Published:Updated:

தருமபுரி: 70 அடி கிணற்றில் பாய்ந்த கார்; சடலமாக மீட்கப்பட்ட தந்தை, மகள்! - கதறிய உறவினர்கள்

6 மணி நேரப் போராட்டத்துக்குப் பிறகே கிணற்றில் விழுந்த காருடன், தந்தையும் மகளும் சடலமாக மீட்கப்பட்டனர்.

கர்நாடக மாநிலம், பெங்களூரு லிங்கா நகரைச் சேர்ந்தவர் வீரா. இவர் அந்தப் பகுதியிலுள்ள கார்மென்ட்ஸ் கம்பெனி ஒன்றில் மேலாளராகப் பணியாற்றிவந்தார். இவருக்கு உமாலட்சுமி என்ற மனைவியும், 13 வயதில் சுஷ்மிதா என்ற மகளும் உள்ளனர். உமாலட்சுமி பியூட்டிஷியனாக இருக்கிறார். சுஷ்மிதா அங்குள்ள தனியார் பள்ளியில் 7-ம் வகுப்பு படித்துவந்தார். வீராவும், அவருடைய மனைவி மகளும் சேலம் மாவட்டம் மேட்டூரிலுள்ள உமாலட்சுமியின் தங்கை வீட்டுக்கு நேற்று முன்தினம் சென்றவர்கள், அன்றிரவு அங்கு தங்கியுள்ளனர். அதன் பிறகு நேற்று மாலை கார் மூலம் அங்கிருந்து கிளம்பி தருமபுரி வழியாக பெங்களூக்குச் சென்றுகொண்டிருந்தனர்.

உயிரிழந்த வீரா
உயிரிழந்த வீரா

தருமபுரி மாவட்டம், காரிமங்கலத்தை அடுத்த பொன்னேரி பகுதியில் நேற்று மதியம் 2:45 மணியளவில் கார் சென்று கொண்டிருந்தபோது, எதிர்பாராதவிதமாக கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்தில் இருந்த 70 அடி ஆழ விவசாயக் கிணற்றில் தடுப்புவேலிகளை உடைத்துக்கொண்டு பாய்ந்தது. கார் விழுந்த வேகத்தில் பின்கதவு திறந்ததால் உமாலட்சுமி நீந்தி வெளியே வந்திருக்கிறார். விபத்தை நேரில் பார்த்தவர்கள் ஓடிவந்து கிணற்றில் தந்த்தளித்த உமாலட்சுமியை மீட்டு, தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

கேரள மாடல்கள் விபத்து மரணத்தில் திருப்பம்; சிசிடிவி காட்சிகளை மீட்கும் முயற்சியில் போலீஸ்!

மேலும், கிணற்றில் விழுந்தவர்களை மீட்கும்படி போலீஸாருக்கும் தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்துக்கு வந்த போலீஸாரும் தீயணைப்பு வீரர்களும் கிணற்றில் விழுந்த வீராவையும், குழந்தை சுஷ்மிதாவையும் மீட்கும் பணியில் இறங்கினர். தொடர்ச்சியாக மழை பெய்துகொண்டிருந்ததாலும், இருட்டத் தொடங்கியதாலும் கிணற்றில் விழுந்தவர்களை மீட்பதில் தாமதம் ஏற்பட்டது.

சம்பவ இடம்
சம்பவ இடம்

கிணற்றில் சுமார் 50 அடி அளவுக்கு தண்ணீர் இருந்ததால்ஆறு ராட்சத மின் மோட்டார்களைவைத்து கிணற்றிலிருந்த தண்ணீரை வெளியேற்றினர். ஜேசிபி மற்றும் கிரேனைவைத்து கிட்டத்தட்ட ஆறு மணி நேரத்துக்கும் மேலாக மீட்புப் பணிகள் நடந்தன. இறுதியில் இரவு 8:30 மணியளவில் கிணற்றிலிருந்த கார் மீட்கப்பட்டது. காருக்குள் தந்தையும் மகளும் சடலமாக மீட்கப்பட்டனர். நடந்த சம்பவத்தைக் கண்டு வீராவின் குடும்பத்தார் கதறியழுதது பார்ப்போரைக் கலங்கடித்தது. மீட்கப்பட்ட சடலங்களை தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்த போலீஸார், விபத்துக்கான காரணம் என்ன என்பது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரித்துவருகின்றனர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு