Published:Updated:

சென்னை: கன்டெய்னர் லாரிகளுக்குள் சிக்கிய கணவன், மனைவி! - இரவில் நடந்த சோகம்

கண்டெய்னர் லாரி விபத்தில் உயிரிழந்த கணவன், மனைவி
கண்டெய்னர் லாரி விபத்தில் உயிரிழந்த கணவன், மனைவி

சென்னையில் பைக்கில் சென்ற கணவன், மனைவிமீது கன்டெய்னர் லாரி மோதியது. அப்போது இரண்டு கன்டெய்னர் லாரிகளுக்கு நடுவில் இருவரும் சிக்கி உடல் நசுங்கி, பரிதாபமாக உயிரிழந்தனர்.

சென்னை திருவொற்றியூர் தாங்கல் பகுதியைச் சேர்ந்தவர் ஷாஜகான்(31). இவரின் மனைவி பனாசீர் (28). ஷாஜகான், சில்வர் பட்டறையில் வேலை பார்த்துவந்தார். இந்தத் தம்பதியருக்கு இரண்டு பெண் குழந்தைகள் இருக்கிறார்கள். ஷாஜகானும், அவரின் மனைவியும் எண்ணூரிலுள்ள உறவினர் வீட்டுக்குச் சென்றுவிட்டு நேற்றிரவு பைக்கில் வீடு திரும்பிக்கொண்டிருந்தார்கள்.

விபத்தில் உயிரிழந்த கணவன், மனைவி
விபத்தில் உயிரிழந்த கணவன், மனைவி

அப்போது எண்ணூர் விரைவு சாலை முழுவதும் கன்டெய்னர் லாரிகள் அணிவகுத்துச் சென்றுகொண்டிருந்தன. அதனால் ஷாஜகான் மெதுவாக பைக்கை ஓட்டினார். அந்த நேரத்தில், இரண்டு கன்டெய்னர் லாரிகளுக்கிடையில் பைக் சிக்கிக்கொண்டது. கண்ணிமைக்கும் நேரத்தில் ஷாஜகானும் பனாசீரும் நசுங்கினர். அதனால் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

இது குறித்து தகவலறிந்ததும் வண்ணாரப்பேட்டை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீஸார் சம்பவ இடத்துக்கு வந்தனர். இந்தத் தகவலறிந்ததும், உயிரிழந்தவர்களின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் அங்கு திரண்டனர். ஆம்புலன்ஸ் வர நீண்ட நேரமானதால் இருவரின் சடலங்களும் நடுரோட்டிலேயே கிடந்தன. இதற்கிடையில் விபத்தை ஏற்படுத்திய கன்டெய்னர் லாரியை நிறுத்திவிட்டு, அதன் டிரைவர் தப்பி ஓடிவிட்டார்.

சேதமடைந்த லாரி
சேதமடைந்த லாரி

ஆத்திரமடைந்த சிலர், நிறுத்தப்பட்டிருந்த கன்டெய்னர் லாரிமீது கற்களை வீசினர். அப்போது அங்கு வந்த இளைஞர் ஒருவர், லாரியின் முன்பக்கக் கண்ணாடியை ஆவேசமாக உடைத்தார். அதைச் சிலர் தடுத்தனர். ஆனாலும், அந்த இளைஞர் கண்ணாடி முழுவதையும் உடைத்த பிறகே அமைதியானார்.

ஷாஜகான், அவரின் மனைவி ஆகியோரின் சடலங்களைப் பார்த்து உறவினர்கள் சாலையிலேயே அமர்ந்து கதறி அழுதனர். ஆம்புலன்ஸ் வர காலதாமதமானதால் பொதுமக்களும் உறவினர்களும் அங்கேயே சாலை மறியலில் ஈடுபட்டனர். அதனால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

உறவினர்கள்
உறவினர்கள்

இது குறித்து தகவலறிந்ததும் வண்ணாரப்பேட்டை துணை கமிஷனர் சுப்புலட்சுமி மற்றும் போலீஸார் சம்பவ இடத்துக்கு வந்தனர். மறியலில் ஈடுபட்டவர்களிடம் போலீஸார் சமரசப் பேச்சுவார்த்தை நடத்தினர். அதன் பிறகு இருவரின் சடலங்களும் பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டன. இந்தச் சம்பவம் தொடர்பாக வண்ணாரப்பேட்டை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீஸார் வழக்கு பதிவு செய்து லாரி டிரைவரைக் கைது செய்துள்ளனர்.

விபத்து குறித்து பொதுமக்கள் கூறுகையில், ``கன்டெய்னர் லாரிகள் கண்மூடித்தனமாக இந்தச் சாலையில் செல்கின்றன. மேலும், டிரைவர்கள் போக்குவரத்து விதிகளைப் பின்பற்றுவதில்லை. அதை போலீஸாரும் கண்டுகொள்வதில்லை. இந்தச் சாலையில் அடிக்கடி விபத்துகள் நடக்கின்றன. தற்போது பைக்கில் வந்த கணவனும் மனைவியும் கன்டெய்னர் லாரிகளுக்குள் சிக்கி உயிரிழந்திருக்கிறார்கள். விபத்து நடந்ததும் ஆம்புலன்ஸுக்குத் தகவல் தெரிவித்தோம். ஆனால், சில மணி நேரத்துக்குப் பிறகே ஆம்புலன்ஸ் வந்தது. அதனால் இருவரையும் காப்பாற்ற முடியவில்லை. விபத்தை ஏற்படுத்திய டிரைவர்மீது காவல்துறை கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றனர்.

மறியல் போராட்டம்
மறியல் போராட்டம்
சென்னை: `போலீஸ் வருது; ஓடிடு  மருமகனே' - விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட ஆட்டோ டிரைவர் தற்கொலை!

உறவினர்கள் கூறுகையில், ``ஹாஜகானும் அவரின் மனைவியும் உறவினருக்கு உடல்நலம் சரியில்லை என்றுதான் பைக்கில் சென்றனர். வீட்டுக்குத் திரும்பி வரும்போதுதான் கன்டெய்னர் லாரிகளுக்குள் சிக்கி உயிரிழந்துள்ளனர். அவர்களின் இரண்டு பெண் குழந்தைகளுக்கு என்ன பதில் சொல்லப்போகிறோம் எனத் தெரியவில்லை" என்றனர்.

ஒரே நேரத்தில் கணவனும் மனைவியும் உயிரிழந்த சம்பவம் அந்தப் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

அடுத்த கட்டுரைக்கு