Published:Updated:

சென்னை: தனியார் ஊழியரின் உயிரைப் பறித்த ஸ்பீடு பிரேக்கர்! - அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பிய இளம்பெண்

விபத்து
விபத்து ( representational image )

சென்னை, திருமுல்லைவாயல் பகுதியில் பைக்கில் சென்ற தனியார் நிறுவன ஊழியர், ஸ்பீடு பிரேக்கரால் நிலைதடுமாறி கீழே விழுந்தபோது பின்னால் வந்த லாரி சக்கரத்தில் சிக்கி உயிரிழந்தார்.

சென்னை வியாசர்பாடி, கல்யாணபுரம் பகுதியைச் சேர்ந்தவர் பவுல்சம்பத்ராஜ் (40). இவர் தனியார் நிறுவனமொன்றில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். பவுல்சம்பத்ராஜும், அவரின் உறவினர்களும் பைக்கில் ஆவடி காமராஜர் நகரில் உறவினர் வீட்டில் நடந்த பிறந்தநாள் விழாவுக்கு வந்தனர். பின்னர் அங்கிருந்து நேற்றிரவு பைக்கில் வீட்டுக்குச் சென்றனர். பவுல்சம்பத்ராஜ் ஓட்டிய பைக்கின் பின்னால் அவரின் உறவினர் ரீனா (20) அமர்ந்திருந்தார்.

விபத்தை ஏற்படுத்திய லாரி
விபத்தை ஏற்படுத்திய லாரி

திருமுல்லைவாயல், சென்னை-திருப்பதி நெடுஞ்சாலையில் பைக் சென்றுகொண்டிருந்தபோது அந்தச் சாலையிலிருந்த ஸ்பீடு பிரேக்கரில் பைக் ஏறி இறங்கியது. அப்போது பவுல்சம்பத்ராஜ், நிலை தடுமாறினார். அதனால் அவரும் ரீனாவும் சாலையில் கீழே விழுந்தனர். அப்போது பின்னால் வந்த லாரியின் சக்கரம், பவுல்சம்பத்ராஜ் தலையில் ஏறி இறங்கியது. அதனால் அவர் தலைநசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த விபத்தில் ரீனாவின் காலிலும் காயம் ஏற்பட்டது. அதனால் அவரை மீட்டு அருகிலுள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். இது குறித்து விசாரித்த பூந்தமல்லி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீஸார் வழக்கு பதிவு செய்து, லாரி டிரைவர் அய்யப்பன் (35) என்பவரைக் கைதுசெய்தனர். இவர் சென்னை நந்தம்பாக்கத்தைச் சேர்ந்தவர்.

`அதிகாலை தூக்கம்... நொடியில் நிகழ்ந்த விபத்து... முடங்கிய வாழ்க்கை!' - முத்தமிழின் கண்ணீர் கதை
சாலை விபத்து
சாலை விபத்து

விபத்தில் உயிரிழந்த பவுல்சம்பத்ராஜின் சடலம் பிரேத பரிசோதனைக்காகக் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டது. இரவு நேரம் என்பதால் பவுல்சம்பத்ராஜ், பைக்கில் வேகமாகச் சென்றபோது ஸ்பீடு பீரேக்கை அவர் கவனிக்கவில்லை என்று முதற்கட்ட விசாரணையில் தெரியவந்திருக்கிறது. அப்போது பின்னால் வேகமாக வந்த லாரியில் பவுல்சம்பத்ராஜும் ரீனாவும் சிக்கியிருக்கிறார்கள். இதில் அதிர்ஷ்டவசமாக ரீனா உயிர்பிழைத்துக்கொண்டார்.

பிறந்தநாள் விழாவுக்குச் சந்தோஷமாக சென்ற தனியார் நிறுவன ஊழியர் விபத்தில் சிக்கி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

அடுத்த கட்டுரைக்கு