சேலம், ஏற்காடு மலைப்பாதையில் நேற்று மதியம் இரண்டு சக்கர வாகனம் தடுப்புச்சுவரில் மோதி விபத்துக்குள்ளானதில், தந்தை மற்றும் மகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டத்தைச் சேர்ந்தவர் இளங்கோவன். இவரின் மகள் யோகேஸ்வரி. கடந்த 3-ம் தேதி சேலம் கன்னங்குறிச்சி ஹவுசிங் போர்டில் வசித்து வரும் கோகுல்நாத் என்பவருடன் யோகேஸ்வரிக்கு திருமணம் நடந்தது. இந்நிலையில், நேற்று முந்தினம் மகளைப் பார்க்க இளங்கோவன் சேலம் வந்துள்ளார். இரவு மகள் வீட்டிலேயே தங்கியுள்ளார். மறுநாள் மருமகன் வேலை தொடர்பாக கோவைக்கு காரில் கிளம்பி சென்றுள்ளார். இதனால் வீட்டில் இருந்த மகள் யோகேஸ்வரி தன் தந்தையை, ஏற்காடு அழைத்துச் செல்லுமாறு கேட்டுள்ளார். எனவே, நேற்று காலை தன் மருமகனின் புல்லட்டில் மகளுடன் கிளம்பி ஏற்காடு சென்றுள்ளார் இளங்கோவன்.
அங்கு சுற்றிப்பார்த்துவிட்டு, திரும்புகையில் ஏற்காடு மலைப்பாதையில் 5வது கொண்டை ஊசி வளைவு அருகே புல்லட் கட்டுப்பாட்டை இழந்தது. இதனால் இளங்கோவன் என்ன செய்வதென்று தெரியாமல் தடுப்புச்சுவரில் மோதியுள்ளார். இதில் புல்லட்டுடன் தூக்கி வீசப்பட்ட இளங்கோவன் மற்றும் யோகேஸ்வரி 40 அடி பள்ளத்தில் விழுந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். பின்னர், அவ்வழியே ஏற்காட்டுக்குச் சென்ற வாகன ஓட்டிகள் 108 ஆம்புலன்ஸ் மூலம் சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்து வந்த உறவினர்கள் இளங்கோவன் மற்றும் யோகேஸ்வரி உடல்களைப் பார்த்து கதறி அழுதனர். திருமணமாகி ஒரு மாதத்தில் பெண்ணும், அவரின் அப்பாவும் விபத்தில் உயிரிழந்த சம்பவம் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியது.