Published:Updated:

ஓடும் பேருந்திலிருந்து இறங்கிய சென்னை மாணவன்! - சக்கரத்தில் சிக்கி உயிரிழந்த சோகம்

சென்னையில் ஓடும் பேருந்திலிருந்து இறங்கிய மாணவன், சக்கரத்தில் சிக்கி உயிரிழந்தார்.

மாணவன் சரண்
மாணவன் சரண்

சென்னை வேளச்சேரி, எம்.ஜி.ஆர்.நகர், பழனியப்ப தெருவைச் சேர்ந்தவர் குமார். இவரின் மகன் சரண். இவர், சென்னை தி.நகரில் உள்ள தனியார் பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வந்தார். தினமும் பள்ளிக்குப் பேருந்தில் வருவார். ஏ.ஜி.எஸ்.காலனி பேருந்து நிறுத்தத்திலிருந்து தி.நகருக்குச் சென்ற பேருந்தில் சரண் பயணித்தார். அவருடன் அந்தப்பள்ளியில் படிக்கும் மாணவர்கள் சிலரும் சென்றனர்.

விபத்து
விபத்து

தி.நகர் பேருந்து நிலையம் அருகே சரண் உட்பட சில மாணவர்கள் ஓடும் பேருந்திலிருந்து இறங்கினர். அப்போது சரணும் இறங்கியபோது கால் தவறி கீழே விழுந்தார். அப்போது பேருந்தின் பின்சக்கரத்தில் சரண் சிக்கிக்கொண்டார். அதைப்பார்த்த பயணிகளும் மாணவர்களும் அலறினர்.

இதையடுத்து டிரைவர் பேருந்தை நிறுத்தினார். டயரின் சக்கரத்தில் சிக்கி உயிருக்குப் போராடிய சரணை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், சரண் இறந்துவிட்டதாகக் கூறினர். இதுகுறித்து போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீஸார் விசாரணை நடத்திவருகின்றனர்.

கடைக்குச் சென்ற குடும்பம்; கட்டுப்பாட்டை இழந்த கார்- குலசேகரம் அருகே சோகத்தை ஏற்படுத்திய விபத்து!

விபத்தில் இறந்த சரணின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துநரிடம் விபத்து குறித்து விசாரணை நடந்துவருகிறது. விசாரணையில் இன்று காலை 9.15 மணியளவில் தெற்கு உஸ்மான் சாலையில் சென்ற அரசுப் பேருந்தில் மாணவர்கள் கும்பலாக முன்பக்கப் படியில் தொங்கிக்கொண்டு பயணித்துள்ளனர். அப்போது ஓடும் பேருந்திலிருந்து அவர்கள் இறங்கியபோதுதான் சரண் கீழே விழுந்துள்ளார்.

அதை யாரும் கவனிக்கவில்லை. அடுத்த சில நிமிடத்தில் சரணின் தொடைப் பகுதியில் பேருந்தின் பின்பக்க டயர் ஏறி இறங்கியது. அதன்பிறகுதான் பேருந்து நிறுத்தப்பட்டுள்ளது. சரணின் தொடைப்பகுதியில் பேருந்தின் சக்கரம் ஏறி இறங்கியதில் அவர் சம்பவ இடத்திலேயே இறந்தது தெரியவந்தது. இந்தச் சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Vikatan

சென்னை முழுவதும் பள்ளி, கல்லூரிக்குச் செல்லும் மாணவர்களும் அலுவலகங்களுக்குச் செல்பவர்களும் கூட்ட நெரிசல் காரணமாக பேருந்துப் படியில் தொங்கியபடி ஆபத்து பயணத்தை மேற்கொண்டு வருகின்றனர். இதற்கு சம்பந்தப்பட்ட வழித்தடங்களில போதிய பேருந்து வசதியில்லை என்று பயணிகள் குற்றம் சாட்டுகின்றனர். இதுபோன்ற ஆபத்து பயணங்களால் விபத்தில் உயிரிழக்கும் சம்பவங்கள் தொடர்கதையாகிவருகிறது. அதைத் தடுக்க போக்குவரத்து போலீஸாரும் போக்குவரத்துக் கழக அதிகாரிகளும் முன்வர வேண்டும்.