Published:Updated:

`3 தங்கைகள்; குடும்பச் சுமையைச் சுமந்தவர்’- பணிமுடிந்து வீடு திரும்பிய பெண் காவலருக்கு நேர்ந்த சோகம்!

விபத்தில் உயிரிழந்த பெண் காவலர் பவித்ரா
விபத்தில் உயிரிழந்த பெண் காவலர் பவித்ரா

சென்னையில் பணி முடிந்து வீடு திரும்பிய பெண் காவலர் லாரியின் சக்கரத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதனால் தமிழகக் காவல்துறையினர் ஆங்காங்கே வாகனச் சோதனையில் ஈடுபட்டுவருகின்றனர். இன்றைய நிலவரப்படி, 3,93,463 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 4,16,344 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 3,48,231 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. 4,15,73,819 ரூபாய் அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது.

விபத்து
விபத்து
`மலேசியா பயணம்; தனிமைப்படுத்தல்!’ - சென்னை மருத்துவ மாணவி மரணத்தில் திடீர் திருப்பம்
பெண் காவலர் பவித்ராவுக்கு 3 தங்கைகள் உள்ளனர். அதனால் சென்னையில் விடுதியில் தங்கி வேலை பார்த்துவந்த பவித்ரா, தனது தங்கைகளின் படிப்புச் செலவுடன் குடும்பச் சுமையையும் சுமந்துவந்தார்.

ஊரடங்கு காலகட்டத்தில் காவல்துறையினர், மருத்துவத் துறையினர், சுகாதாரத்துறையினர், தூய்மைப் பணியாளர்கள் ஆகியோரின் பணியை அனைத்துத் தரப்பினரும் பாராட்டிவருகின்றனர். இந்தநிலையில் சென்னை ஆயுதப்படைப் பிரிவு காவலர் பவித்ரா (22) சாந்தோம் பகுதியில் இன்று பணியில் இருந்தார். பணி முடிந்து அவர், காமராஜர் சாலை, பாரதி சாலை சந்திப்புப் பகுதியில் பைக்கில் சென்றுகொண்டிருந்தார்.

காமராஜர் சாலைக்கு வலதுபக்கமாக பவித்ரா திரும்பினார். அப்போது மேடவாக்கத்திலிருந்து பாமாயில் ஏற்றிக்கொண்டு தண்டையார்பேட்டைக்கு லாரி ஒன்று சென்றது. பவித்ராவின் பைக், லாரியின் சக்கரத்தில் சிக்கி விபத்துக்குள்ளானது. அதில் நிலைத்தடுமாறி கீழே விழுந்த பவித்ரா சாலையில் இழுத்துச் செல்லப்பட்டார். அதைப்பார்த்தவர்கள் சத்தம் போட்டனர். சிறிது தூரத்துக்குப்பிறகு லாரியை டிரைவர் நிறுத்தினார். தலையில் படுகாயமடைந்த பவித்ரா உயிருக்குப் போராடினார்.

விபத்தில் சிக்கிய போலீஸ் ஏடிஜிபி -யின் கார் டிரைவர்- உயிருக்குப் போராடியவரை இன்னொரு கார் மோதிய சோகம்
விபத்தில் சிக்கிய பெண் காவலரின் பைக்
விபத்தில் சிக்கிய பெண் காவலரின் பைக்

இதையடுத்து லாரியின் சக்கரத்தில் பைக்கோடு சிக்கிய பவித்ராவை மீட்ட போலீஸார் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவரைப் பரிசோதித்த டாக்டர்கள், பெண்காவலர் பவித்ரா உயிரிழந்து விட்டதாகத் தெரிவித்தனர். இதையடுத்து பவித்ராவின் சடலம், ஓமந்தூரார் சிறப்பு அரசு மருத்துவமனை பிணவறைக்குக் கொண்டு செல்லப்பட்டது. இதுதொடர்பாக அண்ணாசதுக்கம் போக்குவரத்துப் புலனாய்வுப் பிரிவு போலீஸார் வழக்கு பதிந்து விசாரித்தனர்.

விசாரணையில், தண்டையார் பேட்டையைச் சேர்ந்த ராஜசேகர் (24) என்பவரை போலீஸார் கைது செய்தனர். இதுகுறித்து போலீஸார் கூறுகையில், பவித்ராவின் சொந்த ஊர் தென்காசி மாவட்டம், செட்டியார் கல்லூரணி, ராமசாமி கோயில் தெருவைச் சேர்ந்தவர். 2017-ம் ஆண்டு காவல்துறையில் பணிக்குச் சேர்ந்துள்ளார். சென்னை சாந்தோம் பகுதியில் விடைத்தாள் கார்டு பணியில் இருந்துள்ளார்.

ஊரடங்கால் 26 பேருடன் நடந்த அமைச்சரின் மகன் திருமணம் - போனில் வாழ்த்து தெரிவித்த முதல்வர்
சடலமாகப் பெண் காவலர் பவித்ரா
சடலமாகப் பெண் காவலர் பவித்ரா

பெண் காவலர் பவித்ரா வாகனத்தில் செல்லும்போதுதான் விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளார். அவரின் இறப்பு குறித்து பவித்ராவின் பெற்றோருக்கு போனில் தகவல் தெரிவித்துள்ளோம். ஊரடங்கு காரணமாக மக்கள் நடமாட்டம் அதிகம் இல்லாத நிலையில் வாகனங்கள் வேகமாக நகர்ப்பகுதியில் செல்கின்றன. அதுதான் இதுபோன்ற விபத்துக்குக் காரணம் என்றனர்.

சென்னையில் பணி முடிந்துவிட்டு பைக்கில் வீடு திரும்பிய போலீஸ் ஏடிஜிடிபியின் டிரைவர் ராம்கி, மதுரவாயல் பைபாஸ் சாலையில் விபத்தில் சிக்கி உயிரிழந்தார். இந்தச் சோகச் சம்பவம் காவலர்கள் மத்தியில் மறைவதற்குள் இன்று ஆயுதப்படையில் பணியாற்றிய பெண் காவலர் உயிரிழந்துள்ளார். மரணமடைந்த பவித்ராவுக்கு 3 தங்கைகள் உள்ளனர். அதனால் சென்னையில் விடுதியில் தங்கி வேலைபார்த்து வந்த பவித்ரா, தனது தங்கைகளின் படிப்புச் செலவுடன் குடும்பச் சுமையையும் சுமந்துவந்தார். தற்போது அவரை இழந்து வாடும் அந்தக் குடும்பத்துக்குச் சக காவலர்கள் உதவிக்கரம் நீட்ட முன்வந்துள்ளனர்.

அடுத்த கட்டுரைக்கு