Published:Updated:

`குடிநீருக்கு வெட்டி வைத்த பள்ளம் குழந்தையின் உயிரைப் பறித்தது!' - கதறும் பனையூர் பெற்றோர்கள்!

உயிர் வாழத்தானே தண்ணீருக்கு அலையுறோம். அதுக்காகத்தான் குழி வெட்டினோம். அதுவே எங்களுக்கு மரணக் குழியாக அமைந்துவிட்டது.

குடிநீருக்காக வெட்டிய பள்ளம்
குடிநீருக்காக வெட்டிய பள்ளம்

குடிநீருக்காக வெட்டி வைத்த பள்ளத்தில் தவறி விழுந்த குழந்தை இறந்த சம்பவம் பனையூர் மக்களை பதற வைத்துள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம், கிழக்குக் கடற்கரை சாலையில் உள்ள இடைக்கழிநாடு பேரூராட்சியில் உள்ளது பனையூர். இப்பகுதியில் உள்ள கூலித் தொழிலாளியான முத்து - தமிழரசி தம்பதியின் இரண்டரை வயது பெண் குழந்தை சஞ்சனா.

மதிக்கப்படாத சட்டங்கள்... தோல்வியில் முடிந்த முயற்சிகள்... சுஜித் கற்றுத் தந்த பாடம் என்ன?

வழக்கம்போல முத்து வெளியில் சென்றிருக்க, தமிழரசி குழந்தையைக் கவனித்துக்கொண்டிருந்தார். வீட்டு வேலையில் ஈடுபட்டிருந்தபோது திடீரென குழந்தையைக் காணவில்லை. சுற்றுவட்டாரத்தில் எங்கு தேடியும் கிடைக்கவில்லை. நீண்ட தேடுதலுக்குப்பின் வீட்டின் அருகே உள்ள தண்ணீர் குழாய் பள்ளத்தில் குழந்தை மூழ்கிக் கிடந்தது தெரியவந்தது. உடனே செய்யூர் மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றிருக்கிறார்கள். குழந்தையைப் பரிசோதித்த மருத்துவர்கள், ஏற்கெனவே குழந்தை உயிரிழந்து விட்டதாகத் தெரிவித்துள்ளார்கள்.

முத்துவின் உறவினர்களிடம் பேசினோம். ``எங்க பகுதிகளில் எப்பவுமே தண்ணீர் பஞ்சம் இருக்கும். பேரூராட்சியில இருந்து குழாய் அமைத்துக் கொடுத்திருக்காங்க. அதில் எப்போதாவது ஒருமுறைதான் தண்ணீர் வரும். ஐந்தடி பள்ளம் தோண்டினால் மட்டுமே குழாயில இருக்குற தண்ணிய பிடிக்க முடியும். நாலு குடம் தண்ணி கிடைக்கறதுக்கு நாங்க போராட வேண்டியிருக்கும்.

நீரில் மூழ்கி இறந்த குழந்தை சஞ்சனா
நீரில் மூழ்கி இறந்த குழந்தை சஞ்சனா

இதனால் எல்லோருடைய வீட்டிலும் சுமார் ஐந்தடி பள்ளம் தோண்டி தண்ணீர் பிடிப்பாங்க. நேற்று இரவு பெய்த மழையில் அந்தத் தண்ணீருக்காக வெட்டிய பள்ளங்களில் தண்ணீர் நிரம்பி இருந்தது. இதில் குழந்தை தவறி விழுந்துவிட்டது. உயிர் வாழத்தானே தண்ணீருக்கு அலையுறோம். அதுக்காகத்தான் குழி வெட்டினோம். அதுவே எங்களுக்கு மரணக் குழியாக அமைந்து விட்டது” என்கிறார்கள் சோகத்துடன்.