Published:Updated:

அறுந்துகிடந்த மின்கம்பி... மாமியாரைக் காப்பாற்ற முயன்ற மருமகள்! - புதுக்கோட்டை சோகம்

மரணம்
மரணம் ( Representational image )

மாமியார் மின்சாரம் தாக்கி மயங்கிக் கிடந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்த ராதிகா, உடனே மாமியாரைக் காப்பாற்ற நினைத்துத் தூக்க முயன்றிருக்கிறார். இதனால், ராதிகாமீதும் மின்சாரம் பாய்ந்திருக்கிறது. மாமியார், மருமகள் என இருவரும் பரிதாபமாக உயிரிழந்திருக்கிறார்கள்.

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த சில தினங்களாகவே பரவலாக மழை பெய்துவருகிறது. இதற்கிடையே, நேற்றிரவு பலத்த இடி, மின்னலுடன் மழை பெய்தது. இந்த நிலையில் அறந்தாங்கி அருகே ஆளப்பிறந்தானைச் சேர்ந்த ராஜ்கோகிலா (65) என்பவர், வீட்டின் அருகேயுள்ள தண்ணீர்த் தொட்டியில் தண்ணீர் எடுக்கச் சென்றிருக்கிறார். தண்ணீர்த் தொட்டிக்குள் மின்கம்பி அறுந்து கிடத்திருக்கிறது.

மரண சோகம்
மரண சோகம்

அதை கவனிக்காத ராஜ்கோகிலா தொட்டிக்குள் குடத்தைவிட்டு தண்ணீர் எடுத்தபோது மின்சாரம் தாக்கியதில் மயங்கினார். தண்ணீர் எடுக்கச் சென்ற அத்தையைக் காணவில்லையே என்று தேடிய ராஜ்கோகிலாவின் மருமகள் ராதிகா (31) தண்ணீர்த் தொட்டி அருகே சென்று பார்த்திருக்கிறார். மாமியார் மின்சாரம் தாக்கி மயங்கிக் கிடந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்த ராதிகா, உடனே மாமியாரைக் காப்பாற்ற நினைத்துத் தூக்க முயன்றிருக்கிறார்.

இதனால், ராதிகா மீதும் மின்சாரம் பாய்ந்திருக்கிறது. மாமியார், மருமகள் என இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர். இறந்துபோன ராதிகாவுக்கு 2, 3 வயதில் இரண்டு குழந்தைகள் இருப்பதாகக் கூறப்படுகிறது. ஒரே வீட்டில் மாமியார், மருமகள் என இருவரும் அடுத்தடுத்து மின்சாரம் தாக்கி இறந்த சம்பவம் ஆளப்பிறந்தானில் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இடி, மின்னலுடன் பெரு மழை பெய்யும்போது, மின்சாதனப் பொருள்களைப் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும்.

மாமியார் - மருமகள்
மாமியார் - மருமகள்

பாதுகாப்புடன்தான் மின்சாரத்தை பயன்படுத்த வேண்டும் என்று தொடர்ந்து பலரும் வலியுறுத்திவருகின்றனர். இந்த நிலையில், கிராமப்புறங்களில் இது போன்ற இறப்புகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இடி, மின்னல் மழையால் அறுந்துபோகும் மின்கம்பிகளை உடனே கண்காணித்து, அவற்ற்றை மின்சார வாரியம் சரிசெய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கைவைக்கின்றனர்.

அடுத்த கட்டுரைக்கு