Published:Updated:

`எங்க நிலைமை யாருக்கும் வரக்கூடாது;எச்சரிக்கையா இருங்க'- தம்பதிக்கு நேர்ந்த சோகத்தால் கதறியழும் ஊர்!

"எங்களின் நிலைமை யாருக்கும் வரக்கூடாது. எங்கள் வீட்டில் நடந்ததைப் போல, யார் வீட்டிலும் நடந்துவிடக் கூடாது சாமி" எனக் கதறிக்கொண்டிருக்கும் அழகம்மாளின் வார்த்தைகளைக் கேட்டு அந்த ஊரே சோகத்தில் உறைந்து கிடக்கிறது.

ஜான்சி ராணி மற்றும் தர்மர்
ஜான்சி ராணி மற்றும் தர்மர்

மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியில் கொட்டித்தீர்க்கும் மழையால், தமிழகத்தில் மழைச் சாரல் வீசுகிறது. நீலகிரி மலைப்பகுதியில் அதிக மழைபெய்து வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டிருப்பதோடு அனைத்து அணைகளும் நிரம்பி வருகின்றன. இந்நிலையில் திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த பன்னாங்கொம்பு பகுதியில் உள்ளது பிச்சம்பட்டி கிராமம். இந்தக் கிராமத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளியான பொன்னுசாமியின் மகன் 30 வயதான தர்மர். சென்னையில் ஓட்டுநராகப் பணியாற்றி வருகிறார். கிடைக்கும் சம்பளத்தைக் கொண்டு குடும்பம் சந்தோசமாக இருந்துவந்தார்.

பிணமாக ஜான்சி ராணி மற்றும் தர்மர்
பிணமாக ஜான்சி ராணி மற்றும் தர்மர்

வயதான தாய்-தந்தை மற்றும் பாட்டி ஆகியோரைப் பாசமாகப் பார்த்துக்கொள்ளவும், தர்மருக்கு துணையாகப் பெண் தேடி அலைந்தார்கள். அந்தவகையில் அதேபகுதியைச் சேர்ந்த பட்டதாரிப் பெண்ணான ஜான்சிராணிக்கும் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. மனைவியின் வருகைக்காக வீட்டில் சின்னதாகக் குளியலறைக் கட்டியதுடன், தனது வீட்டின் பின்புறத்தில் இருந்து வயர் மூலம் மின்சாரம் எடுத்திருந்தார்.

இரண்டு வருட வாழ்க்கையில் சென்னையில் பணியாற்றும் தர்மர் அவ்வப்போது திருச்சி மணப்பாறைக்கு வந்து செல்வது வழக்கம். இருவருக்கும் குழந்தைகள் இல்லை என்பதால் அளவுக்கதிகமாகப் பாசமாக இருப்பார்கள். அந்தவகையில் மனைவியைப் பார்ப்பதற்காகக் கடந்த சில தினங்களுக்கு முன்பு சென்னையில் இருந்து ஊருக்கு வந்திருந்த தர்மர், மனைவியுடன் வெளியில் சென்றுவிட்டு இருவரும் மாலை வீடு திரும்பினர்.

பலியான ஜான்சி ராணி மற்றும் தர்மர்
பலியான ஜான்சி ராணி மற்றும் தர்மர்

முன்னதாக வெளியில் செல்லும்போது, குளியலறைக்குச் செல்லும் மின்வயரையொட்டிய கம்பியில், தான் துவைத்த துணையைக் காயப்போட்ட ஜான்சிராணி, வீடு திரும்பியபோது கம்பியில் போட்டிருந்த துணி கீழே விழுந்து கிடந்தது. சட்டென அந்தத் துணியை எடுத்துப் போட முயன்றார். அவ்வளவுதான்... மின்வயரையொட்டிய அந்தக் கம்பியில் மின்சாரம் பாய்ந்திருப்பது அறியாத அவரின் தலைமுடி, கம்பியில் பட்டது. ஜான்சி ராணியின் மீது மின்சாரம் பாய்ந்தது. நிலைகுலைந்து நின்ற அவரைப் பார்த்து பதறிய தர்மர், மனைவியைக் காப்பாற்ற ஓடியவர்... அப்படியே ஜான்சிராணியைப் பிடித்துவிட அவர்மீதும் மின்சாரம் பாய்ந்தது.

சிறிது நேரத்தில் மின்சாரம் தாக்கி இருவரும் தூக்கி வீசப்பட்டனர். இந்தச் சம்பவம் தெரியாமல் அக்கம் பக்கத்தினர் அவரவர் வேலைகளைச் செய்து வந்தநிலையில் சுமார் ஒன்றரை மணி நேரத்துக்கும் மேலாக அவர்கள் அங்கு கிடந்தனர்.

அதன்பிறகு அவரின் குடும்பத்தினர் வந்து பார்த்தபோதுதான் ஜான்சிராணி மற்றும் தர்மர் ஆகியோர் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்து பிணமாகக் கிடப்பது தெரியவந்தது. அதையடுத்து மின் இணைப்பைத் துண்டித்துவிட்டு அவர்களைப் பிணமாக மீட்டனர்.

தகவலறிந்த மணப்பாறை அடுத்த புத்தாநத்தம் போலீஸார் சம்பவ இடத்துக்கு வந்து இறந்த ஜான்சிராணி மற்றும் தர்மர் ஆகியோரின் உடல்களைக் கைப்பற்றி விசாரணை நடத்தியதுடன், பிரேத பரிசோதனைக்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதைத்தொடர்ந்து வழக்கு பதிவு செய்த போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

எங்களின் நிலைமை யாருக்கும் வரக்கூடாது. எங்கள் வீட்டில் நடந்ததைப்போல, யார் வீட்டிலும் நடந்துவிடக் கூடாது எல்லோரையும் மின்சாரத்தைப் பயன்படுத்தும்போது கொஞ்சம் எச்சரிக்கையாக இருக்கச் சொல்லுங்கள்.
- மின்சாரம் தாக்கி பலியான தர்மரின் தாய் அழகம்மாள்.

போலீஸாரின் விசாரணையில், வீட்டிலிருந்து குளியலறைக்கு எடுக்கப்பட்ட மின்சார வயரில் சிறிய அளவு சேதமடைந்து, துணி காய வைத்திருந்த கம்பியில் மின்சாரம்பாய்ந்திருந்ததும், அதையறியாத ஜான்சிராணி அந்தக் கம்பியில் துணியைக் காயவைத்தபோதுதான் மின்சாரம் தாக்கியதும், மனைவியைக் காப்பாற்றப் போய் கணவரும் உயிரைப் பறிகொடுத்ததும் தெரியவந்துள்ளது.

மின்சாரம் தாக்கி கணவன்-மனைவி உயிரிழந்த விவகாரம் குறித்த செய்தி அப்பகுதியில் காட்டுத் தீயாய் பரவ பல்வேறு கிராமங்களில் இருந்து பொதுமக்கள் திரண்டு வந்து அஞ்சலி செலுத்தினர். பலியான தம்பதிக்கு குழந்தைகள் இல்லை என்றாலும் மகன் மற்றும் மருமகள் ஆகியோரை இழந்து வயதான அவரின் பெற்றோரான பொன்னுசாமி மற்றும் தாய் அழகம்மாள் மற்றும் பாட்டி ஆகியோர் நிர்க்கதியாக நிற்கிறார்கள்.

விறகுவெட்டி விற்கும் விவசாயக் கூலித் தொழிலாளியான பொன்னுசாமி மற்றும் அவரின் தாய் அழகம்மாளிடம்பேசினோம். ``எனக்கு ரெண்டு பிள்ளைங்க. அதில் தர்மர்தான் எங்கள் குடும்பத்தைக் காப்பாற்றி வந்தான். சாமி மாதிரி அவன். சென்னையில் வேலை செய்து வந்த நிலையில், என் மருமகள்தான் என்னையும் என் மனைவியும் கவனித்து வந்தார். மகனும் மருமகளும் எங்கள் மீது அவ்வளவு பாசமாக இருப்பார்கள். அவர்கள் இருவரையும் ஒரே நாளில் இழப்போம் எனக் கனவில்கூட நினைக்கவில்லை. நெஞ்சே வெடிக்கிற மாதிரி இருக்கிறது.

பலியான தர்மரின் தந்தை  பொன்னுசாமி மற்றும் தாய் அழகம்மாள்
பலியான தர்மரின் தந்தை பொன்னுசாமி மற்றும் தாய் அழகம்மாள்

எங்களின் நிலைமை யாருக்கும் வரக்கூடாது. எங்கள் வீட்டில் நடந்ததைப்போல, யார் வீட்டிலும் நடந்துவிடக் கூடாது எல்லோரையும் மின்சாரத்தைப் பயன்படுத்தும்போது கொஞ்சம் எச்சரிக்கையாக இருக்கச் சொல்லுங்கள். இனி எங்களுக்கு யார் உதவுவார். நாங்கள் எப்படி வாழ்வோம். நாங்க செத்து எங்கள் பிள்ளைகள் வாழ்ந்திருக்கக் கூடாதா.?” எனத் தலையில் அடித்தபடி கதறி அழுதார் அழகம்மாள். மின்சாரம் தாக்கி கணவன் மனைவி பலியான விவகாரம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

நாமும் எச்சரிக்கையாக இருப்போம்.