Published:Updated:

புதுக்கோட்டை: மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்ட மின் பாதை ஆய்வாளர்! - சீரமைப்புப் பணியின்போது சோகம்

கருப்பையா
கருப்பையா

``மின்வாரியத்தில் மின் பாதை பழுது நீக்கும் ஊழியராகப் பணிபுரியும் எல்லாருமே உயிருக்கு ஆபத்தான நிலையிலதான் வேலை பார்த்துக்கிட்டு வர்றோம். தமிழக அரசு மின்வாரிய ஊழியர்களுக்குத் தேவையான பாதுகாப்பு உபகரணங்களைக் கொடுக்கணும்.”

புதுக்கோட்டை மாவட்டத்தில், கடந்த சில தினங்களாகவே அவ்வப்போது பலத்த காற்றுடன் மழை பெய்துவருகிறது. சில நேரங்களில் காற்று அதிகமாக வீசுவதால், காற்றில் மரக்கிளைகள் உடைந்து மின்கம்பிகளில் விழுகின்றன. இதனால், மின்சாரம் துண்டிக்கப்பட்டுவிடுகிறது. மின் பாதைகளில் விழுந்திருந்த மரக்கிளைகள் அகற்றப்பட்ட பிறகே மீண்டும் மின் விநியோகம் வழங்கப்படுகிறது. இந்தநிலையில்தான், பல இடங்களில் மின்வாரியப் பணியாளர்கள் பகல் இரவு பாராமல், தங்களது உயிரைப் பணயம்வைத்து மின் பாதைகளைச் சீரமைத்துவருகின்றனர். அதுபோலத்தான் புதுக்கோட்டை மாவட்டம் பொற்பனைக்கோட்டையைச் சேர்ந்த மின் பாதை ஆய்வாளர் கருப்பையா, வல்லத்திராக்கோட்டை அருகே கத்தக்குறிச்சியில் பலத்த காற்றால் விழுந்த மரக்கிளைகளை அகற்றும் பணியில் ஈடுபட்டிருந்தார்.

உயிரைப் பணயம் வைக்கும் மின்வாரிய ஊழியர்களின் பணி
உயிரைப் பணயம் வைக்கும் மின்வாரிய ஊழியர்களின் பணி
file Photo

அப்போது, எதிர்பாராதவிதமாக உயர் அழுத்த மின்கம்பியிலிருந்து மின்சாரம் தாக்கி கருப்பையா தூக்கி அடிக்கப்பட்டார். உயிருக்கு ஆபத்தான நிலையில் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுவந்தது. இந்த நிலையில், சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார். மின் ஊழியர் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் அந்தப் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சக மின்வாரிய ஊழியர்களிடம் கேட்டபோது, ``கருப்பையா டியூட்டின்னு வந்துட்டா, ரொம்ப சின்சியராக இருப்பாரு. வேலையில் இரவு பகல்னு பார்க்க மாட்டாரு. எந்த நேரமா இருந்தாலும் அந்த வேலையை முடிச்சுட்டுத்தான் வருவாரு. இன்னைக்கு மின்சாரம் தாக்கியே அவர் உயிரிழக்க வேண்டிய நிலை ஏற்பட்டிருச்சு. மின்வாரியத்தில் மின் பாதை பழுது நீக்கும் ஊழியராகப் பணிபுரியும் எல்லாருமே உயிருக்கு ஆபத்தான நிலையிலதான் பணிபுரிஞ்சிக்கிட்டு வர்றோம். கஜா புயல் நேரத்துல நமக்கு உதவுறதுக்காகப் பக்கத்து மாநிலமான கேரளாவுல இருந்தெல்லாம் மின்வாரிய ஊழியர்கள் வந்திருந்தாங்க.

கருப்பையா
கருப்பையா

அவங்க எல்லாருமே உயிரைப் பாதுகாக்கும் வகையிலான பாதுகாப்பு உபகரணங்களெல்லாம்வெச்சிருந்தாங்க. அதைப் பயன்படுத்திக்கிட்டுத்தான் வேலையே பார்த்தாங்க. தமிழக அரசு மின்வாரிய ஊழியர்களுக்குத் தேவையான பாதுகாப்பு உபகரணங்களைக் கொடுக்கணும். இறந்த கருப்பையாவின் குடும்பத்துக்கு நிதி உதவி செய்வதோடு, அவரின் குடும்பத்தினரில் யாராவது ஒருவருக்கு அரசு வேலை கொடுக்க வேண்டும்" என்றனர்.

அடுத்த கட்டுரைக்கு