Published:Updated:

மதுரையில் கட்டடம் இடிந்து விபத்து - ஒருவர் பலி 3 பேர் படுகாயம்!

மதுரை செக்கானூரனி கட்டட இடிபாட்டில் 7 நபர்கள் சிக்கினர். இதில் ஒருவர் பலி, 3 நபர்கள் மீட்கப்பட்டு சிகிச்சையில் உள்ளனர், மீதம் 3 நபர்கள் மீட்கப்பட்டுவருகின்றனர்.

விபத்து
விபத்து

மதுரையை அடுத்த செக்கானூரணி பகுதியில் உள்ள மாதவன் என்பவருக்கு சொந்தமான இடம் உள்ளது. இதில் முறையான அனுமதி இல்லாமல் 3 மாடிக் கட்டடம் எழுப்பப்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் இன்று மாலை திடீரென அந்தக் கட்டடம் இடிந்து கீழே சரியத் தொடங்கியுள்ளது. யாரும் எதிர்பாராத விதமாக விழுந்த நிலையில். அந்தக் கட்டட இடிபாட்டில் 7 தொழிலாளர்கள் சிக்கினர். அதைத் தொடர்ந்து தீயணைப்பு துறையினர் விரைந்து மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.

படுகாயம்
படுகாயம்

சம்பவ இடத்தில் மாவட்ட ஆட்சியர் டி.எஸ்.ராஜசேகர், எஸ்.பி. மணிவண்ணன், தென்மண்டல ஐ.ஜி ஆனிவிஜயா ஆகியோர் நேரில் சென்று மீட்புப் பணிகளை பார்வையிட்டு வருகின்றனர். அப்போது முருகன், ராஜேஸ், கார்த்திக், காசிநாதன் ஆகிய 4 தொழிலாளர்கள் மீட்கப்பட்டு அரசு ராசாசி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதில் காசிநாமதன் என்பவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

மேலும் முத்துபாண்டி, பாலு உள்ளிட்ட 3 பேர் கட்டடத்தில் சிக்கியுள்ளனர். அவர்களை மீட்கும் பணிகள் நடைபெற்றுவருகிறது. ஒரு தளத்துக்கு மட்டுமே அனுமதி பெறப்பட்ட நிலையில் விதிகளை மீறி 3 மாடிகளைக் கட்டியதாக வீட்டின் உரிமையாளர் மாதவன் போலீஸாரால் கைது செய்யப்பட்டார்.

கட்டிடம் இடிந்தது
கட்டிடம் இடிந்தது

மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் 3 நபர்களை பார்வையிட்ட பிறகு, மருத்துவமனை டீன் வனிதா செய்தியாளர்களிடம், "அரசு ராசாசி மருத்துவமனையில் அனைத்து மருத்துவக் குழுக்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. தற்போது சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள தொழிலாளிகளில் கார்த்திக் என்ற தொழிலாளி மட்டும் தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளதால் அவருடைய நிலைமை மோசமாக உள்ளது. மற்ற இருவரும் நலமாக இருக்கிறார்கள்'' என்றார்.