Published:Updated:

மகாராஷ்டிரா அரசு மருத்துவமனையில் அதிகாலையில் தீ விபத்து - 10 குழந்தைகள் பலி!

தீ விபத்தில் மீட்கப்பட்ட குழந்தையுடன் பெற்றோர்
தீ விபத்தில் மீட்கப்பட்ட குழந்தையுடன் பெற்றோர்

மகாராஷ்டிராவில் அரசு பொது மருத்துவமனையில் அதிகாலையில் ஏற்பட்ட தீவிபத்தில் பச்சிளங்குழந்தைகள் 10 பேர் பரிதாபாக உயிரிழந்தனர்.

மகாராஷ்டிராவின் பண்டாரா மாவட்டத்தில், அரசு மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் பச்சிளங்குழந்தைகள் 10 பேர் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. தீயணைப்புத்துறையினர் விரைந்து வந்து மீட்புப்பணியில் ஈடுபட்டனர். தீ விபத்தில் சிக்கிக்கொண்ட குழந்தைகள் மீட்கப்பட்டனர். புகை மண்டலம் அதிகமாக இருந்ததால், மீட்புப் பணியை விரைந்து மேற்கொள்வதில் தாமதம் ஏற்பட்டது. ஏழு குழந்தைகள் உயிருடன் மீட்கப்பட்டனர். 10 குழந்தைகள் தீ விபத்தால் ஏற்பட்ட புகை மண்டலம் மற்றும் தீயில் கருகி உயிரிழந்தனர். தீ விபத்துக்கான காரணம் தெரியவில்லை. மின்கசிவு காரணமாக இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது.

தீ விபத்து ஏற்பட்ட மருத்துவமனை
தீ விபத்து ஏற்பட்ட மருத்துவமனை

அதிகாலை 2 மணி என்பதால் சிலர் தூக்கத்தில் இருந்தனர். இதனால் தீ விபத்தை உடனே கவனிக்கவில்லை. உடனே கவனித்திருந்தால் அதிகப்படியான குழந்தைகளைக் காப்பாற்றியிருக்க முடியும் என்கிறார்கள். இது குறித்து பண்டாரா மாவட்ட ஆட்சி தலைவர் சந்தீப் கதம் கூறுகையில், ``அதிகாலை 1:30 மணிக்கு, பிறந்து சில மாதங்களேயாகி சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டிருந்த குழந்தைகள் பிரிவில் தீப் பிடித்தது. பணியில் இருந்த செவிலியர்கள் இரண்டு பேர் தீயணைப்புத்துறைக்கு தகவல் கொடுத்துவிட்டு குழந்தைகளை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். 7 குழந்தைகளை மீட்டனர் . தீ விபத்து நடந்த பகுதியிலிருந்து தொடர்ச்சியாக சிலிண்டர் மற்றும் உபகரணங்கள் வெடித்துக்கொண்டிருந்ததால் ஊழியர்களால் அனைவரையும் காப்பாற்ற முடியவில்லை'' என்று தெரிவித்தார்.

கன்னியாகுமரி கடற்கரையில் பயங்கர தீ விபத்து - 69 கடைகள் எரிந்து நாசம்!

இந்தச் சம்பவம் குறித்துக் கேள்விப்பட்ட முதல்வர் உத்தவ் தாக்கரே இது குறித்து மாநில சுகாதாரத்துறை அமைச்சர் ராஜேஷ் தோபேயுடன் பேசினார். இந்தச் சம்பவம் குறித்து விசாரணைக்கு உத்தவ் தாக்கரே உத்தரவிட்டிருக்கிறார். அமைச்சர் ராஜேஷ்தோபே உடனே சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றார். காலை 5 மணிக்கு தீவிபத்து ஏற்பட்ட மருத்துவமனையைப் பார்வையிட்டார். அதோடு இறந்த குழந்தைகளின் பெற்றோருக்கு தலா 5 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என்று தெரிவித்திருக்கிறார்.

தீ விபத்து
தீ விபத்து
ANI

இந்தத் தீ விபத்துச் சம்பவம் குறித்து பிரதமர் நரேந்திர மோடி மிகவும் அதிர்ச்சி தெரிவித்திருப்பதோடு, `இது நெஞ்சைப் பிளக்கும் சம்பவமாக இருக்கிறது’ என்று தெரிவித்திருக்கிறார். இது தவிர உள்துறை அமைச்சர் அமித் ஷா, துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி உட்பட பலரும் இரங்கல் தெரிவித்திருக்கிறார்கள்.

அடுத்த கட்டுரைக்கு