Published:Updated:

`சுழலில் சிக்கவைத்த செல்ஃபி மோகம்’ - அருவியில் குளிக்கவந்த இளைஞருக்கு நேர்ந்த சோகம்

rescue operation
rescue operation

ஊரடங்கு காரணமாக பொழுதைப்போக்க உறவினர்களுடன் அருவியில் குளிக்க வந்த இடத்தில் செல்ஃபி எடுக்க முயன்ற கல்லூரி மாணவர் ஒருவர் சூழலில் சிக்கிய நிலையில் இரண்டாவது நாளாகத் தேடுதல் பணி நடைபெற்றுவருகிறது.

நீலகிரி மாவட்டம் குன்னூர் - மேட்டுப்பாளையம் மலைப்பாதையில் உள்ள பர்லியார் கிராமத்தைச் சேர்ந்த சிலர் பொழுதைக் கழிக்க வனப்பகுதியில் நடந்துசென்று மரப்பலாம் பகுதியில் உள்ள அருவியில் குளிக்கத் திட்டமிட்டுள்ளனர்.

water falls
water falls

திட்டமிட்டவாரே நேற்று மதியம் ஸ்ரீதரன், சங்கீதா தம்பதியரின் மகன் அகில் அவரது சகோதரர் நிகில், அவரது அத்தை அஸ்வதி மற்றும் வீட்டின் அருகில் உள்ள அஞ்சலி, அபிதா ஆகியோர் வனத்தில் நடந்து அருவியைச் சென்றடைந்துள்ளனர்.

அப்போது நிகில் ஆற்றிற்குள் இறங்கிச் சென்று செல்ஃபி எடுக்க முயன்றதாக தெரிகிறது. அந்நேரத்தில் சற்றும் எதிர்பாராத வகையில் நிகில் சுழலில் சிக்கியுள்ளார். சகோதரர், உறவினர் கண்ணெதிரே நிகில் நீருக்குள் இழுத்துச்செல்லப்பட்டுள்ளார்.

rescue operation
rescue operation

தகவல் தெரிந்தவுடன், நேற்று மாலையே குன்னூர் தீயணைப்புத் துறையினர், வெலிங்டன் காவல்துறையினர் மீட்புப் பணியில் களமிறங்கினர். 2 மணி நேரம் போராடினர். பின்னர் இருள் சூழ்ந்ததாலும், யானை நடமாட்டம் காரணமாகவும் தொடர்ந்து மீட்புப் பணியில் ஈடுபடமுடியவில்லை.

இது குறித்து தீயணைப்பு வீரர்கள், "இந்தப் பகுதி சரிவுகள் நிறைந்த ஆபத்தான பகுதியாக உள்ளது. இந்தப் பகுதியில் அதிகம் மக்கள் நடமாட்டம் இருக்காது. மலையில் கடந்த வாரம் பெய்த மழையால் நீரோட்டம் அதிகமாகவே உள்ளது. யானை நடமாட்டம் அதிகம் என்பதால் தேடுதல் தாமதமானது. இரண்டாவது நாளாக இன்றும் உடலைத் தேடி வருகிறோம்" என்றனர்.

rescue operation
rescue operation

ஊரடங்கில் வீட்டில் இருக்காமல் வன விலங்குகள் உலவும் வனத்திற்குள் அத்துமீறி நுழைந்து ஆற்றில் செல்ஃபி எடுக்க முயன்று கல்லூரி மாணவர் ஆற்றில் மாயமான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அடுத்த கட்டுரைக்கு