சென்னை: `45 நிமிடங்கள் தாமதம்; ஒரே நேரத்தில் வந்த 2 ஆம்புலன்ஸ்கள்' - உயிரைப் பறித்த பேருந்து
ஆவடியில் சாலையைக் கடக்க முயன்ற முதியவர்மீது பேருந்து மோதிய விபத்தில் 45 நிமிடங்கள் தாமதமாக இரண்டு ஆம்புலன்ஸ்கள் ஒரே நேரத்தில் வந்தன. அதனால் ரத்தம் அதிக அளவில் வெளியேறி முதியவர் உயிரிழந்தார்.
சென்னையை அடுத்த ஆவடி, லாசர் நகரைச் சேர்ந்தவர் முருகேசன் (74). இவர், செங்குன்றத்திலிருந்து பூந்தமல்லி செல்லும், `தடம் எண் 62’ என்ற அரசுப் பேருந்தில் ஆவடி பஸ் நிலையத்திலிருந்து பயணம் செய்தார். ஆவடி - பூந்தமல்லி நெடுஞ்சாலையிலுள்ள கோவர்த்தனகிரி பஸ் நிறுத்தத்தில் முருகேசன் நேற்றிரவு 7:00 மணியளவில் இறங்கினார். பின்னர் அவர் சாலையைக் கடக்க பேருந்தின் முன்பக்கமாக நடந்து சென்றார்.

அப்போது பேருந்து முதியவர் முருகேசன்மீது மோதியது. இதில் முருகேசனின் இரண்டு கால்களும் நசுங்கின. அதைப் பார்த்து பொதுமக்கள் சத்தம் போட்டனர். உடனடியாகப் பேருந்து நிறுத்தப்பட்டது. காயமடைந்த முதியவர் முருகேசனை பொதுமக்கள் மீட்டனர். வலியால் முதியவர் துடித்தார். உடனடியாக அங்கிருந்தவர்கள் முருகேசனை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல ஆம்புலன்ஸுக்கு தகவல் தெரிவித்தனர். ஆனால், சம்பவ இடத்துக்கு ஆம்புலன்ஸ் வர காலதாமதமானது.
அதனால் அங்கிருந்த ஒருவர், ஆம்புலன்ஸ் டிரைவர் ஒருவருக்கு போனில் தகவல் தெரிவித்தார். இதையடுத்து இரண்டு ஆம்புலன்ஸ்களும் சுமார் 45 நிமிடங்களுக்குப் பிறகு ஒரே நேரத்தில் விபத்து நடந்த இடத்துக்கு வந்து சேர்ந்தன. அதன் பிறகு ஒரு ஆம்புலன்ஸ் மூலம் முதியவர் முருகேசன் மருத்துவனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். இன்னொரு ஆம்புலன்ஸ் திரும்பிச் சென்றது.

ரத்தம் அதிக அளவில் வெளியேறியதால், முதியவர் முருகேசன் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். விபத்து குறித்து பூந்தமல்லி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்துவருகின்றனர். உயிரிழந்த முருகேசனின் சடலத்தை மீட்ட போலீஸார் பிரேத பரிசோதனைக்காகக் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். முருகேசன் உயிரிழந்த தகவலை அறிந்து மருத்துவமனைக்கு வந்த அவரின் குடும்பத்தினர் கதறி அழுதனர்.
இது குறித்து போலீஸார் கூறுகையில், ``விபத்தில் உயிரிழந்த முருகேசன், திருமுல்லைவாயலில் செக்யூரிட்டியாகப் பணியாற்றிவந்திருக்கிறார். கொரோனா காரணமாக அவர் வேலைக்குச் செல்லவில்லை. தற்போது கொரோனா ஊரடங்கு தளர்வு காரணமாக வேலைக்குச் செல்ல முருகேசன் முடிவு செய்தார்.
அதனால் பஸ் பாஸைப் புதுப்பிக்க, ஆவடி பேருந்து நிலையத்துக்கு பஸ்ஸில் வந்திருக்கிறார். பின்னர் பஸ் பாஸை புதுப்பித்துக்கொண்டு அவர் ஆவடி பேருந்து நிலையத்திலிருந்து பேருந்தில் ஏறியிருக்கிறார். ஆவடி பஸ் நிறுத்தத்திலிருந்து மூன்றாவது நிறுத்தமான கோவர்த்தனகிரி பஸ் நிறுத்தத்தில் முருகேசன் இறங்கி சாலையைக் கடக்கும்போதுதான் விபத்தில் சிக்கி உயிரிழந்திருக்கிறார். முருகேசனுக்கு மங்கையர்க்கரசி (68) என்ற மனைவியும் இரண்டு மகள்களும் இருக்கிறார்கள்’’ என்றனர்.

ஆம்புலன்ஸ் வர தாமதமானபோது முருகேசனின் கால்களிலிருந்து ரத்தம் வெளியேறிக்கொண்டிருந்தது. அதை எப்படித் தடுப்பது என்று தெரியாமல் அங்கிருந்த பொதுமக்கள், தங்களுக்குத் தெரிந்த முறைகளைக் கையாண்டிருக்கிறார்கள். ஆம்புலன்ஸ் சீக்கிரமாக வந்திருந்தால் முதியவரைக் காப்பாற்றியிருக்கலாம் என்று பொதுமக்கள் ஆதங்கப்பட்டனர்.
முதுமையிலும்,` உழைக்க வேண்டும்’ என்று பஸ் பாஸ் வாங்க வந்தபோது முதியவர் முருகேசன் விபத்தில் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.