Published:Updated:

10 அடி ஆழம்; 3 அடி அகலம்; கால்வாயில் தாய், மகள் பலி!- மதுரவாயல் பைபாஸ் விபத்து... என்ன நடந்தது?

மழைநீர் கால்வாயில் விழுந்து உயிரிழந்த கரோலின் பிரமிளா
மழைநீர் கால்வாயில் விழுந்து உயிரிழந்த கரோலின் பிரமிளா

சென்னை மதுரவாயல் பைபாஸ் சாலை, மழைநீர் வடிகால்வாயில் தாயும் மகளும் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. அவர்களின் மரணத்துக்கான காரணம் குறித்து போலீஸார் விசாரித்துவருகின்றனர்.

க்சென்னை அம்பத்தூரை அடுத்த அயனம்பாக்கத்தைச் சேர்ந்தவர் கரோலின் பிரமிளா (50). இவர், தனியார் மருத்துவக் கல்லூரி ஒன்றில் பேராசியையாகப் பணியாற்றிவந்தார். இவருக்கு இரணடு மகள்கள். மூத்த பெண் இவாலின் (20). இவர், தனியார் இன்ஜினீயரிங் கல்லூரியில் படித்துவந்தார். கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி பர்சேஸ் செய்ய கரோலினும் இவாலினும் கடந்த 6-ம் தேதி பைக்கில் வெளியில் சென்றனர். பிறகு இரவு 7 மணியளவில் வீட்டுக்கு வந்துகொண்டிருந்தனர். தாம்பரம் - மதுரவாயல் பைபாஸ் சாலையில் நொளம்பூரை நோக்கி பைக்கில் வந்தனர். பைக்கை கரோலின் பிரமிளா ஓட்டினார். பின்னால் இவாலின் அமர்ந்திருந்தார்.

இவாலின்
இவாலின்

அப்போது பைபாஸ் சாலையொட்டியிருக்கும் சர்வீஸ் சாலையில், மின்விளக்குகள் எரியாமல் அந்தப் பகுதியே இருளில் மூழ்கியிருந்தது. அதனால், பைக்கின் முகப்பு வெளிச்சத்தில் இருவரும் பயணித்திருக்கின்றனர். அந்தச் சமயத்தில் திடீரென பைக் கட்டுப்பாட்டை இழந்து சாலையை ஒட்டியிருக்கும் மழைநீர் வடிகால்வாய்க்குள் விழுந்தது. அதனால் கரோலின் பிரமிளாவும் இவாலினும் மழைநீர்வடிகால் கால்வாய்க்குள் விழுந்தனர். கடந்த சில தினங்களாக அந்தப் பகுதியில் பெய்த மழையால், கால்வாயில் தண்ணீர் அதிகமாகச் சென்றதால் இருவரும் மூழ்கி உயிரிழந்தனர்.

மழை காரணமாக அந்த சாலையில் மக்கள் நடமாட்டம் குறைவாக இருந்தது. நீண்டநேரத்துக்குப் பிறகு அந்த வழியாகச் சென்றவர்கள், பைக் ஒன்று அநாதையாக நிற்பதைப் பார்த்தனர். பிறகு மழைநீர் வடிகால் கால்வாய் பகுதிக்குச் சென்றபோது கரோலின் பிரமிளா, இவாலின் ஆகியோர் சடலமாகக் கிடப்பதைப் பார்த்து பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர் .பின்னர் இது தொடர்பாக திருமங்கலம் போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீஸாருக்குத் தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார் இருவரின் சடலங்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். ஒரே நேரத்தில் தாயும் மகளும் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், இந்தச் சம்பவம் தொடர்பாக விளக்கம் அளிக்க மாநில மனித உரிமை ஆணையம், சென்னை மாநகராட்சி கமிஷனருக்கும் காஞ்சிபுரம் கலெக்டருக்கும் நோட்டீஸ் அனுப்பியிருக்கிறது.

விபத்து
விபத்து
representational image
மும்பையைப் பதறவைத்த தீ விபத்து! - அடுக்குமாடிக் குடியிருப்பிலிருந்து வெளியேற்றப்பட்ட 3,500 பேர்

தாய், மகள் உயிரிழப்புக்குக் காரணமான மழைநீர் வடிகால்வாயை மூட வேண்டும் என்ற கோரிக்கையை தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் முன்வைத்திருக்கிறார். இதற்கிடையில் தாய், மகள் மரணத்துக்கு இரங்கல் தெரிவித்து அறிக்கை வெளியிட்டிருக்கிறார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. உயிரிழந்த தாய், மகளுக்கு பெரிய அளவில் காயங்கள் இல்லை. அதனால் அவர்களின் இறப்புக்கான காரணத்தைத் தெரிந்துகொள்ள பிரேத பரிசோதனை அறிக்கைக்காக போலீஸார் காத்திருக்கின்றனர்.

இதற்கிடையில் மழைநீர் வடிகால்வாயில் அடிக்கடி விபத்துகள் நடப்பதாக அந்தப் பகுதியைச் சேர்ந்தவர்கள் குற்றம்சாட்டிவருகின்றனர். மதுரவாயல் பைபாஸ் சாலையில் அமைக்கப்பட்டிருக்கும் மழைநீர் வடிகால்வாயும் சாலையும் ஒரே மட்டத்தில் இருக்கின்றன. அதனால், மழைநீர் வடிகால்வாயில் விபத்து அடிக்கடி நடக்கிறது. எனவே, கால்வாயை மூட வேண்டும் என பொதுமக்கள் நீண்டகாலமாக கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இந்தச் சாலை நெடுஞ்சாலைத்துறையின் கட்டுப்பாட்டிலிருக்கிறது. மழைநீர் கால்வாய், 10 அடி ஆழம், மூன்றடி அகலத்தில் அமைக்கப்பட்டிருப்பதாலும், திறந்தே கிடப்பதாலும் அடிக்கடி விபத்துகள் நடக்கின்றன. மேலும், இந்தக் கால்வாயை சரிவர பராமரிக்காததால் மூன்றடி அளவுக்குச் சேரும் சகதியுமாக காணப்படுகிறது. மேலும் கால்வாய் அமைந்துள்ள பகுதியிலிருக்கும் தொழிற்சாலைகளின் கழிவுநீரும் இதில் சேருவதால் விஷ வாயு தாக்கி தாய், மகள் இறந்திருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்திருக்கிறது.

சாலை விபத்து
சாலை விபத்து

இது குறித்து திருமங்கலம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீஸாரிடம் கேட்டதற்கு, ``சம்பவம் நடந்த சர்வீஸ் சாலையில் மின்விளக்குகள் எரியாததால் சிசிடிவி-யில் தெளிவான காட்சிகள் பதிவாகவில்லை. அதனால் மழையின் காரணமாக கரோலின் ஓட்டிய பைக் விபத்துக்குள்ளானதா அல்லது அந்த வழியாகச் சென்ற வாகனங்கள் மோதி விபத்து ஏற்பட்டதா என்று விசாரித்துவருகிறோம். விபத்தில் சிக்கிய பைக்கை தடய அறிவியல் துறைக்கு அனுப்பி வைத்திருக்கிறோம். பிரேத பரிசோதனை ரிப்போர்ட் வந்த பிறகே இறப்புக்கான காரணம் தெரியவரும்" என்று கூறினர்.

ஒரே நேரத்தில் தாயும் மகளும் உயிரிழந்ததால், கரோலினின் இன்னொரு மகள் ஆதரவின்றி தவித்துவருகிறார். அவருக்கு ஆறுதல் சொல்ல முடியாமல் உறவினர்களும் அக்கம் பக்கத்தினரும் தவித்துவருகின்றனர்.

அடுத்த கட்டுரைக்கு