Published:Updated:

பாய்லர் வெடிப்பு; 4 ஆக அதிகரித்த உயிரிழப்பு - அதிர்ச்சி கொடுத்த நெய்வேலி நிலக்கரி நிறுவன தீ விபத்து

நெய்வேலி அனல்மின் நிலையம்
நெய்வேலி அனல்மின் நிலையம்

நெய்வேலி அனல்மின் நிலையத்தில் பாய்லர் வெடித்ததால் ஏற்பட்ட தீ விபத்தில் காயமடைந்த தொழிலாளர்களின் உயிரிழப்பு எண்ணிக்கை 4 ஆக உயர்ந்திருக்கிறது.

கடலூர் மாவட்டம், நெய்வேலியில் மத்திய அரசின் நெய்வேலி நிலக்கரி நிறுவனம் இயங்கி வருகின்றது. இங்கு அனல்மின் நிலையம் 1 மற்றும் விரிவாக்கம், அனல்மின் நிலையம் 2 மற்றும் விரிவாக்கம், என்.என்.டி.பி (Neyveli New Thermal Power Project) என 5 அனல்மின் நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த 5 அனல்மின் நிலையங்களிலும் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இங்கிருக்கும் பாய்லர்களுக்கு நிலக்கரிகள் ஏற்றப்பட்டு மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வரும் பணி, ஷிப்ட் முறையில் நடைபெறும்.

நெய்வேலி தீ விபத்து
நெய்வேலி தீ விபத்து

அதன்படி கடந்த 7-ம் தேதி 2-வது அனல்மின் நிலையத்தில் இருக்கும் பாய்லருக்கு நிலக்கரியை அனுப்பும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டு வந்தனர். 1,470 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்யும் இந்த யூனிட்டில் மட்டும் சுமார் 3,000 தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். அன்றைய தினம் மாலை 4.30 மணிக்கு 6-வது யூனிட்டில் இருக்கும் பாய்லரில் இருந்து பெரிய தீப்பிழம்பு ஏற்பட்ட சில நிமிடங்களில், பயங்கர சத்தத்துடன் அது வெடித்திருக்கிறது.

தொடர்ந்து அங்கிருந்த தொழிலாளர்கள் அலறியடித்து ஓடினர். 6-வது யூனிட்டில் ஏற்பட்ட தீ 7-வது யூனிட்டில் இருக்கும் பாய்லரையும் நெருங்கியது. ஆனால், தீயணைப்பு வீரர்களின் துரித நடவடிக்கையால் அந்தப் பேராபத்து தடுக்கப்பட்டது.

உயிரிழந்த சர்புதீன்
உயிரிழந்த சர்புதீன்

அந்த விபத்தில் நிரந்தரத் தொழிலாளிகளான சர்புதீன் மற்றும் பாவாடை, ஒப்பந்தத் தொழிலாளிகளான சண்முகம், பாலமுருகன், சொஸைட்டி தொழிலாளர்களான அன்புராஜ், ஜெயசங்கர், மணிகண்டன், ரஞ்சித்குமார் உள்ளிட்ட 8 தொழிலாளர்கள் படுகாயமடைந்தனர்.

உயிரிழந்த தொழிலாளி சண்முகம்
உயிரிழந்த தொழிலாளி சண்முகம்

அவர்கள் அனைவருக்கும் முதலில் நெய்வேலி பொது மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேல்சிகிச்சைக்காக, திருச்சி காவேரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

உயிரிழந்த பாவாடை
உயிரிழந்த பாவாடை

ஆனால் 80% தீக்காயங்கள் ஏற்பட்டதால் கடந்த 8-ம் தேதி தொழிலாளி சர்புதீனும், 10-ம் தேதி தொழிலாளி சண்முகமும் உயிரிழந்தனர்.

அதேபோல நேற்று காலை நெய்வேலி தெற்கிருப்புப் பகுதியைச் சேர்ந்த பாவாடை என்பவர் உயிரிழந்தார். அதேபோல இன்று காலை முதனை கிராமத்தைச் சேர்ந்த தொழிலாளி பாலமுருகன் என்பவரும் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார்.

உயிரிழந்த பாலமுருகன்
உயிரிழந்த பாலமுருகன்

இதன்மூலம் நெய்வேலி விபத்தின் உயிரிழப்பு எண்ணிக்கை 4-ஆக அதிகரித்திருக்கிறது. நீண்ட காலமாக அனல்மின் நிலையங்களின் செயல்பாடுகளை படிப்படியாகக் குறைத்து, அதை நிரந்தரமாக மூடாததுதான் விபத்துக்கான காரணம் என்று குற்றம் சுமத்துகின்றன தொழிலாளர் சங்கங்கள்.

`வெடித்துச் சிதறிய பாய்லர்; தீயில் சிக்கிய 8 தொழிலாளர்கள்!’- பதறவைத்த நெய்வேலி தீ விபத்து
அடுத்த கட்டுரைக்கு