Published:Updated:

`அறுந்து விழுந்த ராட்சத கிரேன்; உயிரிழந்த வடமாநிலத் தொழிலாளி!’-கலவரத்தில் மூன்று போலீஸார் படுகாயம்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
அறுந்து விழுந்த ராட்சத கிரேன்
அறுந்து விழுந்த ராட்சத கிரேன்

புதுச்சேரி தனியார் தொழிற்சாலை விபத்தில் உயிரிழந்த வட மாநிலத் தொழிலாளிக்கு ஆதரவாக ஏற்பட்ட கலவரத்தில் தொழிற்சாலை சூறையாடப்பட்டிருப்பதுடன், மூன்று போலீஸ்காரர்கள் கடுமையாகத் தாக்கப்பட்டிருக்கிறார்கள்.

புதுச்சேரி, சேதராப்பட்டு பகுதியில் இயங்கிவரும் நூற்றுக்கணக்கான தொழிற்சாலைகளில் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் பணிபுரிந்துவருகின்றனர். அதில் வடமாநிலத் தொழிலாளர்கள் கணிசமான எண்ணிக்கையில் தங்கி பணிபுரிந்துவருகின்றனர். சேதராப்பட்டு ஏரிக்கரையின் பின்புறம் உள்ள கரசூர் பகுதியில் இயங்கிவரும் `கேங்ஸ் இன்டர்நேஷனல் (பி) லிமிட்டெட்’ என்ற தொழிற்சாலையில் ராட்சத செல்போன் டவர்களும், ராட்சதக் குழாய்களும் தயாரிக்கப்பட்டுவருகின்றன.

`அறுந்து விழுந்த ராட்சத கிரேன்; உயிரிழந்த வடமாநிலத் தொழிலாளி!’-கலவரத்தில் மூன்று போலீஸார் படுகாயம்!

இன்று காலையில் வழக்கம்போல தொழிற்சாலைக்குள் சென்ற  தொழிலாளர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பிரிவுகளில் பணிபுரிந்திருக்கிறார்கள். அப்போது மேலே தொங்கிக்கொண்டிருந்த உற்பத்திப் பொருள்களைத் தூக்கக்கூடிய கிரேன் திடீரெனெ அறுந்து கீழே நின்றிருந்த ஒரு வடமாநிலத் தொழிலாளரின் மீது விழுந்தது. கண்ணிமைக்கும் நேரத்தில் ஏற்பட்ட இந்த விபத்தில் அந்தத் தொழிலாளி அதே இடத்தில் துடிதுடித்து உயிரிழந்தார்.

ஏற்கெனவே அடிப்படை மற்றும் பாதுகாப்பு வசதிகளைச் செய்து தரும்படி தொழிற்சாலை நிர்வாகத்திடம் வலியுறுத்திவந்த அந்த வடமாநிலத் தொழிலாளர்கள், சக தொழிலாளர் ஒருவர் கண்முன்னே துடிதுடித்து இறந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். தொடர்ந்து தொழிற்சாலை நிர்வாகத்தின் கவனக்குறைவால்தான் தொழிலாளி உயிரிழந்தார் என்று குற்றம் சுமத்தி தொழிற்சாலைக்குள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

உயிரிழப்பு
உயிரிழப்பு

இந்தச் சம்பவம் குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டதன் அடிப்படையில் அங்கு விரைந்து சென்ற சேதராப்பட்டு போலீஸார், உயிரிழந்த தொழிலாளின் உடலை அங்கிருந்து அப்புறப்படுத்த முயன்றனர். ஆனால் அதற்கு எதிர்ப்பு தெரிவித்த தொழிலாளர்கள், தங்களின் பாதுகாப்பை உறுதி செய்வதுடன், உயிரிழந்த தொழிலாளிக்கு இழப்பீட்டை அறிவிக்கும்வரை சடலத்தை எடுக்கக் கூடாது என்று போலீஸாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அதனால் அந்தத் தொழிலாளர்கள் மீது போலீஸ் தடியடி நடத்தியதாகக் கூறப்படுகிறது. அதில் ஆத்திரமடைந்த தொழிலாளர்கள் போலீஸார் மீது பதில் தாக்குதலை நடத்தியதால் அங்கு கலவரம் ஏற்பட்டது. ஒரு எஸ்.ஐ உள்ளிட்ட மூன்று போலீஸார்களைக் கடுமையாக தாக்கிய அந்தத் தொழிலாளர்கள். அவர்கள் வந்த ஜீப்பையும் கவிழ்த்துப் போட்டு அடித்து நொறுக்கினார்கள். அதேபோல தொழிற்சாலையில் இருந்த கண்ணாடிக் கதவுகள், வாகனங்கள் உள்ளிட்டவற்றை அடித்து நொறுக்கினார்கள். இந்தக் கலவரத்தில் எஸ்.ஐ முருகன் உள்ளிட்ட மூன்று போலீஸாருக்கும், ஐந்து தொழிலாளர்களுக்கும் பலத்த காயம் ஏற்பட்டது.

நொறுங்கிய ஜீப்
நொறுங்கிய ஜீப்

தொடர்ந்து உயிரிழந்த தொழிலாளியின் சடலத்தைக் கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த போலீஸார், கலவரத்தில் காயமடைந்தவர்களையும் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இந்தக் கலவரம் தொடர்பாக சேதராப்பட்டு போலீஸார் வழக்கு பதிவு செய்திருக்கும் நிலையில், தொழிற்சாலை வளாகத்தில் தொடர்ந்து பதற்றம் நீடித்துவருகிறது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு