Published:Updated:

கார்த்திகை தீபத்தால் மூதாட்டிக்கு நேர்ந்த சோகம்! - சென்னையில் 6 இடங்களில் தீ விபத்து

சென்னையில் கார்த்திகை தீபத்தையொட்டி வீட்டில் விளக்கேற்றிய மூதாட்டியின் சேலையில் தீப்பிடித்து அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

தீ விபத்து
தீ விபத்து

சென்னை வேளச்சேரி விஜயநகர், 3-வது மெயின் ரோட்டைச் சேர்ந்தவர் சுரேந்தர். இவர் மின்சார வாரியத்தில் அதிகாரியாகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவரின் மனைவி சுஜாதா (72). கார்த்திகை தீபத்தையொட்டி நேற்றிரவு சுஜாதா வீட்டில் விளக்குகளை ஏற்றிக்கொண்டிருந்தார். அப்போது விளக்கில் எரிந்து கொண்டிருந்த தீ எதிர்பாராதவிதமாக அவரின் சேலையில் பிடித்தது.

கார்த்திகை தீபம்
கார்த்திகை தீபம்
Vikatan

தீ மள மளவென சுஜாதாவின் உடல் முழுவதும் பரவியது. இதனால் அவர் அலறித் துடித்தார். இந்தச் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் அங்கு வந்து தீயை அணைத்தனர். பின்னர் அவரை வடபழனியில் உள்ள தனியார் மருத்துமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சுஜாதா இறந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்த வேளச்சேரி போலீஸார், சுஜாதாவின் சடலத்தை மீட்டுப் பிரேத பரிசோதனைக்காக சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தீ விபத்து குறித்து வேளச்சேரி போலீஸார் விசாரணை நடத்திவருகின்றனர்.

கார்த்திகை தீபம்
கார்த்திகை தீபம்
`2,668 அடி உயர மலையில் கார்த்திகை மகாதீபம்!' - திருவண்ணாமலையில் எதிரொலித்த `அரோகரா' கோஷம்

கார்த்திகை தீப திருநாளையொட்டி சென்னையில் வண்ணாரப்பேட்டை, மதுரவாயல், வேளச்சேரி, திருவொற்றியூர் உட்பட 6 இடங்களில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. திருவொற்றியூர் கார்கில் நகரைச் சேர்ந்தவர் செல்வம். அந்தப்பகுதியில் உள்ளவர்கள் கார்த்திகை தீப திருநாளையொட்டி ராக்கெட் பட்டாசு வெடித்துள்ளனர். இதனால் செல்வத்தின் மாட்டுக் கொட்டகையில் ராக்கெட் பட்டாசின் தீப்பொறி விழுந்து தீப்பிடித்தது. இதில் ஒரு கன்றுக்குட்டி, 20 கோழிகள் தீயில் கருகின. இந்த தீ விபத்தில் 13 பசு மாடுகள், 4 கன்றுக்குட்டிகளுக்குத் தீக்காயம் ஏற்பட்டது. வேளச்சேரி, திருவொற்றியூர் ஆகிய இடங்களைத் தவிர மற்ற இடங்களில் நடந்த தீ விபத்தில் உயிர்சேதம் ஏற்படவில்லை எனத் தீயணைப்புத் துறையினர் தெரிவித்தனர்.