Published:Updated:

ம.பி: கட்டுப்பாட்டை இழந்து கால்வாயில் கவிழ்த்த பேருந்து; 39 பேர் பலி! - தொடரும் மீட்புப் பணிகள்

பேருந்து விபத்து
பேருந்து விபத்து ( ANI )

இன்று காலை மத்தியப் பிரதேசத்தில் பேருந்து ஒன்று கால்வாயில் மூழ்கியதில் 39 பேர் பலியாகியிருக்கிறார்கள். இறந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.

மத்தியப் பிரதேச மாநிலத்திலுள்ள சித்தி (Sidhi) மாவட்டத்திலிருந்து சட்னாவுக்கு (Satna) ஒரு பேருந்து இன்று காலை 50-க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிக்கொண்டு புறப்பட்டது. இந்தப் பேருந்து பாட்னா அருகிலுள்ள பன்சாகர் (Bansagar) பகுதியில் சென்றுகொண்டிருக்கும்போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து அருகிலிருந்த கால்வாயில் கவிழ்ந்தது.

பேருந்து விபத்து
பேருந்து விபத்து
ANI

கால்வாய் மிக ஆழமாக இருந்ததால், பேருந்து உள்ளே மூழ்கியது. விபத்து நடைபெற்ற இடத்துக்கு விரைந்த மீட்புப்படையினர் மீட்புப்பணியைத் தொடங்கினர். இந்த விபத்தில், பேருந்தினுள் பயணித்த 39 நபர்களின் சடலங்கள் இதுவரை மீட்கப்பட்டுள்ளன. இறந்தவர்களின் எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது. தேடுதல் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இது குறித்துப் பேசிய காவல்துறை அதிகாரி உமேஷ் ஜோகா (Umesh Joga), ``காலை 7:30 மணியளவில் இந்த விபத்து நடந்திருக்கிறது. இந்தப் பேருந்தில் பயணித்த ஏழு பேர் தப்பித்துக் கரை சேர்ந்திருக்கிறார்கள். இந்தப் பேருந்தில் 50-க்கும் அதிகமானவர்கள் பயணித்ததாகத் தெரியவந்திருக்கிறது. மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்றுவருகின்றன" என்று கூறினார்.

இந்தத் துயரச் சம்பவத்தை அடுத்து, மத்தியப் பிரதேசத்தில் உள்துறை அமைச்சர் அமித் ஷா கலந்துகொள்ளவிருந்த ஒரு முக்கிய நிகழ்ச்சி ரத்துசெய்யப்பட்டிருக்கிறது. சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த எஸ்.டி.ஆர்.எஃப் (SDRF) மற்றும் நீச்சல் வீரர்கள் மீட்புப்பணியில் தொடர்ந்து ஈடுபட்டுவருகிறார்கள். கால்வாயின் நீரோட்டத்தைக் குறைப்பதற்கு, நீர் பன்சாகர் கால்வாயிலிருந்து சிஹாவால் (Sihawal) கால்வாய்க்கு மாற்றிவிடப்பட்டிருக்கிறது.

இந்த விபத்து குறித்து அம்மாநில முதல்வர் சிவராஜ்சிங் சௌகான் பேசுகையில், ``இது மிகவும் துரதிர்ஷ்டவசமான விபத்து. மீட்புப்பணிகள் குறித்துச் சம்பந்தப்பட்ட அதிகாரிகளோடு தொடர்ந்து பேசிவருகிறேன். மனதுக்குப் பெரும் வேதனையளிக்கிறது. சம்பவ இடத்துக்கு அமைச்சர்கள் விரைந்திருக்கிறார்கள். இந்த விபத்தில் இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு 5 லட்சம் ரூபாய் உதவி உடனடியாக வழங்கப்படும். அனைவரும் பொறுமையாக இருக்க வேண்டும் என்பதே எனது வேண்டுகோள்" என்று தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார்.

"சித்தியில் நடந்திருப்பது ஒரு சோகமான சம்பவம். இந்த விபத்தின் மீட்புப் பணிகள் குறித்து முதல்வர், நிமிடத்துக்கு நிமிடம் கேட்டறிந்துகொண்டிருக்கிறார். முதல்வரின் அறிவுறுத்தலின் பெயரில் சம்பவ இடத்துக்கு விரைந்துகொண்டிருக்கிறேன். அங்கிருக்கும் அதிகாரிகள் அளித்திருக்கும் தகவல்கள்படி, சுமார் 30 உடல்கள் மீட்கப்பட்டுள்ளன" என்று மூத்த அமைச்சர் துளசி ராம் சிலாவத் தெரிவித்திருக்கிறார்.

விபத்தில் உயிரிழந்தவர்களின் உறவினர்களுக்கு பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து தலா ரூ. 2 லட்சம் ரூபாய் தருவதாக நரேந்திர மோடி ஒப்புதல் அளித்திருக்கிறார். பலத்த காயமடைந்தவர்களுக்கு ரூ. 50,000 வழங்கப்படும் என பிரதமர் அலுவலகம் தெரிவித்திருக்கிறது.

அடுத்த கட்டுரைக்கு