Published:Updated:

`பெற்றோர்களின் கதறலை எதிர்கொள்ளவே முடியலை!' - கலெக்டர்களைக் கலங்கவைத்த அவினாசி விபத்து

விபத்தில் உருக்குலைந்து கிடக்கும் பேருந்து
விபத்தில் உருக்குலைந்து கிடக்கும் பேருந்து

இத்தனை பேருடைய வேதனையையும், அழுகையையும் பார்க்கையில் வருத்தமாக இருக்கிறது. சாலை பாதுகாப்பை எந்த அளவுக்கு நாம் கடைப்பிடிக்கணும் என்பதை மக்கள் உணர்ந்து செயல்பட வேண்டும்.

திருப்பூர் மாவட்டம், அவினாசி அருகே கேரள அரசு சொகுசுப் பேருந்து மீது கண்டெய்னர் லாரி மோதி ஏற்பட்ட விபத்தில் 19 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 25 பேர் காயங்களுடன் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். உயிரிழந்த 19 பேரில் இருவர் மட்டுமே கர்நாடகாவைச் சேர்ந்தவர்கள், மீதமுள்ள 17 பேரும் கேரள மாநிலத்தவர்கள். நேற்று அதிகாலை 3.15 மணிக்கு ஏற்பட்ட இந்த விபத்தில் சிக்கிய உடல்களை மீட்பதில் சற்று தாமதம் ஏற்பட்டது.

கலெக்டர், தீயணைப்புத் துறையினர், போலீஸார், வருவாய்த்துறை அதிகாரிகள் எனப் பலரும் களத்தில் இறங்கி வேலையை தீவிரப்படுத்தினர். காயமடைந்தவர்களை உடனடியாக மீட்டு மருத்துவமனைகளுக்கு சிகிச்சைக்கு அனுப்பியதால் கூடுதல் பலி எதுவும் ஏற்படவில்லை. சம்பவ இடத்தில் இறந்தவர்களைத் தவிர, மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட அனைவருமே காப்பாற்றப்பட்டனர்.

சவக்கிடங்கின் முன் கூடியிருந்த கூட்டம்
சவக்கிடங்கின் முன் கூடியிருந்த கூட்டம்

விபத்து ஏற்பட்டதிலிருந்து உடல்களை பிரேதப் பரிசோதனை செய்து அனுப்பியது வரைக்கும் திருப்பூர் கலெக்டர், போலீஸார் உடனிருந்தனர். விபத்து குறித்து தகவல் தெரிந்ததும் பாலக்காடு கலெக்டர், எஸ்.பி, கேரள அமைச்சர்கள், எம்.பி-க்கள் திருப்பூருக்கு வந்து இறந்தவர்களின் உடலைக் கொண்டுசெல்வதற்கான ஏற்பாடுகளைச் செய்தனர். பிரேதப் பரிசோதனைக் கூடம் அருகே, மேஜை அமைத்து உடனுக்குடன் இறப்புச் சான்றிதழ் கொடுத்து உடல்களை உறவினர்களிடம் கொடுத்தனுப்பினர். ஒவ்வொரு ஆம்புலன்ஸிலும் உறவினர்களுடன் போலீஸார் ஒருவரை துணைக்கு அனுப்பி வைத்தனர்.

திருப்பூர் மாவட்ட ஆட்சியர் டாக்டர்.க.விஜயகார்த்திகேயன் நம்மிடம் பேசுகையில், ``இந்த விபத்து ரொம்ப வருத்தமானதாக இருக்கு. பெற்றோர்களின் அழுகையை, அவங்களோட கதறலை பார்க்கிறப்ப அதை எதிர்கொள்ளவே முடியலை. கையைப் புடிச்சிக்கிட்டு அவங்களுக்கு ஆறுதல் சொன்னேன். கண்டெய்னர் லாரியின் டயர் வெடித்ததால்தான் இந்த விபத்து ஏற்பட்டதாகச் சொல்கிறார்கள்.

திருப்பூர் கலெக்டர் விஜயகார்த்திகேயன்
திருப்பூர் கலெக்டர் விஜயகார்த்திகேயன்

அந்த டயரை எடுத்து ஆய்வு செய்யச் சொல்லியிருக்கோம். பேருந்திலேயே உயிரிழந்த 19 பேரைத் தவிர, மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட 25 பேரும் நல்லபடியாக இருக்கிறார்கள்” என்றார். மேலும், இந்த விபத்து குறித்து கலெக்டர் அவருடைய முகநூல் பக்கத்தில், `இன்று மிகவும் வருத்தமான ஒரு வலி மிகுந்த நாள். வாழ்க்கை எவ்வளவு கொடூரமானது என்பதை உணர்ந்தேன்’ என வருத்தத்துடன் குறிப்பிட்டிருக்கிறார்.

கேரள மாநிலம், பாலக்காடு கலெக்டர் பாலமுரளியிடம் பேசுகையில், ``முழுக்க முழுக்க ஒரு மனிதருடைய தவற்றால் 19 உயிர்கள் பலியாகியிருக்கின்றன. இத்தனை பேருடைய வேதனையையும் அழுகையையும் பார்க்கையில் வருத்தமாக இருக்கிறது. சாலை பாதுகாப்பை எந்த அளவுக்கு நாம் கடைப்பிடிக்கணும் என்பதை மக்கள் உணர்ந்து செயல்பட வேண்டும்.

பாலக்காடு கலெக்டர் பாலமுரளி
பாலக்காடு கலெக்டர் பாலமுரளி

பேருந்தில் பயணித்து உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு இன்ஷூரன்ஸ் மூலமாக 10 லட்ச ரூபாயும், பலியான பேருந்தின் டிரைவர்கள் இருவரின் குடும்பங்களுக்கு தலா 30 லட்சமும் இழப்பீடாக வழங்கப்படும். மேலும், சிகிச்சை பெற்றுவரும் பயணிகளின் செலவை கேரள அரசாங்கம் ஏற்கும்” என்றார்.

அடுத்த கட்டுரைக்கு