Election bannerElection banner
Published:Updated:

வேலூர்: வெடித்து சிதறிய பட்டாசுகள்; கடையினுள் சிக்கிய குழந்தைகள்! - விபத்து நடந்தது எப்படி?

கோர விபத்து காட்சி
கோர விபத்து காட்சி

காட்பாடி அருகே பட்டாசு கடையில் ஏற்பட்ட கோர விபத்தில், இரண்டு பேரக்குழந்தைகளுடன் கடை உரிமையாளர் உடல் கருகி உயிரிழந்த சம்பவம், பேரதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

வேலூர் மாவட்டம், காட்பாடியை அடுத்துள்ள லத்தேரி பகுதியைச் சேர்ந்தவர் மோகன்ரெட்டி (வயது 60). இவர், தனது மகள் திவ்யா பெயரில் லைசென்ஸ் அனுமதிபெற்று லத்தேரி பேருந்து நிலையத்தில் 1992-லிருந்து பட்டாசு கடை நடத்திவருகிறார். இன்று காலை வழக்கம் போல் கடையைத் திறந்து வைத்திருந்த மோகன்ரெட்டியுடன் அவரின் மகள் வழி பேரக்குழந்தைகள் தனுஷ், தேஜஸ் ஆகியோரும் இருந்தனர். தனுஷுக்கு 8 வயதாகிறது. தேஜஸுக்கு 6 வயதாகிறது. இன்று மதியம் 12 மணியளவில் கடைக்கு வந்த வாடிக்கையாளர்கள் சிலர் பட்டாசுகளை வாங்கியுள்ளனர். கடையில் புதிய ரக வெடிகள் இருந்தன. அதனை எடுத்துப் பார்த்து, ‘எப்படி வெடிக்கும்; ‘எப்படி வெடிக்க வேண்டும்?’ என்றும் வாடிக்கையாளர்கள் கேட்டிருக்கிறார்கள்.

பேரக்குழந்தைகளை கடைக்குள்ளேயே இருக்கச் சொல்லிவிட்டு புதிய ரக பட்டாசுகளில் மூன்றினை டெமோ காட்டுவதற்காக எடுத்துவந்து கடைக்கு வெளியில் வைத்து வெடித்து காண்பித்துள்ளார் மோகன்ரெட்டி. அப்போது, ஒரு பட்டாசிலிருந்து பறந்துச்சென்ற தீப்பொறி கடைக்குள் விழுந்தது. அவர்கள் கண் இமைப்பதற்குள்ளாக நொடி பொழுதில் குபிரென்று கடையிலிருந்த பட்டாசுகளும் வெடிக்க ஆரம்பித்தன. கடைக்குள் இருந்த குழந்தைகள் இருவரும் அச்சமடைந்தனர். பதற்றத்தில் வெளியில் ஓடி வருவதற்குப் பதிலாக அதிக பட்டாசுகள் இருந்த அறைக்குள் குழந்தைகள் ஓடி விட்டனர்.

உயிரிழந்த மோகன்ரெட்டி
உயிரிழந்த மோகன்ரெட்டி

தீ மளமளவென பரவியதால் பட்டாசுகள் அதிக சத்தத்துடன் வெடித்து சிதறின. பதறிப்போய் கதறிய மோகன்ரெட்டி பேரக்குழந்தைகளை காப்பாற்றி வெளியில் அழைத்து வருவதற்காக கடைக்குள் ஓடினார். பட்டாசுகள் மொத்தமாக வெடித்து சிதறியதில் பேரக்குழந்தைகளும், மோகன் ரெட்டியும் கடைக்குள்ளேயே சிக்கிக்கொண்டனர். தீயில் உடல் கருகி மூவரும் துடிதுடித்து உயிரிழந்தனர். லத்தேரிப் பகுதியில் தீயணைப்பு நிலையம் கிடையாது. இருபுறமுமுள்ள காட்பாடி மற்றும் குடியாத்தம் ஆகிய தீயணைப்பு நிலைங்களுக்கு 10 கிலோ மீட்டர் தொலைவு என்பதால் அவர்களுக்குத் தகவல் கொடுத்துவிட்டு அப்பகுதி மக்களே மீட்புப் பணியில் ஈடுபட்டனர். டிராக்டர் மூலமாக தண்ணீர் கொண்டு வந்து ஊற்றியும், மண்ணை அள்ளி வீசியும் தீயை அணைக்க முயன்றனர்.

ஆனால், பட்டாசுகள் அதிக சத்தத்துடன் வெடித்துக் கொண்டே இருந்ததால் பொதுமக்கள் எடுத்த முயற்சி பலனளிக்கவில்லை. தீயணைப்புத் துறையினர் வருவதற்குள்ளாக பட்டாசு கடை முழுவதுமாக எரிந்து நாசமாகிவிட்டது. அருகிலிருந்த மூன்று பூ கடைகள், பத்துக்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்களும் தீயில் எரிந்து சேதமடைந்தன. கடைக்குள் கிடந்த குழந்தைகள் மற்றும் மோகன்ரெட்டியின் சடலங்களை மீட்ட தீயணைப்புத் துறையினர் பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவ இடத்துக்கு மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம், எஸ்.பி செல்வகுமார், குடியாத்தம் சப்-கலெக்டர் ஷேக் மன்சூர் ஆகியோர் நேரில் வந்து பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டனர்.

உயிரிழந்த குழந்தைகள்
உயிரிழந்த குழந்தைகள்

அப்போது, செய்தியாளர்களைச் சந்தித்த மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம், ‘‘பட்டாசு கடையில் ஏற்பட்ட விபத்தில் மூன்றுப் பேர் உயிரிழந்துள்ளனர். அவர்களின் குடும்பத்துக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் ஆறுதல் தெரிவித்துக்கொள்கிறோம். அரசு தரப்பில் அவர்களுக்கு உரிய நிவாரணம் வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்படும். வெயில் காலம் என்பதால் அதிக பாதிப்புகளை ஏற்படுத்தும் பட்டாசுகளையும், அதிக சத்தம் எழுப்பும் பட்டாசுகளையும் கடையில் இருப்பு வைக்க வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறோம். முக்கியமாக எக்காரணத்துக்காகவும் குழந்தைகளை பட்டாசு கடைக்கு அழைத்து வரக்கூடாது. இதுபோன்ற விபத்துகளை தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை ஆலோசனை கூட்டம் நாளையே நடத்தப்படும்’’ என்றார்.

கோர விபத்து தொடர்பாக, குடியாத்தம் சப்-கலெக்டர் ஷேக் மன்சூரிடம் பேசினோம். ‘‘தீ விபத்து ஏற்பட்ட கடையில் முன்னெச்சரிக்கையாக தீ தடுப்புச் சாதனங்களும் இருந்துள்ளன. குழந்தைகளை காப்பாற்றும் முயற்சியில்தான் மோகன்ரெட்டியும் உயிரிழந்தார். இது, அவர்களின் அஜாக்கிரதையால் ஏற்பட்ட விபத்துதான். விபத்தில் எவ்வளவு மதிப்பிலான பொருட்கள் சேதமடைந்துள்ளன என்பது குறித்து கணக்கிடப்பட்டு வருகிறது’’ என்றார்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு