Published:Updated:

`பள்ளத்தில் தடுமாறிய பைக்; மின்னல் வேகத்தில் பறந்த குப்பை லாரி!'-சென்னைக் காவலருக்கு நேர்ந்த துயரம்

சென்னையில் போலீஸ் ஏட்டுவாகப் பணியாற்றி வந்த பழனிகுமார், வேலை முடிந்து நேற்றிரவு வீட்டுக்குச் சென்று கொண்டிருந்தபோது குப்பை லாரியின் டயர்களின் நடுவில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார்.

போலீஸ் ஏட்டு பழனிகுமார்
போலீஸ் ஏட்டு பழனிகுமார்

சென்னை மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. போதிய பராமரிப்பு இல்லாததால் சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் உள்ள சாலைகள் குண்டும் குழியுமாகக் காட்சியளிக்கின்றன. அதைச் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கண்டுகொள்வதில்லை. இதனால் பல்லாங்குழி சாலையில் வாகன ஓட்டிகள் தட்டுத்தடுமாறிச் செல்கின்றனர். இதன்காரணமாகப் பல்வேறு சிரமங்களை மக்கள் சந்தித்துவருகின்றனர்.

விபத்து
விபத்து

உள்ளாட்சி அமைப்புகளிடமும் நெடுஞ்சாலைத் துறையினரிடமும் புகார் கொடுத்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படுவதில்லை என்று மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

சென்னை மகாகவி பாரதியார் நகர் பணிமனை அருகே உள்ள சாலை குண்டும் குழியுமாகக் காணப்படுகிறது. இந்தச் சாலை வழியாக மகாகவி பாரதியார் நகர் காவல் நிலைய நுண்ணறிவுப் பிரிவில் ஏட்டுவாகப் பணியாற்றிய பழனிகுமார் நேற்றிரவு பைக்கில் சென்றார். அப்போது சாலையின் நடுவில் உள்ள பள்ளத்தால் பைக் நிலைதடுமாறி, பழனிகுமார் கீழே விழுந்தார். அப்போது அவ்வழியாக வந்த மாநகராட்சியின் குப்பை லாரியின் டயர்களுக்கு நடுவில் பழனிகுமார் சிக்கினார். இதனால் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார், பழனிகுமாரின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து கீழ்ப்பாக்கம் போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீஸார் விசாரித்து வருகின்றனர். உயிரிழப்பு காரணமான மாநகராட்சியின் குப்பை லாரி டிரைவரிடம் போலீஸார் விசாரித்துவருகின்றனர்.

`செயற்கைக் கால் பொறுப்பை நாங்கள் ஏற்போம்'- கோவை அ.தி.மு.க கொடி விபத்து தொடர்பாக ஸ்டாலின்

விபத்தில் பலியான போலீஸ் ஏட்டு பழனிகுமாரின் சொந்த ஊர் மதுரை. இவருக்கு விமலா என்ற மனைவியும் 3 பெண் குழந்தைகளும் உள்ளனர். சென்னை பரங்கிமலை காவலர் குடியிருப்பில் வசித்துவந்தார். 2003-ம் ஆண்டு தமிழகக் காவல்துறையில் பணிக்குச் சேர்ந்தார். பழனிகுமாரின் உயிரிழப்பு அவரின் குடும்பத்தினருக்கு மட்டுமல்ல சக காவலர்கள் மத்தியிலும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது