்துள்ளன. இதனால், அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் இதுகுறித்து தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் அளித்தனர்.
கரூர் அருகே குளத்தில் குளிக்கச் சென்ற அண்ணன், தம்பி இருவரும் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம், அவர்களின் உறவினர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

கரூர் மாவட்டம், தோகைமலை ஒன்றியத்தில் உள்ள எட்டமநாயக்கன்பட்டியைச் சேர்ந்தவர் முனியாண்டி. இவரது மகன் மூர்த்தி ( 21). மூர்த்தி திருப்பூரில் உள்ள பனியன் கம்பெனியில் பணிபுரிந்து வருகிறார்.
இவரது சித்தப்பா மகன் கோபி (21). அவர் உள்ளூரில் வசித்து வந்தார். பொங்கல் பண்டிகையையொட்டி மூர்த்தியும், ராஜாவும் சொந்த ஊரில் பொங்கல் விழாவைக் கொண்டாடியுள்ளனர்.

இந்த நிலையில், நேற்று காலை தோகைமலையை அடுத்த சின்னரெட்டிப்பட்டி கிராமத்தில் உள்ள ஆவிக்குளத்துக்குக் குளிக்க செல்வதாக கூறிவிட்டு, இருவரும் சென்றுள்ளனர். ஆனால், நீண்டநேரம் ஆகியும் இருவரும் வீடு திரும்பவில்லை. இதனால், சந்தேகம் அடைந்த உறவினர்கள் குளத்துக்குச் சென்று பார்த்தனர்.
அப்போது, இருவரது உடைகளும் குளத்தின் கரையில் ஒதுங்கியிருந்துள்ளன. இதனால், அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் இதுகுறித்து தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் அளித்தனர். அதன் பேரில், சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் குளத்தில் இருந்த மூர்த்தி மற்றும் கோபி ஆகியோரது சடலங்களையும் மீட்டனர்.

இந்த சம்பவம் குறித்து அறிந்த தோகைமலை காவல் நிலைய போலீஸார் சம்பவ இடத்துக்கு வந்து இருவரது உடல்களை மீட்டு, மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து முனியாண்டி அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த தோகைமலை காவல் நிலைய போலீஸார், விசாரித்து வருகின்றனர்.