Published:Updated:

`முதலில் அக்காதான் பறந்தார்!'- தேனிலவில் புதுமாப்பிள்ளைக்கு நேர்ந்த சோகத்தை விவரிக்கும் தம்பி

சென்னையைச் சேர்ந்த புதுமணதம்பதி தேனிலவுக்குச் சென்ற இடத்தில் புதுமாப்பிள்ளை இறந்துள்ளார். அங்கு என்ன நடந்தது என்று மணமகளின் சகோதரரின் நண்பர் நம்மிடம் சில முக்கிய தகவல்களை கண்ணீர்மல்க தெரிவித்தார்.

புதுமாப்பிள்ளை அரவிந்த், அவரின் மனைவி பிரீத்தி
புதுமாப்பிள்ளை அரவிந்த், அவரின் மனைவி பிரீத்தி

சென்னை அமைந்தகரை திரௌபதி அம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் அரவிந்த் (27). பி.எஸ்.சி படித்த இவர், தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். இவருக்கும் பிரீத்திக்கும் கடந்த 10-ம் தேதி அமைந்தகரையில் உள்ள ஏகாம்பரேஸ்வரர் கோயிலில் திருமணம் நடந்தது. திருமணத்துக்குப் பிறகு கடந்த 15-ம் தேதி தேனிலவுக்காக இமாசலப் பிரதேசம் மணாலிக்குச் சென்றனர் புதுமண தம்பதியர். வீட்டில் உள்ளவர்கள் இருவரையும் வழியனுப்பி வைத்தனர்.

 “அப்பவே வேண்டாம்னு சொன்னேன்… கேட்டீங்களா?”- திருமணமான 10 நாளில் கணவனை இழந்த மனைவி வேதனை!
திருமண அழைப்பிதழ்
திருமண அழைப்பிதழ்

இந்தநிலையில்தான் மணாலியிலிருந்து கண்ணீருடன் பேசிய பிரீத்தி, ‘பாரா க்ளைடிங்’ விளையாட்டில் ஈடுபட்ட அரவிந்த், இறந்துவிட்டதாகக் கூறினார். அதைக் கேட்டு வீட்டில் உள்ளவர்கள் அதிர்ச்சியடைந்தனர். அரவிந்த்தின் சடலம், நேற்றிரவு சென்னைக்குக் கொண்டு வரப்பட்டது. இன்று அவருக்கு இறுதி அஞ்சலி நடந்தது. திருமணமாகி இரண்டு வாரத்துக்குள் கணவனை இழந்த பிரீத்திக்கு ஆறுதல் சொல்ல வார்த்தைகள் இல்லை. அரவிந்தின் சடலத்தைப் பார்த்து அவர் கதறி அழுதது அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியது.

பிரீத்தியின் சகோதரர் தீபக்கின் நண்பர் ஷேக்அப்துல்லாவிடம் பேசினோம். ``சிறுவயது முதலே பிரீத்தி அக்காளை எனக்கு நன்றாகத் தெரியும். பி.பி.ஏ படித்துவிட்டு தேர்வு எழுதி சென்னை புரசைவாக்கத்தில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கி ஒன்றில் பிரீத்தி அக்கா வேலைபார்த்துவருகிறார். அவருக்கும் அரவிந்த் அண்ணனுக்கும் கடந்த 10-ம் தேதிதான் திருமணம் நடந்தது. இருவரையும் விமான நிலையம் வரை சென்று வழியனுப்பி வைத்துவிட்டு வந்தோம்.

பாரா க்ளைடிங்
பாரா க்ளைடிங்

மணாலியில் ஹேப்பியாக இருப்பதாக பிரீத்தி அக்காள் வீட்டுக்கு போன் செய்து தகவலைக் கூறினார். 19-ம் தேதி (நேற்று) ஊருக்குத் திரும்பி வர திட்டமிட்டிருந்தனர். ஆனால், அரவிந்த் அண்ணன் சடலமாக வீட்டுக்கு வந்திருக்கிறார்"என்று கூறிய ஷேக் அப்துல்லாவால் தொடர்ந்து பேச முடியவில்லை.

சிறிது நேர அமைதிக்குப்பிறகு அவர் தொடர்ந்தார். ``மணாலியில் பல இடங்களைச் சுற்றிப்பார்த்த அரவிந்த், பிரீத்தி `பாரா க்ளைடிங்' விளையாட ஆசைப்பட்டுள்ளனர். முதலில் பிரீத்தி அக்கா, பாரா க்ளைடிங் சென்றுவிட்டு வந்துள்ளார். அந்த அனுபவத்தை அரவிந்த் அண்ணனுடன் அவர் பகிர்ந்துள்ளார். அப்போது, ரொம்பவே த்ரீல்லாக இருக்கிறது. நீங்கள் பார்த்து போய்விட்டு வாருங்கள் என்று பிரீத்தி அக்கா கூறியுள்ளார். பாரா க்ளைடிங்கில் அரவிந்த், பயிற்சியாளரும் பறந்தபோது அக்கா கண் முன் அந்த துயரச் சம்பவம் நடந்துள்ளது. இருவரும் தவறி விழுந்ததைப் பார்த்து அக்கா அலறித் துடித்துள்ளார்.

பயிற்சியாளர் உயிர் பிழைத்துவிட அரவிந்த் அண்ணன் மட்டும் இறந்துவிட்டதாக அக்காளிடம் சொல்லியிருக்கிறார்கள். தனிஆளாக பிரீத்தி அக்கா, தன்னுடைய சோகத்தை யாரிடமும் சொல்லக் கூட முடியாமல் தவித்துள்ளார். சம்பவத்தைக் கேள்விபட்டதும் சென்னையிலிருந்து அரவிந்த், பிரீத்தி ஆகியோரின் வீட்டினர் இமாசலபிரதேசத்துக்குச் சென்றனர். இந்தச் சம்பவம் தொடர்பாக வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

மணாலியில் ஹேப்பியாக இருப்பதாக பிரீத்தி அக்காள் வீட்டுக்கு போன் செய்து தகவலைக் கூறினார்.
ஷேக்அப்துல்லா

`பாரா க்ளைடிங்' விளையாட்டுக்கு இரண்டு விதமான டிக்கெட்கள் அங்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. 10 நிமிடம் பறப்பதற்கு 2,500 ரூபாயும் 20 நிமிடத்துக்கு 5,000 ரூபாயும் வசூலிக்கப்பட்டுள்ளது. டிக்கெட்களை வாங்கிய அரவிந்த் அண்ணன் முதலில் பிரீத்தி அக்காள் பறப்பதைப் பார்த்து ரசித்துள்ளார். அதன்பிறகு அவர் பாரா க்ளைடிங் விளையாட்டில் ஈடுபட்ட போது கயிறு அறுந்து விழுந்து இறந்துவிட்டதாக சம்பந்தப்பட்டவர்கள் சொல்கின்றனர். அரவிந்த் அண்ணன் மரணம் எங்களை சோகத்தில் ஆழ்த்தினாலும் இதுபோன்ற இனியொரு சம்பவம் நடக்காமல் இருக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த விபத்துக்குக் காரணத்தை விசாரிப்பதோடு சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார்.

மணாலியிலிருந்து சென்னை வந்த பிரீத்தி, யாரிடமும் பேசாமல் அமைதியாக இருந்துவருவதாக ஷேக்அப்துல்லா கூறினார். தேனிலவுக்குச் சென்ற புதுமாப்பிள்ளை இறந்த சம்பவம் அமைந்தகரையில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.