Published:Updated:

`கீழே கடல், கண்ணை இறுக்க மூடிக்கிட்டு கதறினேன்!’ - விபத்தில் உயிர்பிழைத்த ஓட்டுநரின் திகில் அனுபவம்

பாம்பன் தடுப்பு சுவரில் மோதி ஆபத்தாக நிற்கும் ஆம்னி பேருந்து

``மேலே இருந்து பார்த்தபோது, கீழே கடல் தெரிந்தது. உயிர் பிழைக்க மாட்டேன் என்றுதான் நினைத்தேன். சாவு என் கண்முன்னே நின்றது. கீழே பார்க்காமல் கண்ணை இறுக்க மூடிக்கொண்டு, `கடவுளே என்னை காப்பாத்திடு’ எனக் கதறினேன். என் மனைவி, குழந்தைகளை நினைத்துதான் அழுகை அதிகமாக வந்தது...’’

ராமநாதபுரம் மற்றும் ராமேஸ்வரம் தீவை இணைக்கக் கூடிய பாம்பன் பாலத்தில், இன்று காலை நடந்த பேருந்து விபத்து அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. காரணம், விபத்தில் சிக்கிய ஆம்னி பேருந்து பாம்பன் பாலத்தின் தடுப்புச்சுவர் மீது மோதி, மயிரிழையில் கடலுக்குள் விழாமல் நிறுத்தப்பட்டு இருப்பதைப் பார்த்து மக்கள் அதிர்ச்சியில் உறைந்து போனார்கள் என்று சொன்னால் மிகையாகாது. ஓட்டுநரின் சாமர்த்தியத்தால்தான் பேருந்து கடலுக்குள் விழாமல் தடுக்கப்பட்டதாக, விபத்தை நேரில் கண்ட சுற்றுலா பயணிகள் தெரிவிக்கின்றனர்.

இந்த விபத்தில் படுகாயம் அடைந்து ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ஆம்னி பேருந்து ஓட்டுநர் கிருஷ்ணமூர்த்தியை சந்தித்தோம்...

ஆம்னி பேருந்து ஓட்டுநர் கிருஷ்ண மூர்த்தி
ஆம்னி பேருந்து ஓட்டுநர் கிருஷ்ண மூர்த்தி

``எனக்கு, சேலம் மாவட்டம் வாழப்பாடி பகுதி சொந்த ஊர். நேற்று மாலை வழக்கம்போல் சென்னையில் இருந்து 19 பயணிகளுடன் புறப்பட்டு வந்தேன். ராமநாதபுரத்திலேயே பாதி பயணிகள் இறங்கி விட்டனர். மீதம் இருந்த சிலரும் வரும் வழியிலேயே அவரவர் ஊரில் இறங்கினர். ஒரேயொரு பயணியுடன் மட்டுமே ராமேஸ்வரம் சென்றுகொண்டிருந்தேன்.

அதிகாலை பாலத்தில் சென்றபோது எனக்கு முன்னால் சென்ற கார் திடீரென நின்றது. அதன் பின்னால் மோட்டார் சைக்கிளில் சென்ற நபரும் அந்த கார் மீது மோதி விடாமல் இருப்பதற்காக நின்றார். அவர்கள் இருவர் மீதும் மோதாமல் இருக்க எதிர் திசையில் பேருந்தைத் திருப்ப வேண்டிய கட்டாயம் எனக்கு ஏற்பட்டது. அந்தச் சமயத்தில்தான் எதிரே அரசுப் பேருந்து வந்தது. அதன் மீது மோதிவிடக் கூடாது என எவ்வளவு முயன்றும் என்னால் முடியவில்லை. பேருந்து மீது மோதிய நிலையில் கட்டுப்பாட்டை இழந்து கடலை நோக்கிச் சென்ற பேருந்தை, எப்படியாவது நிறுத்த வேண்டும் என பிரேக்கை அழுத்திப் பிடித்து, தடுப்புசுவர் மீது மோதி நிறுத்தினேன்.

இதில் என்னுடைய கால் சிக்கிக்கொண்டது. மேலே இருந்து பார்த்தபோது, கீழே கடல் தெரிந்தது. நான் உயிர் பிழைக்க மாட்டேன் என்றுதான் நினைத்தேன். சாவு என் கண்முன்னே நின்றுகொண்டிருந்தது. பின்னர் கீழே பார்க்காமல் கண்ணை இறுக்க மூடிக்கொண்டு, `கடவுளே என்னைக் காப்பாற்றி விடு’ எனக் கதறி அழுதேன். கால் மாட்டியிருந்த வலியைவிட, என் மனைவி, குழந்தைகளை நினைத்துதான் அழுகை அதிகமாக வந்தது. இப்போது வரை என் இதயத்தின் படபடப்பு நிற்கவில்லை. என் மனைவி, குழந்தைகளை நேரில் பார்த்தால்தான் நான் உயிரோடு இருக்கிறேன் என்ற மனநிலை தோன்றும்’’ என‌ மிரட்சி விலகாமல் கூறினார்.

அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் கிருஷ்ணமூர்த்தி
அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் கிருஷ்ணமூர்த்தி

விபத்துகளை தவிர்க்கவும் உயிரை தற்காத்துக் கொள்ளவும், சாலையில் அதிவேகம் கூடாது, சடன் பிரேக் கூடாது, தொட்டுவிடும் தூரத்தில் முன்னால் செல்லும் வாகனத்தை பின் தொடர்ந்து செல்லக் கூடாது உள்ளிட்ட `கூடாதுகள்’ பின்பற்றப்பட வேண்டியது அவசியம்.